பதிவு செய்த நாள்
09
ஜன
2017
11:01
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் பத்மாஸனித்தாயார் கோயிலில் டிச., 29 முதல் பகல் பத்து உற்சவம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாள் சயன கோலத்திலும், பகல் 1:00 மணிக்கு விஸ்வரூப தரிசனத்திலும் அருள்பாலித்தார். இரவு 7:15 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகந்நாதப்பெருமாள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா வந்தனர். ஆழ்வார்கள் எதிர்சேவை நடந்தது. பின்னர், 7:35 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஏகாதசி மண்டபம் வழியாக பெருமாள் மூன்று முறை வலம் வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர்.
* பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கடந்த பத்து நாட்களாக பகல் பத்து உற்சவம் நடந்தது. ஏகாதசி மண்டபத்தில் பெருமாள் தினமும் எழுந்தருளினார். பத்தாம் நாளான நேற்றுமுன் தினம் மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அலங்காரத்தில் வீதி உலா வந்தார். மாலை 6 மணிக்கு நடை சாத்தப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின், பெருமாள் வைர முடி தரித்து ராஜ அலங்காரத்துடன் ஏகாந்த சேவையில், பரமபதவாசல் வழியாக 5:00 மணிக்கு வந்தார். கோயில் பிரகாரங்களில் வலம் வந்த பெருமாள், ஆண்டாள் சந்நதியில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ஏகாதசி மண்டபத்தில் காலை 6 :00 மணிக்கு எழுந்தருளிய பெருமாளுக்கு, காலை 11 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இராப்பத்து உற்சவம் துவங்கியது. துவாதசி திருநாளான இன்று(ஜன.,9) காலை பெருமாள் கருடவாகனத்தில் வீதியுலா வருகிறார்.
* பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில், கருட வாகனத்தில் காட்சியளித்த ராமர், கோயிலின் வடக்கேயுள்ள சொர்க்க வாசல் வழியாக காலை 6.15 மணிக்கு அருள்பாலித்தார்.
* எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் ஏகாந்த சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சொர்க்கவாசல் வழியாக காலை 5:15 மணிக்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.