பதிவு செய்த நாள்
09
ஜன
2017
11:01
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவிந்தா கோஷத்துடன் பரமபத வாசல் திறப்பு நடந்தது. திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோயிலில் காலை 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. நம்மாழ்வார் திருவாய் மொழி, ஆழ்வார்கள் வீதி எழுந்தருளலில் கருட வாகன வீதியுலா இரவு 8:00 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். இன்று காலை ஏகாந்த சேவை நடக்க உள்ளது.
* தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் காலை 5:00 மணிக்கு திருக்கல்யாண சவுந்திரராஜவள்ளித் தாயாருடன் சுவாமி எழுந்தருளல் நடந்தது. காலை 5:50 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர்.
* நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர்.
பழநி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழநி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழநி மேற்குரதவீதியிலுள்ள லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். அதன்பின் காலை 9.30 மணிக்கு கருடவாகனத்தில் நான்குரதவீதிகளில் லட்சுமிநாரயணப்பெருமாள் உலா வந்தார். இதைப்போலவே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள்கோயில் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கண்ணாடிபெருமாள் கோயில், வேணுகோபால சுவாமிகோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில், சிறப்பு பூஜைகளுடன் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. சின்னாளபட்டி மேட்டுப்பட்டியில் வெங்கடேசப்பெருமாள் கோயிலில், பெருமாள் ராஜ அலங்காரமும், மகா லட்சுமிக்கு சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. உற்சவர், பள்ளி கொண்ட பெருமாள் அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது. மகா தீபாராதனையைத்தொடர்ந்து, கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
* அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு திருப்பதி அலங்காரமும், உற்சவர் ராமருக்கு ரங்கநாதப்பெருமாள் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. துளசி, வெற்றிலை மாலை அபிஷேகத்துடன் ஏகாதசி சிறப்பு பூஜைகள் நடந்தது.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், முதன்முதலாக பெருமாள் கருட சேவையில் எழுந்தருளினார். ராமானுஜர் சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப்பின், சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. விழாவை முன்னிட்டு வீர ஆஞ்சநேயர், ஹயக்ரீவர், செங்கமலவள்ளி அம்மன், கருடாழ்வார், அனுக்ரக பைரவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல்: கொடைக்கானல் பூதேவி முக்கோடி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
கோயிலில் நேற்று காலை 5:01 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சீனிவாச பெருமாளை திரளான பக்தர்கள் வணங்கி சென்றனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்த புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். காத்திருந்த பக்தர்கள் கோஷமிட்டு வணங்கினர். இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார். காலை 7:30 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார்.
எரியோடு: எரியோடு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
தாண்டிக்குடி: தாண்டிக்குடி ராமர் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. சவுமியநாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன் நடந்தது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி நகர் வலம் வருதல் நடந்தது. மார்கழி உற்சவ விழாவில் பக்தர்கள் மஞ்சள் நீராடினர். ஏராளமான பொதுமக்கள் அதிகாலையில் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தனர். பண்ணைக்காடு ராமசுவாமி, வெங்கடாசலபதி கோயில், பூலத்துார், கே.சி.பட்டி, கும்பறையூர் ராமர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று காலை கோயில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. வாசல் வழியாக உற்சவ மூர்த்தி சேஷ வாகனத்தில் கோயில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வலம் வந்தார். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்ட்டது. மூலவர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 50 பேர் கொண்ட பஜனை குழுவினர் திருப்பாவை பாடல் பாடினர். விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.