பதிவு செய்த நாள்
09
ஜன
2017
12:01
பொள்ளாச்சி n பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி திருவிழா கோலாகலமாக நடந்தது. சொர்க்க வாசல் திறப்பில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, நேற்று சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடந்தது. நேற்றுமுன்தினம் முதல், இன்று வரை மூன்று நாட்கள் மூலஸ்தானத்தில் மூலவருக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது. நேற்று காலை, 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறப்பு விழா நடந்தது. சொர்க்கவாசலில், பக்தர்கள் வழங்கிய காய், கனிகள் மற்றும் திரவியப் பொருட்கள் கட்டப்பட்டிருந்தன. கோவிலின் வடக்கு வாசல் வழியே, பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். டி.கோட்டாம்பட்டி வரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:00 மணி முதல், 5:30 மணிக்கும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா பக்தர்கள் திரள, கோலாகலமாக நடந்தது. பெருமாள் மற்றும் தேவியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.