பதிவு செய்த நாள்
15
அக்
2011
11:10
தூத்துக்குடி : திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் ஏழு நாட்கள் தினமும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். சூரசம்ஹாரத்தன்று 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தெரிவித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 26ம் தேதி முதல் நவம்பர் முதல் தேதி வரை கந்துசஷ்டி திருவிழா சிறப்பாக நடக்கிறது. விழாவில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஆஷீஷ்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது; கந்தசஷ்டி விழாவில் தினசரி 5 லட்சம் பக்தர்களும், 31ம் தேதி சூரசம்ஹார விழா அன்று 15 லட்சம் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும், சூரசம்ஹாரத்தன்று 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துகழகம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கடலில் குளிக்கும் இடத்தில் பாதுகாப்பிற்காக தீயணைப்பு மற்றும் மீன்வளத்துறையினரும் உரிய உயிர்காக்கும் படகுகளுடன் நீச்சல் வீரர்களையும் கடலில் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளுடன் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் பொது சுகாதார துறையினரால் செயல்படுத்தப்படும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்திட கூடுதலாக போலீசார் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.கோயில் வளாகத்தில் சேரும் குப்பைகளை கோயில் நிர்வாகத்தின் மூலம் தெருக்களில் சேரும் குப்பைகளை டவுன் பஞ்சாயத்து மூலம் உடனுக்குடன் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் மூலம் 131 நிரந்தர கழிப்பிடம், 23 தற்காலிக கழிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்குள் செல்லவும், சூரனை வதம் செய்யும் காட்சியை காணவும் பக்தர்கள் வரிசை முறையில் செல்ல தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.போலீஸ் எஸ்.பி நரேந்திரநாயர், டி.ஆர்.ஓ அமிர்தஜோதி, திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்செல்வி, ஆர்.டி.ஓ பொற்கொடி, பி.ஆர்.ஓ சுரேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் உமா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கெங்காதரன், உதவி பொறியாளர் ரகுநாதன், வட்டார போக்குவரத்து அதிகாரி தங்கவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகரன், திருச்செந்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.