பதிவு செய்த நாள்
11
ஜன
2017
11:01
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று மரகத நடராஜருக்கு சந்தனம் படி களையப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற சிவாலயங்களில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில். இங்கு மார்கழியில் திருவாதிரை திருவிழா ஜன.2ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி இன்று (11ம் தேதி) வரை தொடர்ந்து 10 நாட்கள்
நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பச்சை மரகத நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதற்காக நேற்று காலை நடராஜர் திருமேனியில் பழைய சந்தனம் படிகளையப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சந்தனாதி தைலம் பூசப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இவர்கள் பலமணி நேரம்வரை வரிசையில் காத்து நின்று நடராஜரை தரிசித்தனர். இரவு ஆருத்ரா மஹா அபிஷேகம், கூத்த பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்று அதிகாலை நடராஜர் திருமேனியில் புதிய சந்தனம் பூசப்பட்டு சர்வ அலங்காரமும், ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் அழகிய கூத்தர் செப்பறை கோயிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில், தாமிரபரணி நதிக்கரையின் இடதுகரையில் அமைந்துள்ளது அழகிய கூத்தர் செப்பறை ஆலயம். இங்கு செப்புஅறைகளால் வேயப்பட்ட தாமிரசபை அமைந்துள் ளதால்,செப்பறை கோயில் என அழைக்கப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 11:30 மணிக்கு அழகிய கூத்தர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பகலில் தேரோட்டம் நடந்தது. இன்று 11ம் தேதி, இரவு 2:00 மணிக்கு மகா அபிஷேகம், அதிகாலை 5:30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், மதியம் 2:00 மணிக்கு நடன தீபாராதனை, மதியம் 3 மணிக்கு அழகிய கூத்தர் வீதி உலா, இரவு 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.