பதிவு செய்த நாள்
12
ஜன
2017
10:01
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவிலை அழிவிலிருந்து பாதுகாக்க, சுற்றுலாப் பயணிகள், தொலைவிலிருந்தே காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள, தொல்லியல் துறை முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. பல்லவ சிற்பக்கலை இடமாக திகழும் மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய சுற்றுலா தலமாக புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பாரம்பரிய சின்னங்களை, ஐக்கிய நாடுகள் சபையின் கலாசாரக்குழு, சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னமாக அங்கீகரித்துள்ளது. கடற்கரையில் அமைந்துள்ள அழகிய கற்கோவில், முதலில் அங்கீகாரம் பெற்ற சிறப்பிற்குரியது.
குவியும் பயணிகள்: கி.பி., 7ம் நுாற்றாண்டில், சைவ, வைணவ ஆகிய வழிபாட்டிற்காக, தனித்தனி சன்னிதிகளுடன், பாறை வெட்டு கற்களால், இக்கோவில் அமைக்கப்பட்டது. பல நுாற்றாண்டுகளாக வழிபாடு வழக்கொழிந்து, சுற்றுலாப் புகழ்பெற்று, அதன் அழகியலை ரசிக்க, பயணிகள் குவிகின்றனர். இந்நிலையில், கோவிலில், கடற்காற்றின் உப்பு, மாசு என படிந்து, சிற்பங்கள், சுவற்றின் கலையம்சங்கள் ஆகியவை அரிக்கப்பட்டும், துளைகள் ஏற்பட்டும், விளிம்பு மழுங்கியும், உருக்குலைந்து படிப்படியாக சீரழிகிறது. இந்திய தொல்லியல் துறை, கோவிலை பராமரித்து பாதுகாத்து வரும் நிலையில், அத்துறை வேதியியல் பிரிவினர், கோவிலில் படிந்துள்ள உப்பு உள்ளிட்ட அழுக்குகளை, ரசாயனக்கலவை பூச்சு மூலம் ஆண்டுதோறும் அகற்றுகின்றனர். இது ஒருபுறமிருக்க, உப்பால் தேய்கின்ற கோவிலில், சுற்றுலாப்பயணிகளும், கைகளால் உரசி, மேலும் தேய்கிறது. சன்னிதிகளின் குறுகிய பகுதியில் குவியும் பயணிகளின் மூச்சுக்காற்றாலும் பாதிக்கப்படலாம் என, கருதப்படுகிறது. எனவே, சன்னிதி பகுதியில், மனித மூச்சுக்காற்றால் ஏற்படும் விளைவை ஆராயவும், துளை, தேய்மானம் ஆகியவற்றை அடைத்து சீரமைக்கவும், இத்துறை முடிவெடுத்துள்ளது.
ஆராய முடிவு: முதற்கட்டமாக, சன்னிதி சுற்றுப் பகுதியில், மனித மூச்சுக்காற்று படிவதை தவிர்க்க, பயணிகள் ட்புகாதவாறு, குறுகிய பாதை பகுதி, தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் மாதிரி உருவம் செய்வோர், பழமை மாறாமல், துளை அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகளை சீரமைத்து, தொடர்ந்து ஆராயப்படும். பயணிகளால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, கோவிலிருந்து, சற்றுத் தொலைவிலிருந்தே காணும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அத்துறையினர் கூறும் போது, கோவில் அழிவை தடுக்கவும், பழமை மாறாமல் சீரமைக்கவும், ஆய்விற்காக, சன்னிதி பகுதியை மூடியுள்ளோம்; குறிப்பிட்ட தொலைவிலிருந்தே, கோவிலை காண, பயணிகளை அனுமதிக்கவும், ஆலோசிக்கப்படுகிறது என்றனர். - நமது நிருபர் -