பதிவு செய்த நாள்
12
ஜன
2017
10:01
இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள். அவரின் தேச பக்திக்குள்ள ஓர் ஈடு இணையற்ற தனி சிறப்பு, அவருடைய ஆன்மிக அனுபூதியில் தான், மகத்தான தவ வலிமையில் தான் அடங்கியிருந்தது. அதனால் தான் அவரால் சமயம், சமுதாய துறைகளில் குறிப்பிடத்தக்க நிலையான ஒரு மறுமலர்ச்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது. இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத்தக்கவர்களாக நாம் பலரை சொல்ல முடியும். ஆனால் அவைஇரண்டிலும் குறிப்பிடத்தக்கவர்களாக மகாத்மா காந்திஜியை போல ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அவர்களில் விவேகானந்தருக்குதான் முதலிடம் உண்டு.
ஆன்மிக உணர்வு: அவரது தேச பக்தி முதலான கருத்துக்களுக்கு ஆன்மிக உணர்வுகளே ஆதார சுருதியாக அமைந்திருந்தன. சிலர்அவரது தேசபக்தி, கல்வி, பாமரர் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம் போன்ற கருத்துக்களை எடுத்து பாராட்டுவது உண்டு. ஒரு அவதார புருஷர் என கூறுமளவுக்குரிய வாழ்க்கையாக அவரது வாழ்க்கை அமைந்திருந்தது. தற்கால கல்வி முறையில் அறிவு பெறப்படுகிறதே தவிர, ஒழுக்கம் பெறப்படுவதில்லை. தற்காலிக கல்வி முறையில் திறமையும், ஒழுக்கம் பெறத்தக்க அம்சங்களையும் சேர்க்க வேண்டும். வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்ளக் கூடிய திறமையையும், துணிவை யும் இறைவனை உணரவும், உதவும் வகையில் கல்வி அமைய வேண்டும் என விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜயோக சொற்பொழிவுகள்: விவேகானந்தர் அமரத்துவம் வாய்ந்த அரிய பல சொற்பொழிவு களை உலக மக்களுக்கு வழங்கி சென்றுள்ளார். அவர் அமெரிக்கா வில் தங்கி வேதாந்த பிரசார பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் இந்தியாவிற்கே உரிய ஆன்மிக ஞானத்தை உலகமக்களுக்கு வழங்கினார். இந்திய யோகிகள் பழங்காலத்திலேயே பல்வேறு ஆன்மிக சாதனை தத்துவங்களை பயின்று, பிரசாரம் செய்திருக்கின்றனர். அந்த தத்துவங்களை தற்கால மக்கள் எளிதில் புரிந்து பயன்பெறும் வகையில் சுருக்கமாகவும், தெளிவாகவும் விஞ்ஞான ரீதியாகவும் விவேகானந்தர் தன் எழுத்துக்கள், சொற்பொழிவுகள் மூலம் விளக்கியிருக்கிறார். அவரது ஆன்மிக இலக்கியம் என்ற பொக்கிஷத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ராஜயோகம் என்ற நுால் விளங்குகிறது.
பதஞ்சலி யோக சூத்திரங்கள்: ராஜயோகம் பற்றிய அவரது வாக்கிலிருந்து வெளிவந்த அருள்வாக்குகளை அவர் சொல்ல சொல்ல எழுதும் பாக்கியம் மேலை நாட்டு சிஷ்யை எஸ்.இ.வால்டோ (சகோதரி ஹரிதாஸி)க்கு கிடைத்தது. அவர், இந்த நுாலின் கருத்தை எனக்கு சுவாமிஜி சொல்ல சொல்ல எழுத செய்தார். அப்போது அவரை பார்ப்பதே தெய்வீக உணர்ச்சியை தட்டி எழுப்பும். பதஞ்சலியின் யோக சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்த போது அவர் தியான நிலையில் மூழ்கி விடுவார். நீண்ட நேரத்திற்கு பின் மவுனம் கலைத்து பேசுவார், என குறிப்பிட்டு உள்ளார்.
மதுரையில் விவேகானந்தர்: அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அவர் வேதாந்த பிரசாரம் செய்து விட்டு 1897 ஜன., 26ம் தேதி கப்பலில் சீடர்களுடன் பாம்பன் வந்தார். பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரையில் அவர் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். பிப்., 2ம் தேதி காலை 10:30 மணிக்கு தான் அவர் மதுரை வந்தார். மக்கள் சிறப்பான வரவேற்பளித்துள்ளனர். மதுரையிலிருந்த, ராமநாதபுரம் மன்னரின் மாளிகையில் அவர் தங்கினார்.
அவரை சந்தித்த பண்டிதர்கள், முக்தி, மாயை, வேதம் சாசுவதமானது தானா என்றனர். அவர்களது கேள்விகளுக்கு தக்க பதில்களை விவேகானந்தர் அளித்தார். பின் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததுடன், ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் கவனித்தார். அவருக்கு அன்று காண்பிக்கப்பட்ட ஆபரணங்களில் கஜமுத்து என்பதும் ஒன்று. மிக மிக அரிதாக யானையின் தலைப்பகுதியிலிருந்து கிடைப்பது கஜமுத்து. லட்சத்தில் ஒரு யானையிடமிருந்து தான் இது கிடைக்கும்.
கவனத்தை ஈர்த்த சிற்பங்கள்: வெளிப்பிரகாரங்களில் அமைந்து இருந்த சிற்பங்கள் அவரது கவனத்தை ஈர்த்தன. சிற்பக்கலை மூலமாக கடவுளை கண்டதமிழக கலைஞர்களின் கைவண்ணம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. அன்று மாலை அவர் 2000 பேர் திரண்டிருந்த கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர் சுவாமி சிவானந்தர். அவர் விவேகானந்தரை வரவேற்க கோல்கட்டாவிலிருந்து வந்திருந்தார். அன்றிரவே அவர் ரயில் மூலம் கும்பகோணம் சென்றார். ஒவ்வொருவருக்கும் பங்கு சொற்பொழிவில் அவர் குறிப்பிட்ட சில கருத்துக்கள்:
*மிகப் பெரிய வெற்றிகளாலோ, வாணிப ஆதிக்கத்தாலோ உலகின் பல்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு, மனித குலம் ஒன்றுபடும் போது ஒவ்வொரு நாடும் தன் பங்கை செலுத்த வேண்டியிருக்கிறது. அரசியல்,சமுதாயம், ஆன்மிகம் என ஒவ்வொரு நாட்டிற்கும் உலகில் ஒரு குறிப்பிட்ட பங்குஉள்ளது. ஒட்டுமொத்த மனித அறிவிற்கும், இந்தியாவின் பங்கு ஆன்மிகமும் தத்துவமும் ஆகும். இதை பாரசீக சாம்ராஜ்யம் தோன்றுவதற்கு மிக நீண்ட காலத்திற்கும் முன்பே ஒரு முறை இந்தியா உலகிற்கு வழங்கியது. இரண்டாவது முறையாக பாரசீக சாம்ராஜ்ய காலத்தின் போது வழங்கியது. மூன்றாவதாக கிரேக்கப் பேரரசு உச்ச நிலையில் இருந்த போது வழங்கியது. நான்காவது முறையாக ஆங்கிலேயர்கள் உச்ச நிலையில் இருக்கும் இக்காலத்தில் மீண்டும் ஒரு முறை அந்த செயல் நிறைவேறப் போகிறது.
*மேலை நாட்டு போக வாழ்க்கை நாகரிகத்தை நம்மால் தடுக்க முடியாததை போலவே, இந்தியாவின் ஆன்மிக வெள்ளத்தையும் மேலைநாட்டு மக்களால் தடுத்து நிறுத்த முடியாது.
*சமுதாயம் என்றாவது நிறைநிலையை அடையுமா என்பது சந்தேகம் தான். அது வருகிறதோ இல்லையோ ஆனால் நாம் ஒவ்வொருவரும், அது நாளைக்கே வரப்போகிறது, அது நம் உழைப்பால்மட்டுமே வர முடியும், என்ற எண்ணத்து டன் உழைக்க வேண்டும்.
எல்லோரும் தங்கள் பங்கை செய்து விட்டார்கள். உலகம் நிறைநிலையை அடைவதற்கு எஞ்சியிருப்பது நான் செய்ய வேண்டிய வேலை மட்டுமே, என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வேண்டும். நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு இது.பரந்த இதயம் தேவை
*கடலைப் போன்று மிக மிக ஆழ்ந்தும், வானத்தை போன்று பரந்தும் இருக்கும் இதயமே நமக்கு வேண்டும்.
*உலகிலுள்ள வேறு எந்த நாட்டினரை விடவும் நாம் முற்போக்குடன் இருப்போம்; அதே நேரத்தில் நாம் நம் பரம்பரை பண்பில் நம்பிக்கையுடனும், பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம்.
*நீங்கள், நான் மற்றும் இங்குள்ள ஒவ்வொருவருமே ரிஷிகளாகவதற்காக அழைக்கப்பட இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு நம்பிக்கை வேண்டும். நாம் அனைவரும் உலகத்தையே அசைப்பவர்களாக மாறி ஆக வேண்டும். ஏனென்றால் எல்லாம் நம்மிடம் இருக்கிறது. ஆன்மிகம் என்பதை நாம் நேருக்கு நேராக கண்டாக வேண்டும்; அனுபவிக்க வேண்டும்.
*இங்குள்ள நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கதி மோட்சத்திற்காகவும், மற்றவர்களின் கதி மோட்சத்திற்காகவும் ரிஷியின் நிலையை அடைய இறைவன் அருள்புரிவார்.இவ்வாறு அமைந்திருந்தது அவரது சொற்பொழிவு. அவை இன்றைக்கும் பொருத்தமாக இருப்பது தான்
சிறப்பாகும்.
சுவாமி கமலாத்மானந்தர்
தலைவர், ராமகிருஷ்ண மடம்
மதுரை. 94874 93525
விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு அறிய கிளிக் செய்யவும்