மகரவிளக்குக்கு முன்னோடியாக எருமேலியில் பேட்டைத்துள்ளல் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2017 10:01
சபரிமலை: மகரவிளக்குக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நிறைவு பெற்றது. இன்று பந்தளத்தில் இருந்து திருவாபரணம் புறப்படுகிறது. சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சபரிமலை மற்றும் பம்பையில் மகரவிளக்கு நாளில் ஐந்தாயிரம் போலீசாரும், கோட்டயம், பத்தணந்திட்டை, இடுக்கி மாவட்டங்களில் தேவைக்கேற்ப போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
பேட்டைதுள்ளல் நிறைவு: கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் எருமேலியில் பேட்டைத்துள்ளல் நடைபெற்றாலும் மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டைத்துள்ளல் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று மதியம் 12.45 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் தர்ம சாஸ்தா கோயிலில் இருந்து அம்பலப்புழா பக்தர்கள் யானைகளுடன் பேட்டைத்துள்ளி வந்தனர்.மூன்று யானைகள் அணிவகுக்க பேட்டை துள்ளிய இவர்கள் பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்த பின்னர் பெருவழிப்பாதை வழியாக சபரிமலை சென்றனர். இதுபோல ஆலங்காடு பக்தர்கள் மதியம் 3:00 மணிக்கு வானில் பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் பேட்டை துள்ளினர். இந்த இரண்டு குழுவினரின் பேட்டைத் துள்ளலுடன் பேட்டைதுள்ளல் நிறைவு பெற்று விட்டது.
திருவாபரணம் இன்று புறப்பாடு: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து புறப்படுகிறது. அதிகாலை 4:30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும் இந்த திருவாபரணங்கள் மதியம் 12:00 மணிக்கு உச்சபூஜைக்கு பின்னர் பேடகங்களில் அடைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் புறப்படுகிறது. இந்த திருவாபரணபவனி 14-ம் தேதி மாலையில் சன்னிதானம் வந்தடையும். மகரவிளக்குக்கு முன்னோடியான பிரசாத சுத்தி பூஜைகள் இன்று தீபாராதனைக்கு பின்னர் நடைபெறுகிறது.