சபரிமலை: மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் அடங்கிய பவனி பந்தளத்திலிருந்து புறப்பட்டது.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜன.14ல் மாலை மகரவிளக்கு பெருவிழாவும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மகரவிளக்கு நாளில் பந்தளம் அரண்மனையில் இருந்து கொடுக்கப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனின் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்ததாகவும், சபரிமலை சென்ற பின்னர் ஐயப்பனை பந்தளம் மன்னர் காண சென்றதாகவும், அவ்வாறு செல்லும் போது ஆபரணங்களுடன் சென்றதாகவும், அதை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பந்தளம் மன்னர் பிரதிநிதியுடன் திருவாபரணபவனி சபரிமலை வருவதாகவும் வரலாறு கூறுகிறது.
அதிகாலை ஐந்து மணிக்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் பந்தளம் சாஸ்தா கோயிலில் கொண்டு வரப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பகல் 12.30 மணிக்கு பவனி புறப்படுவதற்கான சடங்குகள் தொட ஙகியது. இந்த நேரத்தில் ஆகாயத்தில் கருடன் வட்டமிட, சரணகோஷங்கள் முழங்க பகல் ஒரு மணிக்கு திருவாபரணபவனி புறப்பட்டது. முக்கிய திருவாபரண பெட்டியை குருசாமி கங்காதரன் தலையில் சுமந்து வந்தார். பூஜா பாத்திரங்கள் அடங்கிய பெட்டியை சிவன்பிள்ளையும், கொடி பெட்டியை பிரதாபசந்திரனும் சுமந்து வந்தனர். மொத்தம் 23 பேர் அடங்கிய குழுவினர் இந்த பெட்டிகளை சுமந்து வருவர்.