பதிவு செய்த நாள்
16
ஜன
2017
12:01
ஆர்.கே.பேட்டை : தை பிறந்ததும் முதல் கடமையாக, நாராயண பெருமாளை வணங்கி அருளை பெற, திரளான பக்தர்கள் அதிகாலையில் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். உழைப்பின் சிறப்பை கொண்டாடும் தொழிலாளர்கள், தை திங்கள் முதல் நாளில், தங்களில் இஷ்ட தெய்வத்தை வணங்கி, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவிலில், பக்தர்களின் வருகையை ஒட்டி, கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்படுகளை செய்திருந்தது. நேற்று முன்தினம், தை பொங்கல் திருநாளில், அதிகாலை 3:00 மணிக்கு, சுவாமிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. 4:30 மணி முதல், காலை 11:00 மணி வரை, சுவாமி தரிசனம் நடந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில், தை பொங்கல் நாளில் முதல் கடமையாக, சுவாமியை தரிசனம் செய்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற கோரி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். துளசி மாலை அலங்காரத்தில், மூலவர் அருள்பாலித்தார். உற்சவர் மற்றும் அஷ்டலட்சுமி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. வங்கனுார், சிங்கசமுத்திரம், சஞ்சீவிபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அம்மையார்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலிலும், சிறப்பு தரிசனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா எழுந்தருளினார்.