பதிவு செய்த நாள்
17
ஜன
2017
01:01
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் பக்தர்கள், பாதயாத்திரையாக காவடி எடுத்துக் கொண்டு முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு ஆறாவது ஆண்டாக சென்றனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் மார்கழி மாதத்தில் இருந்தே காவடி குழுவினர் மாலை அணிந்து, விரத மிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவடி எடுத்துக் கொண்டு முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, மார்கழி மாதம் முதல் காவடிக்குழுவினர் மாலை அணிந்து, விரதமிருந்து தினமும், காலை பொன்மலை வேலாயுதசாமி கோவிலுக்கு சென்று வேலாயுதசாமியை வணங்கி வந்தனர். இக்குழுவினர் மாட்டுப் பொங்கலன்று, பொன்மலை வேலாயுதசாமி கோவிலுக்கு வந்து, வேலாயுதசாமியை வழிபட்டு, கிரிவலம் வந்தனர். பின், ஆறாவது ஆண்டாக பாதயாத்திரையை துவக்கி, சிங்கையன்புதுார் அய்யப்பன் கோவிலுக்கு சென்று அங்கு சாமியை வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கிருந்து சொக்கனுார் வழியாக முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு சென்று, அங்கு பிற்பகல் 12.00 மணிக்கு சென்றனர். அங்கு, முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. முன்னதாக, பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்தனர். முருகன், வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்தார். வழியில் பக்தர்கள் காவடி வைத்து, மேள தாளத்துடன் ஆட்டமும், முருகன் பாடல்களும் பாடப்பட்டது.