பதிவு செய்த நாள்
17
ஜன
2017
01:01
திருப்பூர் : திருப்பூரில் நேற்று நடந்த "இசை அமுதம் நிகழ்ச்சியில், "ஆண்டாள் வைபவம் பரத நாட்டியம் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. திருப்பூர் ஷண்முகானந்த சங்கீத சபா சார்பில், 14ம் ஆண்டு, "இசை அமுதம் - 2017, தாராபுரம் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை, 5:00க்கு, இளம் கலைஞர்கள் வரிசையில், டாக்டர் காயத்ரி குழுவினரின், பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சென்னை திவ்யாஞ்சலி, திவ்ய சேனா குழுவினரின், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளின், மதுர பக்தியை விளக்கும், பரத நாட்டிய நிகழ்ச்சியான, "ஆண்டாள் வைபவம், நாட்டிய நடன நிகழ்ச்சி நடந்தது. அரங்கனால் ஆட்கொள்ளப்பட்ட, திருப்பாவை அருளிய ஆண்டாள், ஆடிப்பூர நட்சத்திரத்தில், பூமாதேவி அம்சமாய், இப்பூவுலகில், அவதரித்தது முதல், அவரது தந்தை பெரியாழ்வார், கண்ணனின் விளையாட்டு, அரக்கர்களை அகற்றிய வீரம் என, எம்பெருமானின் புகழ் விளக்கியதால், தோழியர்களுடன் விளையாட விருப்பம் இல்லாமல், கண்ணன் நினைவாகவே இருந்து வந்தாள்.
மனமுருக இறைவனை வேண்டி, உற்ற தோழனாக, காதலனாக என, ஆண்டாளின் ஒவ்வொரு வளர்நிலையையும், அற்புதமான பரத நாட்டியத்தில், இசை, நடனம், உரை நடை என முத்தமிழிலும், அற்புதமாக விளக்கி, அசத்தி, பார்வையாளர்களை மெய் மறக்க வைத்தனர். கண்ணனை அடைவதற்காக, பார்க்கும் பொருட்களில் எல்லாம், கடவுளை பார்த்த ஆண்டாள், இயற்கையை தூது விட்ட பாங்கு, பாவை நோன்பு மேற்கொண்டது, ஆட்கொள்ள வைத்த இறை வழி என, அற்புதமான நடன நாட்டியத்தை, மேடையில் அரங்கேற்றி அசத்தினர். ஆண்டாள் அருளிய, பாசுரங்களை பாடல்களையும், நாட்டிய பெண்கள், இம்மி பிசகாமல், நாட்டியமாடி அசத்தினர். அற்புதமான முகபாவங்களில், ஆண்டாள், கண்ணன், பெரியாழ்வார், தோழியர் என ஒவ்வொருவரின், எண்ணங்களையும், வசனங்களையும் அருமையாக பார்வையாளர்களுக்கு படைத்தனர். "ஆண்டாள் வைபவம் மூலம், ஆண்டாள் இறைவன் ஆட்கொண்ட அற்புதமான வாழ்வியலை அரங்கேற்றி, பார்வையாளர்களை, ஆண்டாள் காலத்திற்கே அழைத்து சென்றதை, அனைவரும் கரவொலி வாயிலாக, பாராட்டி மகிழ்ந்தனர். "இசை அமுதம் நிறைவு நாள் நிகழ்வில், இன்று, மாலை 5:00க்கு, இளம் கலைஞர்கள் வரிசையில், அம்பிகா சுரேஷ் குழுவினரின், பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:30க்கு, சஞ்சய் சுப்ரமணியம் - பாட்டு; கோபிநாத்- வயலின்; நெய்வேலி வெங்கடேஷ் - மிருதங்கம்; திருப்பூணித்துரா ராதாகிருஷ்ணன் - கடம் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.