பதிவு செய்த நாள்
18
ஜன
2017
11:01
ஆர்.கே.பேட்டை : காணும் பொங்கல் நாளில், அகத்தீஸ்வரர், சித்தி விநாயகர், முருகப்பெருமானுக்கு நடத்தப்படும் சந்திப்பு திருவிழாவின் போது, அங்கு கூடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மலை உச்சியில், பகுதிவாசிகள் பரஸ்பரம் கருத்து பரிமாறி கொள்வது வழக்கம். 77ம் ஆண்டாக, நேற்று முன்தினம் நடந்த திருவிழாவில், நீர், நிலம், காற்று, வானம், அக்னி என, பக்தர்கள் பஞ்சபூதங்களை தரிசனம்செய்தனர்.
பொதட்டூர்பேட்டை கிராமத்தின் மேற்கு அரணாக உள்ளது, ஆறுமுக சுவாமி மலைக்கோவில், இந்த மலையின் அடிவாரத்தில் ஆறுமுக சுவாமி மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. பொதட்டூர்பேட்டையில் வசிப்பவர்கள், காலையில், சூரிய நமஸ்காரம் செய்தவுடன், மேற்கே திரும்பி நின்று, மலைக்கோவிலை வணங்குவது வழக்கம். உச்சிக்கோவிலில் விநாயகர், சுப்ரமணியர் அருள்பாலிக்கின்றனர்.திருத்தணி மலைக்கோவிலில் உள்ளது போன்று, இந்த மலையிலும், 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தை மாத பிறப்பை கணக்கிட்டு, அடுத்த 365 நாட்களும் சிறப்பாக அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் பக்தர்கள், இங்கு, காணும்பொங்கல் தினத்தில் கூடுகின்றனர். அடிவாரம் மற்றும் மலைப்பாதையின் நடுவே என, இரண்டு சுனைகள் உண்டு. 1980களில், இந்த சுனைகள் வற்றாத வளம் கொண்டிருந்தன. தற்போது, அடிவாரத்தில் உள்ள சுனையில் மட்டும் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளது.மலையடிவாரத்தை ஒட்டிய ஒற்றைவாடை தெரு, மடம் தெரு, சிலம்பு பாளையம் தெரு உள்ளிட்ட பகுதிவாசிகள், அடிவாரத்தில் உள்ள சுனை நீரை, குடிநீராக பயன்படுத்தியது பழைய கதை. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பக்தர்கள் இளைப்பாற மூன்று இடத்தில், பெரிய ஆலமரங்கள் உள்ளன.காணும் பொங்கல் திருநாளில் இங்கு வரும் பகுதிவாசிகளுக்காக இங்குள்ள விளையாட்டு கருவி, இந்த ஆலமரத்தில் விழுதுகள் தான். மேலும், 1944ல் கட்டப்பட்ட கல் மண்டபம் தற்போது சீரழிந்து கிடப்பதால், அதில் பக்தர்கள் தங்கி இளைப்பாற முடியாத நிலை உள்ளது. மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம், காணும் பொங்கல்திருநாளில், இங்கு, அமிர்தவள்ளி உடனுறை அகத்தீஸ்வர பெருமான், சித்தி விநாயகர், முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்பட்டது.
கிராமத்தின் தெற்கே உள்ள கோவிலில் இருந்து அகத்தீஸ்வரர் இங்கு எழுந்தருளினார். பின், பிரமாண்ட ரதத்தில், மூன்று உற்சவ மூர்த்திகளும் பார் வேட்டைக்கு புறப்பட்டனர். முன்னதாக, உச்சி கோவிலில், விநாயக பெருமான் மற்றும் சுப்ரமணியருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. விநாயக பெருமானை தரிசனம் செய்ய வந்த பகுதிவாசிகள், மலைக்கோவிலின் பின்பிறம் உள்ள சமவெளியில், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து, கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.வானத்தை எட்டி பிடிக்கும் விதமாக மலை உச்சியல் கூடிய பகுதிவாசிகள், துாய காற்று, தொலைவில் உள்ள நீர்நிலைகள், ஜோதி வடிவில் சுவாமி தரிசனம் என, பஞ்ச பூதங்களையும் நிம்மதியாக தரிசனம் செய்தனர். வெளியூர்களுக்கு குடிபெயர்ந்து வசிப்பவர்களும், 77 ஆண்டுகளாக தொடரும், இந்த பாரம்பரிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று முன்தினம் சொந்த கிராமத்திற்கு திரும்பி இருந்தனர்.