திருநாகேஸ்வரம் கோவில் குபேர தீர்த்த கிணற்றில் ரூ.3.25 லட்சம் நாணயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2011 10:10
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் குபேர தீர்த்த கிணற்றில் கடந்த ஆறு மாதத்தில் பக்தர்கள் 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்கள் செலுத்தி இருந்தனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். ராகுகாலத்தில் ராகுபகவானை பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு பெற்றது. சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் நாகநாதபெருமான் பின்புறம் உள்ள மகாலெஷ்மி சன்னதி எதிரில் குபேரதீர்த்தக்கிணறு உள்ளது. இங்கு சாதாரணமாக பக்தர்கள் நாணயங்கள் போட்டு வந்துள்ளனர்.இது கடந்த 6 மாதம் முன் கோவில் நிர்வாகம் கிணற்றை சுத்தம் செய்ய தீர்மானித்தனர். அப்போது கிணற்றிலிருந்து ஒரு லட்சம் மதிப்புள்ள நாணயங்கள் இருந்து எடுக்கப்பட்டது.அதன்பின், அப்போதிருந்த நிர்வாக அதிகாரி குபேர தீர்த்தக்கிணறு அருகே ஒரு விளம்பர பலகை வைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்க தொடங்கினர். அதன்பின் வருகின்ற அனைத்து பக்தர்களும் குபேர தீர்த்தக்கிணற்றில் நாணயங்கள் போடுவதை ழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று குபேர தீர்த்தக்கிணற்றை திறந்து சுத்தம் செய்ய தீர்மானித்தனர். அதிலிருந்து பெட்டி, பெட்டியாக நாணயங்கள் எடுத்து தூக்கி வந்தனர். கும்பகோணம் உதவி கமிஷனர் தென்னரசு, கோவில் உதவி கமிஷனர் மோகனசுந்தரம், ஆய்வர் கண்ணன், கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு, ரேணுகாதேவி மற்றும் ஆலயப்பணியாளர்கள் முன்னிலையில் அனைத்து நாணயங்களும் பெட்டிகளிலிருந்து கொட்டப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை பக்தர்கள் செலுத்தியிருந்தது தெரியவந்தது.