பதிவு செய்த நாள்
20
அக்
2011
10:10
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக்கூடு விழா, செப்.,28ல் மவ்லுது(புகழ்மாலை) ஓதப்பட்டு துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா இன்று நடக்கிறது. இதையொட்டி தர்காவில் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. மாலை 4 மணிக்கு யானை, குதிரைகளுடன் தைக்காவில் இருந்து ஊர்வலமாக சென்று போர்வை எடுக்கும் விழா நடக்கிறது. அதன் பின் அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்படும். காலை 5 மணிக்கு தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும். அங்கு மூன்று முறை தர்காவை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து கி.பி.1163 ம் ஆண்டு மத்தியில் இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.
மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அழத்தாகிர் (ஒலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.
நோய் தீர்க்கும் தலம்: ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.