பதிவு செய்த நாள்
27
ஜன
2017
04:01
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் தை அமாவாசை விழா விமரிசையாக நடந்தது. இதனை காண தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் மலையில் குவிந்தனர்.
தமிழகத்தின் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில் இரண்டாவது பெரிய திருவிழாவாக தை அமாவாசை திருவிழா கொண்டாடப்படும். இங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் இந்த ஆண்டு தை அமாவாசை விழா ஜன.25 ல் பிரதோஷ வழிபாட்டுடன் துவங்கியது. அன்று முதல் பக்தர்கள் தொடர்ந்து மலைக்கு சென்று வந்தனர். 3 ம் நாளான, முக்கிய நிகழ்வான அமாவாசை பூஜைகள் விமரிசையாக நடந்தன. சுவாமிகளுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்களும், சங்கொலி முழங்க சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதனை தொடர்ந்து சுந்தரமகாலிங்கசுவாமி நாகாபரண அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கசுவாமி ராஜஅலங்காரத்திலும், சுந்தரமூர்த்தி சுவாமி புஷ்பகிரீட அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தாணிப்பாறை கருப்பசாமி கோயிலில் வழிபாடு செய்தனர்.
மலை அடிவாரத்தில் உள்ள வயல், தோப்புகளில் ஏராளமான பக்தர்கள் முகாமிட்டு சுவாமிக்கு ஆடு, கோழி பலியிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபட்டனர். மதுரை, தேனி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துõர், ராஜபாளையம் உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் மலையடிவாரம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மலையிலும், மலைப்பாதைகளிலும் பேரையூர் டி.எஸ்.பி., சார்லஸ் தலைமையில் மதுரை மாவட்ட போலீசாரும், அடிவாரம், தாணிப்பாறை பகுதிகளில் ஸ்ரீவில்லிபுத்துõர் டி.எஸ்.பி., சின்னையா தலைமையில் விருதுநகர் மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி உட்பட அறநிலையத்துறையினர் திருவிழா ஏற்பாடுகளை செய்தனர்.