தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதிபூஜை, தோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிப்பட்டனர். தேவிபட்டினம் அருகில் உள்ள நவபாஷாணம் தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்ய உகந்த தலமாக திகழ்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துசெல்கின்றனர்.
நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலை முதலே கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக தர்ப்பணம், திதி பூஜை, தோஷ நிவர்த்தி பூஜை செய்து வழிபட்டனர். இந்து அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. போலீசார், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கீழக்கரை: தை அமாவாசையையொட்டி திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிய பின் பித்ரு தோஷம் நீங்குவதற்காக முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
* திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். * சாயல்குடி அருகே எஸ்.மாரியூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள் பூவேந்திய நாதர் சமேத பவள நிற வள்ளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். * மூக்கையூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு சிரார்த்தம், திதி பூஜைகள் செய்து கடலில் நீராடினர்.