பதிவு செய்த நாள்
28
ஜன
2017
01:01
ஈரோடு: தை அமாவாசையை ஒட்டி, ஈரோட்டில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. ஈரோடு, பவானி, கொடுமுடி உள்ளிட்ட காவிரி ஆற்றங்கரைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். மகாளய அமாவாசைக்கு இணையாக, தை அமாவாசையை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்குவது வழக்கம். அதன்படி ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரியாற்றில், ஏராளமானோர் திதி கொடுக்க, தை அமாவாசையான நேற்று குவிந்தனர். திண்டல் வேலாயுதசாமி கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கோட்டை பத்ரகாளியம்மன், கள்ளுக்கடைமேடு கொண்டத்துக்காளியம்மன், கொங்காலம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன.
* பரிகார தலமான, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில், திதி கொடுக்க, அதிகாலை முதலே, பக்தர்கள் வரத் தொடங்கினர். காவிரி ஆற்றங்கரையில், காய், கனிகள், பழங்கள், பலகாரங்கள் படையலிட்டு வழிபட்டனர். வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக, அதிகாலை, 5:00 மணி முதல் இடைவெளியின்றி கோவில் நடை திறக்கப்பட்டிருந்தது. ஆற்றங்கரையில், 2,000த்துக்கும் மேற்பட்டவர்கள் திதி, தர்ப்பணம் செய்ததாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர். இதேபோல் தென்னகத்தின் காசி என அழைக்கப்படும், பவானி கூடுதுறையிலும், ஏராளமானோர் திதி கொடுத்து, காவிரியில் புனித நீராடி, முன்னோர்களை வழிபட்டனர்.
* சத்தியமங்கலம் அடுத்த, பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர், கோவை, தாளவாடி மற்றும் மைசூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை முருகன் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.