திருநெல்வேலி:தை அமாவாசையை யொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மேற்கொள்ளும் நிகழ்வு நடந்தது. ஆடி அமாவாசை, மற்றும் தை அமாவாசை தினங்களில் தங்களின் முன்னோர்களை நினைவில் கொள்வது வழக்கமாக நடக்கிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வருடம் முழுவதும் தர்ப்பணம் கொடுத்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது.அதன்படி நேற்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தமிரபரணி ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரைகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். அதிகாலையில் குவிந்த மக்கள் அற்றிலும், கடலிலும் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பை புல் வைத்து பித்ருக்களுக்கு எள்ளும், நீரும் அளித்து தர்ப்பணம் செய்தனர்.பாபநாசம் தாமிரபரணி ஆற்றுக்கரை மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளிலும், குற்றாலம் அருவிக்கரைகளிலும் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதே போன்று நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணார் பேட்டை பேராச்சி அம்மன்கோவில் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.