ஏரலில் தை அமாவாசை திருவிழா:திரளான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2017 01:01
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் தை அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி திருக்கோகோயில் தை அமாவாசை திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை அமாவாசையை முன்னிட்டு 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் வரை தினமும் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை பூஜைகளும் மற்றும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
பத்தாம் திருவிழாவான நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு மதியம் 1 மணிக்கு சுவாமி உருகு பலகையில் எழுந்தருளி அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு இலாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபட்டனர். இதனை முன்னிட்டு திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
11-ம் திருவிழாவான இன்று சனிக்கிழமை காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாகசாந்தியும், இரவு 10.30 மணிக்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்த காட்சியும் நடைபெறும். 12-ம் திருவிழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், மதியம் 12.30 அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலை சயன தரிசன மங்கள தரிசனமும் நடைபெறுகின்றன.