ராமாயண காட்சி கூடம் பார்க்க 50 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2017 12:02
நாகர்கோவில்: கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ராமாயண காட்சி கூடத்தை பார்வையிட, 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் மூன்று ஏக்கரில் 25 கோடி ரூபாய் செலவில் ராமாயண காட்சி கூடம் மற்றும் பாரதமாதா கோயில் நிறுவப்பட்டுள்ளது. சித்திர கண்காட்சி கூடத்தின் முன்புறம் 27 அடி உயரத்தில் 12 அரை டன் எடை கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் மேல்தளத்தில் பாரத மாதா கோயில் உள்ளது. இங்கு 15 அடி உயரத்தில் ஐந்தரை டன் எடை கொண்ட வெண்கல சிலை உள்ளது. கோயிலின் உட்புறத்தில் 18 அடி நீளம் 12 அடி அகலத்தில் ராமர் பட்டாபிஷேகம், ராமேஸ்வரத்தில் ராமர் சீதை ஆகியோர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தல், பத்மனாப சுவாமியின் அனந்த சயன நிலை ஆகிய மூன்று பெரிய ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடராஜரின் நடன கோல சிலை, குமரி பகவதி அம்மனின் தவக்கோல சிலை, விவேகானந்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.கீழ்தளத்தில் ராமாயணத்தின் 108 முக்கிய சம்பவங்கள் 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கோயிலின் முன்பகுதியில் நீரூற்றுடன் கூடிய பூங்காவும், அதன் நடுவில் 32 அடி உயர சிவபெருமான் சிலையும், சிவன் தலையில் இருந்து கங்கை நதி பாய்வது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல்வேறு பறவை, விலங்குகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த கூடத்தை கடந்த 28-ம் தேதி மாதா அமிர்தானந்தமயி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். தற்போது இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ரூ.50 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் வாங்குபவர்கள் கேந்திராவில் உள்ள இதர கண்காட்சிகளையும் பார்க்க முடியும். காலை 9:00- மதியம் 1:00 மணி, பிற்பகல் 3:00- இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்.