பதிவு செய்த நாள்
01
பிப்
2017
12:02
வெண்ணைமலை: கரூர் அடுத்த, வெண்ணைமலை முருகன் கோவிலில், நாள்தோறும் நடக்கும் அன்னதானத்தின் போது சிலர் டேபிள், சேரில் அமர்ந்தும், பலர் தரையில் அமர்ந்து உணவருந்துவதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: கோவிலில், நாள்தோறும் டோக்கன் வழங்கப்பட்டு, உணவுக் கூடத்தில் சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஒரு நாளைக்கு, 30 பேருக்கு தான் டோக்கன் வழங்குகின்றனர். இதிலும், ஒரு சிலருக்கு மட்டும் டேபிள், சேர் போட்டு உணவு வழங்குகின்றனர். மற்றவர்களை தரையில் அமர்ந்தி சாப்பாடு போடுகின்றனர். அதிகளவில் டேபிள், சேர் போட்டு, அனைத்து மக்களும் சரிசமமாக உணவருந்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, கோவில் அலுவலர் ராஜாராம் கூறியதாவது: ஒரு நாளைக்கு, 30 முதல், 50 பேர் வரை மதியம் உணவு வழங்கப்படுகிறது. உபயதாரர் இல்லாவிட்டாலும், கோவில் நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்படுகிறது. அன்னதான திட்டம் என்பதால் இங்கு வருபவர்கள், அனைத்து தரப்பினரும் சமம் தான். இடவசதி மற்றும் டேபிள், சேர் பற்றாக்குறை காரணமாக, சிலர் தரையில் அமர்ந்து உணவருந்துகின்றனர். இதை, இரண்டு கட்டமாக பிரித்து, அனைவரும் டேபிள், சேரில் அமர்ந்து உணவருந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.