சத்திய லோகத்தில் விஷ்ணுவை மனதில் எண்ணி பிரம்மா தவத்தில் ஆழ்ந்தார். அவரின் அன்பைக் கண்ட விஷ்ணு, அங்கு வந்து தன் பிள்ளையான பிரம்மாவைத் தழுவிக் கொண்டார். அவருடைய கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகி நதியாக ஓடியது. அந்நதிக்கு சரயு என்று பெயர். அந்நதியை பிரம்மாமானஸ சரசில் சேர்த்தார். பூலோகத்தில் சூரியகுல மன்னரான இஷ்வாகு தன் நாட்டின் வளம் பெருக்க குலகுரு வசிஷ்டரிடம் யோசனை கேட்டார். முக்காலமும் அறிந்த வசிஷ்டர், சத்தியலோகத்தில் நடந்த விஷயத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, சரயு நதியை பூமிக்கு கொண்டு வந்து அயோத்தி நகரில் சேர்த்தார். அதனால் இந்நதிக்கு வசிஷ்டை என்ற பெயர் ஏற்பட்டது. மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து அயோத்தியில் வாழ்ந்த போது, சரயு நதி பெண் வடிவில் தோன்றி ராமபிரானை வணங்கி ஆசிபெற்றாள். அதனால் ராம்கங்கா என்ற சிறப்புப்பெயர் இந்த நதிக்கு ஏற்பட்டது. ராமஜென்ம பூமியாகிய அயோத்தியில் ஓடும் சரயுநதியில் நீராடுவதை, பக்தர்கள் பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.