பதிவு செய்த நாள்
03
பிப்
2017
02:02
ஆர்.கே.பேட்டை: சத்யபாமா, ருக்மணி உடனுறை சந்தான வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று, விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரத்தில் உள்ளது சத்யபாமா, ருக்மணி உடனுறை சந்தான வேணுகோபால சுவாமி கோவில்; பசுக்களை மயக்கும் வேணுகானம் இசைத்தபடி, பாலகிருஷ்ணர், சந்தான வேணுகோபாலன் அருள்பாலிக்கிறார். கிராமத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மலைகளில் இன்றும் ஏராளமான பசுக்கள் மேய்ச்சலுக்காக வந்து செல்கின்றன. அத்தகைய மலைகளுக்கு மத்தியில், ஆயர்பாடி மாயன் வேணுகோபாலன் கோவில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஓராண்டு காலமாக நடந்து வந்த புனரமைப்பு பணிகளுக்கு பின், நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை 5:30 மணிக்கு சுப்ரபாதமும், அதை தொடர்ந்து, பூர்ணாஹூதியும் நடந்தன. காலை 9:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜைக்கு பின், புனிதநீர் அடங்கிய கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. காலை, 10:00 மணிக்கு, மூலவர் சன்னிதி, தாயார் சன்னிதி, கருடாழ்வார், விநாயகர், ராஜகோபுரம் உள்ளிட்ட ஆறு கோபுரங்களுக்கும் ஏக கால கும்பாபிஷேகம் நடத்தப்பட்டன. திரளான பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என கோஷம் எழுப்பி, பெருமாளை வணங்கினர். மாலை 5:00 மணிக்கு, சுவாமி திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வீதியுலாவும் நடந்தன.