திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் நேற்று நிலைத் தெப்பமாக நிறுத்தப்பட்டு விழா நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா ஜன. 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நேற்று நடந்தது.
ஜி.எஸ்.டி., ரோடு அருகேயுள்ள தெப்பக்குள கரையின் ஒரு பகுதியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மழை இல்லாத காலங்களில் அந்த ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும். தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்படும் மிதவை தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காலையில் மூன்று சுற்றுகளும், இரவு மைய மண்டபத்தில் சுவாமி ஊஞ்சலாட்டம் முடிந்து மூன்று சுற்றுக்களும் சுற்றிவருவர்.இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாததால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து விட்டது. இந்த ஆண்டு தெப்பத் திருவிழாவிற்காக 20 நாட்களுக்கும் மேலாக ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் விடப்பட்டது. ஆனால் குளத்தில் இரண்டு அடி மட்டுமே தண்ணீர் நிரம்ப முடிந்தது. மிதவை தெப்பம் சுற்றிவர இயலாத நிலையால், இந்த ஆண்டு நிலைத் தெப்பமாக நிறுத்தப்பட்டது. நேற்று காலை 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மிதவை தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு பூஜைகள் முடிந்து, இரவு 7:00 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி, சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி முடிந்து சுவாமி சேர்த்தி சென்றார்.