பதிவு செய்த நாள்
07
பிப்
2017
12:02
நாமக்கல்: நாமக்கல், மதுரை வீரன்புதூர் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது. நாமக்கல், பொய்யேரிக்கரை அடுத்த, மதுரைவீரன்புதூரில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோவில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் செய்து, 9:00 மணிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, முதல் கால பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை, 7:00 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. காலை, 9:10 மணிக்கு, சிவாச்சாரியார்கள் கோபுர சிற்பத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். 9:45 மணிக்கு, சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது. காலை முதல் மாலை வரை அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.