Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை
முதல் பக்கம் » முருகன் வழிபாடு!
சஷ்டி விரத நாட்களில் எங்கு வழிபட என்ன கிடைக்கும்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2011
05:10

கந்தசஷ்டி விரதநாட்களில், முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசித்தால் செல்வவளம் பெருகும். சூரசம்ஹாரத் தலமான திருச்செந்தூரில் கந்தவேலைத் தரிசித்தால் எதையும் சாதிக்கும் தைரியம் கிடைக்கும். ஞானபண்டிதனான தண்டாயுதபாணியை பழநியில் வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த சுவாமிநாதனைச் சுவாமிமலையில் தரிசித்தால் கல்வி அபிவிருத்தி உண்டாகும். வள்ளிநாயகியை மணந்தருளிய திருத்தணியில் தணிகைநாதனை வணங்கிவந்தால் திருமணத்தடைகள் நீங்கும். திருமணமானவர்கள் ஒற்றுமையுடன் மனநிறைவுடன்  வாழ்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.. ஆறாவது படைவீடாகிய சோலைமலை முருகப்பெருமானைத் துதித்தால் தடைபட்டுவந்த செயல்கள் நிறைவேறும். சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.

திருப்பரங்குன்றம் அறிமுகம்

திருப்பரங்குன்றம், ஆறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகும். மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகப்பெருமான், இங்கு மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு நேரடியாக அபிஷேகம் கிடையாது. அவரது திருக்கரத்திலுள்ள வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. முருகப்பெருமானுக்கு தெய்வானையுடன் இங்கு தான் திருமணம் நடந்தது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள் வரும் படைவீடு இதுவே! காயத்ரி, சாவித்திரி, சித்த வித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் முருகன் சன்னதியில் காட்சி அளிக்கின்றனர். அவரது திருவடியின் கீழ், அண்டராபரணர், உக்கிரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். மகாபாரதம் எழுதிய வியாசரும் தனிச் சன்னதியில் காட்சிதருகிறார்.  இந்த தலத்துக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசர தலம், குமாரபரி விட்டணு துருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம் என்னும் புராணப் பெயர்கள் உள்ளன.

ஆறுபடைவீடுகளில் முருகனின் நிலை

ஆறு படைவீடுகளில் முருகப்பெருமான் ஆறு நிலைகளில் விளங்குகிறார். குறிப்பாக திருப்பரங்குன்றத்தில் திருமண நிலை (உல்லாசம்), திருச்செந்தூரில் கவலை தோய்ந்த நிலை (நிராகுலம்), பழநிமலையில் ஞான பண்டிதனாகத் துறவி கோலநிலை (யோகம்), சுவாமிமலையில் தந்தைக்கு இதமாகப் பிரணவப் பொருள் உபதேசித்த குரு நிலை (இதம்), திருத்தணியில் குறிஞ்சி குன்றுகளில் மகிழ்ந்த நிலை (சல்லாபம்), சோலைமலையில் ஞானப்பழம் உதிர்க்கும் ஆனந்தநிலை (விநோதம்) நிலையில் அருள்பாலிக்கிறார்.

முருகனுக்கு ஆறுநாள் திருநாள்

கந்தசஷ்டி விரதம் ஆறுமுகப்பெருமானுக்குரிய ஆறுநாள் விரதமாகும். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்னும் பழமொழி இவ்விரதத்தின் மகத்துவத்தைப் போற்றுவதாகும். மேலோட்டமாக சட்டியில் உணவு இருந்தால் தானே கரண்டியில் வரும் என்று பாமரர்கள் இதற்கு பொருள் சொல்வர். தத்துவார்த்தமாக, இப்பழமொழியை சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்று கூறுவர். சஷ்டி விரதம் மேற்கொள்ளும் தம்பதியருக்கு அகப்பையான கருப்பையில் நல்ல கரு (குழந்தை) வளரத்தொடங்கும் என்பதே இதன் உண்மைப்பொருள். மழலைச் செல்வம் வாய்க்காத தம்பதியர் யாவரும் முருகப்பெருமானைக் குறித்து இவ்விரதத்தைக் கடை பிடிப்பர். ஐப்பசி அமாவாசையின் மறுநாளான பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு தினங்கள் இவ்விரதம் மேற்கொள்ளப்படும்.

அஞ்சுக்குள்ளே ஆறு

அஞ்சுக்குள்(ஐந்திற்குள்) எப்படி ஆறு அடங்கும்? ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் கருவறையில் ஐந்து சன்னதிகளில் ஆறுமதக்கடவுளர்களும் ஒருசேரக் காட்சியருள்கின்றனர். முற்காலத்தில் இந்து மதம் ஆறுமதங்களாக இருந்தது. விநாயகர், சிவன், பெருமாள், முருகன், சக்தி, சூரியன் ஆகிய ஆறு தெய்வங்களையும் தனித்தனியாக பூஜித்து வந்தனர். அவர்கள் தங்கள் மதங்களுக்கு முறையே காணாபத்யம்(கணபதி), சைவம்(சிவன்), வைஷ்ணவம் (பெருமாள்) கவுமாரம்(முருகன்), சாக்தம்(அம்பாள்), சவுரம்(சூரியன்) என பெயர் சூட்டியிருந்தனர். இந்த ஆறுமதங்களுக்குரிய கடவுள்களும் ஒரு சேர வீற்றிருக்கும் இடம் திருப்பரங்குன்றம். முருகன், சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், விநாயகர், துர்க்கை, சூரியன் ஆகிய ஆறுபேரும் இங்குள்ளனர். இவர்கள் ஐந்து சன்னதிகளுக்குள் அமர்ந்துள்ளது சிறப்பு. முருகன் சன்னதியின் மேற்பகுதியில் சூரியன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திசைக்கு ஒரு காட்சி

திருப்பரங்குன்றம் மலை வடதிசையிலிருந்து தெற்கு நோக்கிப் பார்க்கும்பொழுது கைலாய மலை போலவும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரும் பாறையாகவும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பார்க்கும் பொழுது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பார்க்கும் பொழுது பெரிய சிவலிங்க வடிவாகவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றத்தை சிவலிங்கமாகவே பாவித்து, தன் தேவாரப்பாடலில் போற்றுகிறார்.

ஆறுமுகத்தை வழிபட்டால் ஏறுமுகம்

ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள், ஆறு திருமுகம், ஆறு கார்த்திகை பெண்கள், ஆறு சமயங்களுக்கும் தனிப்பெருங்கடவுள், ஆறு மந்திரங்கள், ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம், ஆறுமுகனுக்கு உகந்த ஆறு நூல்கள், தோன்றிய இடமும் ஆறு (கங்கை ஆறு) இவ்வாறு ஆறு என்பதுடன் முருகப்பெருமானுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. ஆறுமுகத்தை மனமுருகி வழிபட்டால் நம் வாழ்க்கையில் ஏறுமுகத்தை காணமுடியும்.

முருகனின் பூலோக அம்மா

முருகனின் அம்மா யார் என்றால் பார்வதி என சொல்லி விடுவீர்கள். அவருக்கு பூலோகத்தில் ஒரு அம்மா இருந்தார் தெரியுமா? திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகில் உள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்திற்குப் பரிகாரத் தலமாகும். வி என்றால் மேலான, சாகம் என்றால் ஜோதி, இந்நட்சத்திரம் விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் விழுவதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு முறையாவது இக்கோயிலைத் தரிசிப்பது நல்லது. 500 அடி உயரத்தில் உள்ள இக்கோயிலை 544 படிகள் ஏறினால் அடையலாம். அக்காலத்தில் முருகப்பெருமானுக்குரிய விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நாட்களில் செல்வ விருத்திக்காக இங்கு வளர்ந்த திருமலைச்செடியின் வேரையும், தன கர்ஷண யந்திரத்தையும் பக்தர்கள் வழிபட்டு வந்தனர். திருமலைக் குமாரசுவாமியை தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலையடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் செல்லப்பிள்ளை பழனியாண்டவன்

போகர் என்னும் சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட நவபாஷாணத்தால் ஆன முருகப்பெருமான் பழநியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். சித்தர்களுக்கு எல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு அருள்பாலிப்பதால் இத்தலத்திற்கு சித்தன் வாழ்வுஎன்றும் பெயருண்டு. பழநிமுருகன் ஒரு சித்தரைப் போல முற்றும் துறந்து ஆண்டிக்கோலத்தில் அருள்வதால் பழநியாண்டி என்று அழைப்பர். நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்கு வழங்காமல், விநாயகப்பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப்பெருமான் இங்கு ஆண்டியாக இருப்பதாகவே தலவரலாறு கூறுகிறது. ஆனாலும், பக்தர்கள் அவர் மீது கொண்ட அன்பால், அவரை ராஜாங்க அடையாளத்துடன் பட்டுபீதாம்பரம், கிரீடம் அணிந்து ராஜாவாக மாற்றி விடுகின்றனர். பழநி முருகன் பக்தர்களின் செல்லப் பிள்ளையாயிற்றே! மனிதர்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் வாழ்வில் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். நம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும் இரவு பகல் போல மாறி மாறி உண்டாகின்றன. ஆனால், மனம் ஒருபோதும் தடுமாறக்கூடாது. மனம்,மொழி, மெய்யால் நல்லதையே சிந்திக்கவேண்டும். அதற்கான நல்லறிவை வழங்கும் ஞானபண்டிதனாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பகைவனுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவர் முருகன். சூரனுக்கே அருள் செய்தவர். அவர் அம்மையப்பர் மீது கோபம் கொண்டு ஆண்டியானாரா என்றால், நிஜத்தில் அப்படியல்ல. அவர் தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னை நாடிவருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவே இக்கோலம் கொண்டார். அதனால் தான் பழநி சென்று திரும்புபவர்கள் செல்வவளம் மிக்கவர்கள் ஆகிறார்கள். கந்தசஷ்டி விரத நன்னாட்களில் அந்த ஞானபண்டிதனைச் சரணடைந்து இந்தப் பிறவிக்கு தேவையான செல்வமும், வாழ்வுக்குப் பிறகு அவனது கந்தலோகத்துக்குள் செல்லும் நல்லருளும் பெறுவோம்.

அப்பாவுக்கு ஆலவாய் பிள்ளைக்கு அலைவாய்

முருகனின் தந்தையான சிவனுக்குரிய மதுரை தலத்தை ஆலவாய் என்ற புராணப் பெயரிட்டு அழைப்பர். முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற புராணப்பெயர் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் இங்கே தங்கினார். இவரது திருவடிகளை தோணிக்குச் சமமாகக் குறிப்பிடுவர். கடலின் முன்புள்ள முருகப்பெருமானின் திருவடிகளை வணங்கியவர்கள் எளிதாக பிறவிக்கடலைக் கடந்து விடுவர் என்பது  ஐதீகம்.

இந்த கலியுகத்திலும் நல்ல குரு வேண்டுமா?

 கந்தபுராணத்தில் திருத்தணி பற்றி சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. வெகுதொலைவில் இருந்தபடியே, திருத்தணி என்ற பெயரை உச்சரித்தாலும், கேட்டாலும், நினைத்தாலும், திசைநோக்கி வணங்கினாலும் புண்ணியம் கிடைக்கும் என்கிறது தணிகைப்புராணம். இத்தலத்தின் பெருமையையும், மகிமையையும் வள்ளிக்கு முருகனே எடுத்துச் சொன்னதாக கந்தபுராணம் விளக்குகிறது. திருத்தணி முருகனின் அருள் பெற்ற அடியார்களில் முத்துச்சுவாமி தீட்சிதரும் ஒருவர். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவர், திருத்தணி முருகன் சன்னதியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார். அப்போது, முருகன் சிறுவனாய் முத்துச்சுவாமி தீட்சிதரின் முன்னர் தோன்றி, அவருக்கு கற்கண்டு கொடுத்தார். உடனே தீட்சிதர் முருகனைப் பற்றி பல கீர்த்தனைகளைப் பாடினார். தம் கீர்த்தனைகளில் முருகனை குருகுஹ என்று அவர் போற்றுகிறார். அவரையே குருவாக ஏற்றார். கலியுகத்தில் சிறந்த குரு கிடைக்காத பட்சத்தில் திருத்தணி முருகனையே மானசீக குருவாக ஏற்கலாம்.

கடலுக்குள் கிடந்த முருகன் சிலை

திருச்செந்தூர் முருகப்பெருமானை அவனுடைய அடியார்கள் ஆறுமுகநயினார் என்று அழைப்பர். அப்பெருமான் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி திருவிளையாடல் செய்திருக்கிறார். 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் டச்சுக்காரர்கள் ஆறுமுகநயினாரின் விக்ரகத்தைக் கடத்திச் சென்றனர். கடலில் செல்லும் போது பெரும்புயல் வரவே, அதை கடலுக்குள் போட்டுவிட்டனர். ஐந்து ஆண்டுகள் வரை சிலையில்லாமல் வழிபாடு செய்யமுடியவில்லை. எனவே, வடமலையப்ப பிள்ளை என்பவர் வேறொரு சிலையை வடிக்க முடிவெடுத்தார். ஆனால், ஆறுமுகநயினார், அவரது கனவில் தோன்றி, கடலில் தான் இருப்பதை உணர்த்தினார். படகில் சென்று சிலையைத் தேடினார் வடமலையப்ப பிள்ளை. அப்போது, நடுக்கடலில் கருடன் வட்டமிட்டபடியே இருந்தது. ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருந்தது. கனவில் வந்த ஆறுமுகநயினார் சொன்ன இடம் இதுவென்று அறிந்தார். அந்த இடத்தில் மூழ்கிப்பார்த்த போது ஆறுமுகநயினார் சிலை கிடைக்கப்பெற்று மகிழ்ந்தனர். இவ்வரலாறு திருச்செந்தூர் தல வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

வீரபாகுவுக்கு என்ன பிடிக்கும்?

முருகப்பெருமானின் சேனைத் தலைவராக விளங்கியவர் வீரபாகு.வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டு, முருகனின் படைகளைத் தட்டியெழுப்பியவர். இதைப் பாராட்டி, திருச்செந்தூரிலுள்ள தனது கர்ப்பக்கிரகத்திற்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் இவருக்கும், வீர மகேந்திரர் என்ற தளபதியையும் காவல் தெய்வங்களாக இருக்க அருள்புரிந்தார். அத்துடன், திருச்செந்தூருக்கு வீரபாகு பட்டினம் என்ற பெயரையும் சூட்டினார். மேலும், வீரபாகுவுக்குச் சிறப்பு செய்யும் வகையில் முதலில் வீரபாகுவுக்கு பூஜை நடந்த பின்னரே மூலவருக்கு பூஜை நடைபெறுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. வீரபாகுவுக்கு மிகவும் பிடித்தமான உணவு பிட்டு. இவருக்கு பிட்டை நிவேதனமாகப் படைத்தால் நமது மனவிருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நல்ல குழந்தைகள் தரும் சுப்பையா

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமிமலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது பெற்றவர்களுக்கு பெருமையாக இருக்கும். அந்த வகையில் தன் பிள்ளையிடமே ஓம் என்னும் மந்திரத்தின் பொருளைக் கேட்டு மகிழ்ந்தார் ஈசன். அதுவும் மகன் குருநாதராக வீற்றிருக்க, சிவன் ஒரு சீடனைப் போல் மண்டியிட்டு கேட்டார். அன்று முதல் முருகன் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்று போற்றப்பட்டார். சிவகுருநாதனான சுவாமிநாதப்பெருமானை குருவிற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபட்டால், ஞானமுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.

சரவணபவ என்றால் கிடைக்கும்  ஆறு பலன்கள்

கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள் தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை. இதில் சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. சரவணன் என்றால் பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை சரவணப்பொய்கை என்பர்.

பாரின் லேடி வணங்கிய  தமிழ்க்கடவுள்

முத்தமிழ் மீது கொண்ட அன்பால் முருகனுக்கு தமிழ்க்கடவுள் என்ற சிறப்புப் பெயர் உண்டு. இவர் மீது ஆங்கிலேயர்கள் சிலருக்கும் அன்பு உண்டு. ஐரோப்பியப் பெண் ஒருவர், 1936ல், கொடைக்கானலில் கட்டிய கோயிலே குறிஞ்சியாண்டவர் கோயில். மலையும் மலை சார்ந்த இடத்திற்கு குறிஞ்சி நிலம்என பெயர். இது மலையில் அமைந்த கோயில் என்பதால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என பெயர் பெற்றது. இந்துமதத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன் பெயரை லீலாவதி என்று அப்பெண் மாற்றிக் கொண்டதோடு ராமநாதன் என்னும் இந்தியரையும் மணந்து கொண்டார். முருக பக்தியால் இக்கோயிலை இவர் கட்டியதாகக் கூறுகின்றனர். இந்தக் கோயிலில், அழகு தெய்வம் முருகன் கம்பீரமாக காட்சி தருகிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ இங்கு பூப்பதும் சிறப்பம்சம். 1994, 2006ல் இந்தப்பூக்கள் மலர்ந்தன.

கம்பத்து இளையனார்

அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவன், அவர் மீது பொறாமை கொண்டான். ஒருமுறை, அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டானுக்கும் யாருடைய பக்தி மேலானது என்ற விவாதம் எழுந்தது. திருவண்ணாமலையை ஆட்சி செய்து மன்னன் பிரபுடதேவன் இப்போட்டிக்கு தலைமை வகித்தான். அருணகிரிநாதர் முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார். ஆனால், சம்பந்தாண் டான் முருகனின் காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து தடுத்தான். சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை. முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின் இடப்புறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், கம்பத்து இளையனார் என்று பெயர் பெற்றார். இதனை திருப்புகழில் அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

படிக்காதவர்க்கும் அருள் தருபவர்

திருச்செந்தூர் முருகன் கோயில் மடப்பள்ளியில் வென்றிமாலை என்ற அடியவர் பணி செய்தார். இவரை ஒரு சந்தர்ப்பத்தில், கோயில் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தி விட்டனர். உனக்கு தொண்டு செய்த எனக்கு இப்படியும் ஒரு சோதனையா? என்று மனம் நொந்தவர், கடலில் மூழ்கி உயிர் துறக்க முடிவெடுத்தார். எழுதப்படிக்கத் தெரியாதவரான வென்றிமாலையைக் காப்பாற்ற திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், அவருக்கு தமிழ் அறிவைத் தந்தார். வென்றிமாலை முருகப்பெருமான் மீது கவி பாடி கவிராயர் என்னும் பட்டம் பெற்றார். திருச்செந்தூர் ஸ்தல புராணத்தைப் பாடியவர் இவர் தான். எழுத்துவாசனையே இல்லாத பாமரனையும், பாவலராக மாற்றிய திருச்செந்தூர் கந்தனைச் சேவித்தால் வாழ்வில் நன்மை பெருகும்.

மணவாழ்வு தரும் மகத்தான காட்சி!

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த கையோடு, முருகன் திருப்பரங்குன்றத்துக்கு வந்ததாக ஐதீகம். போரில் வெற்றி பெற்று தேவர்களைக் காத்ததற்காக, இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்த தலம் இது. இதனால், இத்தலம் கல்யாண ÷க்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. முருகனுக்கும், தெய்வானைக்கும் பங்குனி சுவாதியில் திருமணம் நடக்கும். அப்போது அம்மையப்பராய் மதுரை மீனாட்சியும், சொக்கநாதரும் மகன் மற்றும் மருமகளுக்கு ஆசியளிக்க வருவர். அப்போது முருகன் மணமகளான தெய்வானையுடன் பெற்றோரை வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியைக் காண்போருக்கு விரைவில் மணவாழ்வு உண்டாகும்.

முதல் பாடல் இவருக்குத்தான்!

வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்? என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகன் வாழும் ஊர் வயலூர். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தன் கைகளில் தாங்கிய முருகன் வயலூருக்கு வா என்று அழைத்தார். இங்கு தான் முத்தைத்தரு பத்தித்திருநகை என்று திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தார். பதினெட்டுப் பாடல்களை அருணகிரிநாதர் இங்கு பாடினார். பிறதலங்களில் இருக்கும் முருகனுக்கு வேண்டிய நேர்த்திக் கடன்களை வயலூர் முருகனுக்கு நிறைவேற்றலாம். வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வயலூர் சென்று வள்ளி மணாளனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

பிறந்த நாளுக்கு இரட்டை ஆசி

முருகனின் பிறந்த நாளில் ஆறுபடை வீடுகளில் எதாவது ஒன்றுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இவற்றில் சிறப்பாக சொல்லப்படுவது திருப்பரங்குன்றம். ஏனெனில், இங்கு முருகன் மூலவர் அல்ல. அவரது தந்தையான சத்தியகிரீஸ்வரரே (சிவன்) மூலவர். ஏழாவது படை வீடு என வாரியார் சுவாமியால் வர்ணிக்கப்படும் மற்றொரு தலம் வயலூர். ஆனால் அதுவும் சிவத்தலமே. ஆதிநாதர் என்ற பெயரில் சிவன் இக்கோயிலில் அருள்புரிகிறார். பிறந்த நாள் விழாவில் குழந்தைகள் பெற்றவர்களிடம் ஆசி பெறுவார்கள். ஆனால், திருப்பரங்குன்றம், வயலூர் கோயிலுக்கு நம் பிறந்தநாளில் சென்றால், பெற்றவர்களான சிவபார்வதியிடமும், அவர்களின் குழந்தையான முருகனிடமும் ஆசி பெற்று வரலாம்.

பச்சைசாத்தி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி, மாசித்திருவிழாக் காலங்களில் ஏழு,எட்டாம் திருநாட்கள் சிறப்பு வாய்ந்தது. எட்டாம் திருவிழாவன்று காலையில் முருகப்பெருமான் எழுந்தருளும் கோலம் பக்தர்களைக் கவர்கிறது. பச்சைக் கடைசல் சப்பரத்தில், உற்சவர் சண்முகரை அமர்த்திப் பச்சைப்பட்டாடை அணிவித்து, பச்சை நிற மரிக்கொழுந்து பூ மற்றும் இலைகளால் கட்டப்பட்ட மாலைகள் சூட்டி எழுந்தருளச் செய்கின்றனர். இதனை பச்சை சாத்துதல் என்பர். பச்சை சாத்தி வரும் போது சுவாமிக்கு பக்தர்களால் செய்யப்படும் பன்னீர் அபிஷேகத்தால், தேரோடும் வீதிகள் சேறாகின்றன. பச்சை செழுமையைக் குறிக்கும். தன்னைத் தரிசித்தவர்கள் வீட்டிலும், தரிசிக்க வராவிட்டாலும் வீட்டில் இருந்தே நினைத்தவர்கள் வீட்டிலும் செல்வச்செழிப்பு ஏற்படுவதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். விவசாயம் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

அதிசயம் மிக்க பழநி

முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு பழநி. இதற்கு சிவமலை என்ற பெயரும் உண்டு. சித்தர்கள் வாழ்ந்த பூமி. போகர் என்பவர் இத்தலத்தில் இருக்கும் முருகனை வடிவமைத்தார். ஞானம் என்ற தண்டை ஊன்றி பால வடிவத்துடன் காட்சி தருகிறார்.
திருப்புகழில் இத்தலம், அதிசயம் அநேகமுற்ற பழநி என்று போற்றப்படுகிறது.

படிக்காத மேதை

வென்றிமலை என்னும் பக்தர், திருச்செந்தூர் கோயில் மடப்பள்ளியில் (சமையலறை) பணி செய்து வந்தார். அவரை, கோயில் நிர்வாகத்தினர் ஒரு சமயத்தில் அவமானப்படுத்தினர். உனக்கு தொண்டு செய்த எனக்கு இப்படியும் ஒரு சோதனையா? என்ற திருச்செந்தூர் முருகனிடம் முறையிட்டார். உயிரை மாய்ப்பதற்காக கடலுக்குள் குதித்தார். ஆனால், முருகன் ஒரு அடியவரைப் போல வந்து,  காப்பாற்றியதோடு கல்வியறிவையும் தந்தருளினார். அதன்பின், வென்றிமாலை என்னும் கவிபாடியதால், கவிராயர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவரே திருச்செந்தூர் ஸ்தல புராணத்தையும் பாடினார். படிக்காத பாமரனையும், பாவலராக்கிய செந்தூர் கந்தனைச் சேவித்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.

 
மேலும் முருகன் வழிபாடு! »
temple news
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை ... மேலும்
 
temple news
சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு ... மேலும்
 
temple news
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு ... மேலும்
 
temple news
மாதம் இருமுறை சஷ்டி வரும். ஆனாலும், ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி தனி விசேஷம் பெற்றது. பழநியில் ... மேலும்
 
temple news
சரவணபவ நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar