Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை
முதல் பக்கம் » முருகன் வழிபாடு!
முருகனுக்கு பல பெயர்கள்; பல காரணங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 அக்
2011
05:10

சரவணபவ

நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.

ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).

ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).

வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர். ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம்.

ஸ்கந்த நாமச் சிறப்பு

ஸ்கந்தர் என்றால் துள்ளிக் கொண்டு வெளிப்பட்டவர் என்று அர்த்தம் பரமேச்வரனுடைய சக்தி நேத்ர ஜ்யோதிஸ்ஸாக (நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளி) ஒரே துடிப்போடு, லோகாநுக்ரஹம் பண்ண வேண்டுமென்ற துடிப்போடு, துள்ளிக்கொண்டு வெளிப்பட்டே ஸ்கந்தமூர்த்தி உத்பவமானார். அந்த விசேஷத்தால் தான் அவருக்கு ஸூப்ரஹ்மண்யர், கார்த்திகேயர், குமாரர், சரவணபவர் என்றிப்படி அநேக நாமாக்கள் இருந்தபோதிலும், அவரைப் பற்றிய புராணத்திற்கு ஸ்கந்த புராணம், ஸ்காந்தம் என்றே பெயரிருக்கிறது. அவருடைய லோகத்துக்கு ஸ்கந்தலோகம் என்றே பெயர். அவர் ஸம்பந்தமான விரதத்தை ஸ்கந்த ஷஷ்டி என்றே சொல்கிறோம். அம்பாளோடும் முருகனோடும் இருக்கும் பரமேச்வரமூர்த்திக்கும் சோமாஸ்கந்தர் என்றே பேர் இருக்கிறது. முருகன் என்று அவருக்குச் சிறப்பாகத் தமிழ்ப்பெயர் கொடுத்திருக்கும் நம் பாஷையிலும், கந்தர நுபூதி, கந்தரலங்காரம், கந்தர் கலிவெண்பா என்றே ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. சென்னை பட்டணத்தில் சிறப்பாகக் கந்த கோட்டம் இருக்கிறது.
-மகாபெரியவர் விளக்கம்

ஆறுமுகம் பெயர் காரணம்!

சமயங்களில் ஆறு, கோசங்கள் ஆறு, ஆதார கமலங்கள் ஆறு, சாஸ்திரங்கள் ஆறு, நான்கு வேதங்களும், ராமாயண, மகாபாரதமும் சேர்ந்து ஆறு, ஞான சாதனைகள் ஆறு (சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை) இப்படிப் பல விஷயங்கள் ஆறாகிப் பெருகி நிற்பதால், சிவனவன் தன் சிந்தையுள் நிறைந்துள்ள பஞ்சாட்தரி மந்திரத்துடன் ஓம் என்ற ஓங்காரத்தையும் சேர்த்து, ஆற்றாக்கி, ஆறுமுகனைப் படைத்தான். இது வடமொழியில் சடக்கரம் என்று வழங்கப் பெறும். இதுவே ஆறுமுனின் பெயர்க் காரணம்.

சோமாஸ்கந்தர்

முருகனை நடுவில் வைத்து சிவனும், பார்வதியும் கொஞ்சி மகிழும் கோலத்தை சோமாஸ்கந்த வடிவம் என்பர். பாலமுருகன் உலகைச் சுற்றி வந்த பிறகும், அவருக்கு கனி கிடைக்கவில்லை. ஞானத்தை தரும் கனி என்பதால், அந்த ஞானப்பண்டிதன் மற்றொரு ஞானக்கனியைப் பெற வேண்டும் என்பதில் ஆவலாக இருந்தார். ஒரு முறை தந்தையிடம் கரிய நிறத்தில் நாவல்பழம் போல் கழுத்தில் உருண்டையாக தங்கியிருக்கும் விஷத்தைக் கேட்டு அடம் பிடித்தார். சிவன், விஷம் என்று எடுத்துக்கூறியும், குழந்தை முருகன் கேட்கவில்லை. தந்தையின் கழுத்தை பிடித்து இழுத்து, விஷ உருண்டையை வெளியே கொண்டு வர முயற்சித்தார். சிவன் குழந்தையின் பிடி தாங்காமல் மூச்சு திணறினார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி, முருகனை தன் மடியில் இருத்தி ஞானப்பால் ஊட்டி பார்வதி அமைதிப்படுத்தினாள். இதுவே சோமாஸ்கந்தர் கோலமானது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இந்த வடிவத்தை காணலாம்.

பிரம்ம சாத்தன்

குமரன், தேவசேனாபதி, சரவணன், கார்த்திகேயன், கந்தசாமி, சக்திதரன், சண்முகன், வேலவன், வடிவேலன், அழகன், முருகன் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ்க் கடவுளுக்கு பிரம்ம சாத்தன் என்றொரு பெயரும் உண்டு.அந்தப் பெயர் வரக் காரணமாக ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் திருக்கயிலாயத்திற்கு சிவ தரிசனம் செய்ய வந்த படைக்கும் கடவுளான பிரம்ம தேவன், சிவகுமாரனாகிய முருகனை சிறிதும் மதிக்காமல் சென்றார். அவரது செருக்கடக்க எண்ணிய முருகப்பெருமான், வீரபாகுவை அனுப்பி பிரம்மனைப் பிடித்து வரச் செய்து, பிரணவத்தின் பொருள் யாது? என்று வினவினார். பிரணவத்தின் பொருள் கூற மாட்டாது நின்ற பிரம்மனை தலையில் குட்டி, சிறையிலும் அடைத்து விட்டார், முருகப்பெருமான். இதனால் படைப்புத் தொழிலை மேற்கொள்ள, தனது ஆறுமுகங்களையும், பன்னிரு கண்களையும், வேலும், மயிலும் துறந்து, ஒற்றைத் திருமுகமும், நான்கு கரங்களும் கொண்ட திருவுருவமேந்தி, வலக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் இடக்கரத்தினை வரமளிக்கும் வரத ஹஸ்தமாகவும் கொண்டு, நின்ற திருக்கோலமாகக் காட்சி தந்தார். பிரம்மனின் படைப்புத் தொழிலைச் சில காலம் ஏற்று நடத்தியதால் முருகனுக்கு பிரம்ம சாத்தன் என்ற திருநாமம் உண்டு. இன்றும் கூட திருப்போரூர் மற்றும் காஞ்சி குமர கோட்டத்தில் முருகப் பெருமான் இத்திருவுருவிலேயே பக்தர்களுக்குக் காட்சி தருவதைக் காணலாம்.

சரவணப் பொய்கையில் குழந்தையானதால் சரவண   பவன்.
கங்கை ஏந்தியதால் காங்கேயன்.
கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டதால் கார்த்திகேயன்.
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்னி ஏந்தியதால் அக்னி பூ.
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், ஷண்முகன்.
ஆறு குழந்தைகள் ஒன்றியதால் ஸ்கந்தன், கந்தன்.
தமிழில் முருகு என்றால் அழகு; அழகானவன்-அதனால் முருகன்.

விசாகம், கார்த்திகை ஆகிய இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவன் முருகன். இதுவும் ஒரு சிறப்பு. கந்தனின் அவதார சமயத்தில் சிவன் பார்வதியுடன் கங்கையும் அக்னியும் அங்கிருந்தனர். அவன் யார்மீது அதிக அன்பு வைத்திருக்கிறான் என்பதை அறிய விரும்பி, ஒரே சமயத்தில் நான்கு பேரும் குழந்தையை அழைத்தனர். அவன்தான் சிவஞான பண்டிதனாயிற்றே!

சிவன் தந்தை; அக்னி வளர்ப்புத் தந்தை.
பார்வதி தாய்; கங்கை வளர்ப்புத் தாய்.
அவன் ஸ்கந்தன், விசாகன், சாகன், நைகமேயன் என நான்கு உருவம் கொண்டான்.

சிவனிடம் ஸ்கந்தனும், பார்வதியிடம் விசாகனும், அக்னியிடம் சாகனும், கங்கையிடம் நைகமேய னுமாகத் தாவிச்சென்று அனைவரையும் மகிழ்வித்தானாம். முருகு என்றால் தமிழில் அழகு என்று பொருள். இதில் மற்றொரு தத்துவமும் உண்டு. அத்ரிக்கும் அனுசூயா தேவிக்கும் வினோதமாக உதித்த குழந்தை தத்தாத்ரேயர். பிரம்மா, விஷ்ணு, சிவ ஐக்கியமான உடல்; மூன்று தலை; ஆறு கைகள். இதற்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?

மு என்றால் முகுந்தன்- அதாவது விஷ்ணு.
ரு என்றால் ருத்ரன்- அதாவது சிவன்.
கு என்றால் கமலத்தில் உதித்தவன்- அதாவது பிரம்மன்.

அதிகமாக மகாராஷ்டிரத்தில் தத்தாத் ரேயரை பரமகுருநாதராக வணங்குவர். மகா விஷ்ணுவை ஹயக்ரீவ அவதாரத்தில் ஞானகுருவாக வைணவர்கள் வணங்குவர். கிருஷ்ண அவதாரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து கிருஷ்ணம் வந்தே ஜகத்குரு என போற்றப்படுகிறார்.

பரமசிவன் தட்சிணாமூர்த்தியாக- ஞானமௌன குருவாக மதிக்கப்படுகிறார். பிரம்மன் வேதத்தையே கையில் கொண்டிருந்தாலும் அவர் பொய்யுரைத்ததால் அவரை யாரும் கோவில்களில் வணங்குவதில்லை. சதுர்வேத புருஷன் என்று அவரைக் கூறினாலும், ஓம் என்னும் பிரணவத்திற்குப் பொருள் சொல்ல முடியாமல் முருகனால் சிறையிலிடப்பட்டார். நீ அறிவாயோ என சிவன் கேட்க, கேட்கும் முறையில் கேட்கத் தயாராயிருந்தால் சொல்வோம் என்று, தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன்- சிவகுருநாதன்- தகப்பன் சுவாமி எனப் பெயர் பெற்றவன் முருகன்!

சிவன், பிரம்மன் மட்டுமல்ல; மாமன் விஷ்ணுவும் முருகனைப் பணிந்தவரே. விஷ்ணுவின் சக்கரம் திருத்தணிகை முருகன் மார்பில் பதிந்து விட்டபோது, அதை பெருமாள் பணிந்து கேட்க, முருகன் எடுத்து அளித்தானாம். இன்றும் தணிகேசனின் மார்பில் சக்கரம் பதிந்த அடையாளம் இருக்கி றது. அதை சந்தனத்தால் மூடுகிறார்கள். எனவே, ஸ்கந்தன் (ஒன்றியவன், சேர்ந்தவன்) ஞானஸ்கந்தன்- ஞானபண்டிதன்- ஞானகுருநாதனாக வணங்கப்படுகிறான். குகன் என்ற பெயர், பக்தர்களின் இதயக் குகையில் இருக்கும் எந்தக் கடவுள்களுக்கும் ஒப்பும் என்றாலும், முருகனுக்கே அது உரியதாக உள்ளது. காசியிலிருந்து திரும்பிய முத்துசுவாமி தீட்சிதர் திருத்தணிகை வந்து, முதன்முதலாக ஸ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி என்று பாடினார்.

ஸ்ரீவைகுண்டம் வாழ் குமரகுருபரன் ஊமையாக இருக்க, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதமிருந்து பயன் கிட்டாததால் கடலில் விழ யத்தனித்தபோது, அர்ச்சகர் வடிவில் வந்த முருகன் பூவைக் காட்ட, ஊமையாக இருந்த குமரகுருபரன் பூமருவும் என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினான் என்றால், முருகனின் அருளை என்னவென்று சொல்வது!

குமரகுருபரர் - தமது கந்தன் வரலாறான கந்தர் கலிவெண்பாவில் இவ்வாறு கூறுவார்:

(ஊமை பக்தருக்கு திருச்செந்தூர் முருகன் அடி எடுத்துக் கொடுக்கப் பாடியது.)

சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

உயிரை மாய்த்துக் கொள்ள, கோபுரத்தினிற்று விழுந்தவரை ஏற்று, முத்தைத் தரு....... என்று பதம் எடுத்துக் கொடுத்த முருகன் அருளால் அருணகிரிநாதர் இவ்வாறு பாடுவார்:

ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

காஞ்சி குமரக்கோட்டத்திலும் கச்சியப்ப சிவாச்சாரியருக்கு திகடச்சக்கர என ஆனைமுகன் பாடலை அடி எடுத்துக் கொடுத்து தமிழில் கந்தபுராணம் பாட வைத்தார். அக்கோவிலிலேயே அரங்கேற்றம் செய்தபோது- அந்த ஆரம்ப அடியே இலக்கணக் குற்றம் என ஒரு புலவர் சொல்ல, முருகனே முதிர்ந்த புலவனாக வந்து தெளிவு படுத்தி தரிசனம் தந்தார். காஞ்சி குமரப் பெருமானால் அடி எடுத்துக் கொடுக்கப்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் முருகன் அவதாரத்தை இவ்வாறு கூறுவார்:

அருவமும் உருவமாகி
அநாதியாய் பலவாய், ஒன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற ஜோதிப்
பிழம்பதோர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு
உதித்தனன் உலகம் உய்ய!

இந்தப் பாடலை உள்ளன்புடன் ஓதினால் குழந்தைப் பேறு பெறலாம். - நாரதர் பழம் ஒன்றை சிவனிடம் வழங்க கணபதி சிவபார்வதியை வலம் வந்து பழத்தைப் பெற, கோபம் கொண்ட பாலன் தண்டம், கௌபீனம் அணிந்து பழனி ஆண்டியானான். முற்காலத்தில் பஞ்சாயதன பூஜை என்ற வழக்கமிருந்தது. சிவன், அம்பிகை, கணபதி, விஷ்ணு, சூரியன் ஆகியோரே அதற்குரிய தெய்வங்கள். சிவ பஞ்சாய தனம்  என்றால், சிவன் நடுவே இருப்பார். மற்ற நான்கு தெய்வ வடிவங்கள் நான்கு புறமும் இருக்கும். இதனில் முருகன் இல்லை. திருச்செந்தூர் முருகன் ஆதிசங்கரரிடம் சிறிது விளையாடினான். சங்கரருக்கு நோய் ஏற்பட்டது. செந்தூர் முருகன்மீது அவர் புஜங்கம் பாட, நோய் தீர்ந்தது. அதன்பின் முருகனை பஞ்சாயதன தெய்வ ரூபங்களுடன் சேர்த்து ஷண்மதம் என போற்றி வழிபட வகுத்தார். ஷண்முகனே ஷண்மதம் என போற்றும் அளவுக்கு பக்தர்கள் வழிபடு கிறார்கள். எனவே முருகனை நாம் நம்பிக்கையுடன் வழிபட்டால் நமது வினைகள் அனைத்தையும் தீர்த்திடுவான் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. கந்தசஷ்டியில் முருகனை வழிபட்டு அவன் அருளைப் பெற்றிடுவோம்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் ....

உலகில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதனை அழித்திட ஆண்டவன் அவதாரம் செய்கிறான். அகங்காரம், காமவெறி கொண்ட இராவணணை மகாவிஷ்ணு, ராம அவதாரம் எடுத்து அழித்தார். இரண்ய கசிபுவின் ஆணவத்தை அடக்க மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து அழித்தார்.  சூரபத்மாதியர்களை பரமசிவனே மறுவுருவமாக- சுப்ரமண்யனாக உதித்து அழித்தார். மற்ற அசுரர்களின் அழிவை வதம் என்று கூறும் நாம் சூரபத்ம அழிவை மட்டும் ஏன் சம்ஹாரம் என்கிறோம். மாமரமான சூரனை முருகன் வேலால் துளைக்க, அதன் ஒரு பாதி மயிலாகி முருகனுக்கு வாகனமாகியது. மறுபாதி சேவலாகி, அதனைக் கந்தன் கொடியாக ஏந்தினான். அவர்கள் ஒப்பந்தமும் அவ்வாறே. இருவரும் மற்றவரை ஏந்த வேண்டும். இந்த மாதிரியான வினோதம் முருகப் பெருமானுக்கு மட்டுமே.

கஜமுகாசுரனை வென்ற கணபதிக்கு அசுரன் எலியாகி வாகனமானான்; ஆனால் அவனை கணபதி ஏந்தவில்லை. சுப்ரமண்யன் உதித்தது வைகாசி விசாகப் பௌர்ணமி அன்று. விசாக நட்சத்திரத்தில் தோன்றிய மற்ற இருவர்- கணபதியும் ராதாதேவியும். ராதை- கண்ணன் மணமும் அந்த நாளில்தான் நடந்தது. சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூர் என்பதால், கந்தனின் அவதார தின வைகாசி விசாகப் பெருவிழாவும் திருச்செந்தூரில் சிறப்பாக நடக்கிறது. மற்ற எல்லா ஆலயங்களிலும் இவ்விழா விமரிசையாகவே கொண்டாடப்படுகின்றன.

ஆறுமுகமான பொருள் நாம் மகிழ வந்தான்

 இறைவனை அடைவதற்குரிய அகச்சமயங்கள் ஆறு. அவை சைவம், வைணவம், காணாபத்யம், கவுமாரம், சாக்தம்,சவுரம் என்பன. இந்த ஆறு சமயங்களுக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்குபவர் சண்முகநாதர். சமயங்களுக்குரிய சாத்திரப் பொருளாக நிற்கும் புனித மூர்த்தியும் அவரே ஆவார். ஒரு பெரிய நகரத்திற்கு ஆறு வழிகள்; அவை பல இடங்களில் இருந்து புறப்படுகின்றன. பல வகையாக வளைந்து வருகின்றன. முடிவில் அவை அந்த நகரத்திலேயே வந்து முடிகின்றன. அதுபோல, ஆறு சமயங்களும் பல்வேறு வகையாக தொடங்கி, பல்வேறு விஷயங்களை போதித்தாலும் இறுதியில் அவை முழுமுதல் கடவுளான முருகப்பெருமானிடமே முடிவடைகின்றன.

 ஆறு சமயங்களுக்கும் தலைவன்அவனே என்பதற்கு அறிகுறியாகவே, குமரப் பெருமானுக்கு ஆறு திருமுகங்கள் விளங்குகின்றன. அந்த ஆறு முகங்களிலும் ஈஸ்வரனுடைய ஆறு குணங்கள் இலங்குகின்றன. சிவபெருமானின் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களுடன், அம்பிகையின் ஒரு முகமும் சேர்ந்து முருகப்பெருமான் ஆறு திருமுகம் கொண்டு எழுந்தருளினார். சுப்பிரமணிய மூர்த்தியின் ஆறு முகங்களில் ஒரு முகம் ஓம்கார வடிவத்தைஉடையது. அது இன்பத்தை தருவதாகும். மற்றொரு முகம் ஞான மொழியை மொழியும்.
இன்னொரு முகம் சரவணபவ என்ற ஆறெழுத்தைக் கூறும் பக்தர்களின் வினைகளைத் தீர்க்கும். ஒரு முகம் ஞானசக்தியை ஏவி இன்னருளை தரும். மற்றும் ஒரு முகம் அற மார்க்கத்திலிருந்து வழுவிய சூரர்களை அழித்தது போல் வீரத்தை தரும். இன்னொரு முகம், வள்ளி நாயகியின் மனம் கவர்ந்தது போல், பக்தனை தன் பக்கம் ஈர்க்கும்.

 முருகப்பெருமான் நவரத்ன மாலைகளை அணிந்த மார்பைக் கொண்டவர். மணி மகுடங்களை உடையவர். அவரது வனப்பை எடுத்துரைக்க மிகச்சிறந்த எழுத்தாளர்களாலும் முடியாது. இதனால்தான் அருணகிரிநாதர் அவரது ஆறு முகங்களையும் எழுதரிய அறுமுகமும் என்று பாடினார். அழகில் சிறந்த மன்மதர்கள் ஆயிரம் கோடிபேர் ஒன்று சேர்ந்தாலும் குமரக்கடவுளின் பாத அழகுக்குக்கூட இணை வராது. மன்மதனை தன் அழகால் முருகன் ஏளனம் புரிபவன். எனவே, அந்தப் பெருமானுக்குகுமாரன் என்ற திருநாமம் இலங்குகின்றது. நாம் உலகில் காணும் அழகெல்லாம் அழிகின்ற அழகு. குமரப்பெருமானின் அழகோ என்றும் அழியாத அழகு. அவனது அழகை எத்தகைய கைதேர்ந்த சிற்பிகளும் எழுதமுடியாது. முழுமதி போன்ற ஆறு முகங்களும் ஒளிவீசும் 12 மலர்விழிகளும், வைரம் பதித்த செஞ்சுட்டி போன்ற திருவாபரணங்கள், ரத்தின குண்டலங்கள் அணிந்த 12 காதுகளும், செந்தாமரை மலர்ந்தது போன்ற 12 திருக்கரங்களும், பவள மலைமேல் வெள்ளியருவி ஓடுவது போன்ற திருமேனியில் மிளிரும் முப்புரி நூலும், புகழ்பெற்ற ஆடைகளும், அரைஞாண் மணிகளும், பலவினை அகற்றும் பாதாரவிந்தங்களும் கொண்ட அவனது திரு உருவத்தின் பேரழகை வர்ணிக்க வார்த்தை இல்லை. கந்தசஷ்டி திருநாளில் அவன் பாதம் பணிவோம்.
-வரவேற்கிறார் வாரியார்

ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த குமாரஸ்தவம் என்னும் பாராயண நூலில், 25-வது மந்திரம் ஓம் சஷ்டி பதயே நமோ நம என்பதாகும், சஷ்டி தேவியின் நாயகனாக விளங்கும் சண்முகப் பெருமானுக்கு வணக்கம் என்பது இதன் பொருள். சஷ்டிதேவி, தேவசேனைப் பிராட்டியாரின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். அதனால் தேவசேனைக்குரிய சஹஸ்ரநாமத்தில் - ஓம் ஷஷ்ட்யை நம, ஓம் ஷஷ்டீச்வர்யை நம், ஓம் ஷஷ்டி தேவ்யை நம. எனும் மந்திரங்கள் வருகின்றன. ஆறில் ஓர் அம்சமாகத் தோன்றியதால், இவள் சஷ்டிதேவி என்று அழைக்கப்பெறுகிறாள். பெற்ற தாய் கவனிக்காதிருக்கும் காலத்தும், பச்சிளங்குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நாயகி இவள். இந்தத் தேவியைக் குறித்த வரலாறு தேவி பாகவதம் ஒன்பதாம் ஸ்காந்தத்தில் வருகிறது. இவளுக்கு ஸம்பத் ஸ்வரூபிணி என்றும் பெயர். சுவாயம்ப மனு என்பவனின் மகன் பிரியவிரதன். இவனுக்கு இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லாமலே இருந்தது. எனினும், பிரம்மாவின் வற்புறுத்தலின்படி மாலினி என்பவளை மணந்துகொண்டான். திருமணமாகி பல ஆண்டு ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாத காரணத்தால், காச்யபரைக் கொண்டு புத்திர காமேஷ்டி யாகத்தைச் செய்தான் பிரியவிரதன், இதனால் மாலினி, பன்னிரண்டாம் ஆண்டு பிள்ளையைப் பெற்றாள். ஆனால் குறைப் பிரசவமாக இருந்ததால், குழந்தை உருத்தெரியாமலும் உயிரற்றும் இருந்தது. மனம் உடைந்த பிரியவிரதன் குழந்தையை அடக்கம் செய்துவிட்டு, தானும் இறக்கத் துணிந்தான். அப்போது தெய்வாதீனமாக ஒரு பெண் தோன்றினாள். உயிரற்ற - உருவமற்ற அந்தக் குழந்தையை அவள் தொடவும், குழந்தை உருவத்துடன் உயிர்பெற்று அழத் தொடங்கியது.

பிரிய விரதன் மிகவும் நெகிழ்ந்து தேவி! தாங்கள் யார் என்று கேட்டான். நான் சஷ்டி தேவி, தேவசேனையின் அம்சம். பிரம்மாவின் மானசீக புத்திரி. நான் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பவள், பிள்ளைப்பேறு இல்லாதவருக்கு அவ்வரத்தை அருள்பவள். மாங்கல்ய பலம் இழக்கும் நிலையில் உள்ளவருக்கு அதனை நிலைப்படுத்துபவள். அவ்வாறே வினைப்பயன் எப்படியிருப்பினும், அவரவர் வேண்டுகோளுக்கு இணங்கி கணவன்மார்களுக்கு இல்லற சுகத்தையும் செல்வப்பேற்றையும் அருள்பவள் என்று கூறி, அந்தக் குழந்தைக்கு சுவிரதன் என்று பெயரிட்டாள். குழந்தைகளுக்கு நலமும் வாழ்வும் அருளும் சஷ்டிதேவி, எப்போதும் குழந்தைகளின் அருகிலேயே இருந்துகொண்டு விளையாட்டு காட்டுவதிலும் திருப்தி கொள்வாள். இவள், அஷ்ட மாத்ரு தேவதைகளில் சிறந்தவள், யோகசித்தி மிக்கவள். பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு ஆறாம் நாளிலும், இருபத்தோராம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐப்பசி மாதத்தில் வரும் மஹா ஸ்கந்த சஷ்டியைப் போன்று, ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியை குமார சஷ்டி என்று அழைப்பர்.  அதைப் போல கார்த்திகை மாதத்து வளர்பிறை சஷ்டியை சம்பக சஷ்டி என்றும், சுப்ரமண்ய சஷ்டி என்றும் கூறுவார்கள். இந்த சம்பக சஷ்டியை அனந்தசுப்ரமண்ய விரதம் என்றும் அழைப்பர். குழந்தைப்பேறு அளிக்கும் தெய்வங்களுள் முதன்மையானவர் முருகன் ஆவார். செகமாயை என்று தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில், முருகனையே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுகிறார். இந்தத் திருப்புகழைப் பாராயணம் செய்வோர்க்கு, நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்று வள்ளிமலை சச்சிதானந்தா சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். தென்காசிக்கு அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் என்று ஊரில் குமார சஷ்டி விழா ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனை தாரக ஹர குமார சஷ்டி என்று அழைக்கிறார்கள். இவ்விழாவில்  படிப் பாயாசம் வழங்குவது விசேஷமானது.

திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை இவ்வாறு கூறுகிறது:

ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே

ஷடரிம் - காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன். ஷட்விகாரம் - உண்டாக்குதல், இருத்தல், வளர்த்தல், மாற்றமடைதல், குறைதல், அழித்தல், என்ற ஆறு செயல்கள் அற்றவன். ஷட்கோசம் - அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன். ஷட்ரசம் - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு, என்ற ஆறு வகை சுவைகளாக இருப்பவன். ஷட்ஸூத்ரம் - ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன். ஷண்மதம் - காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மத தத்துவமாக இருப்பவன். ஆக, ஷண்முகனை வணங்குதல் ஷண்மத ஈடுபாட்டுக்குச் சமம். என்னே ஷண்முகப் பெருமை ! ஷட்வேதாங்கம் - சிக்ஷõ, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன். ஷண்முகம் - ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன்.

வடமாநிலங்களில் சட்பூஜை!

தமிழ்நாட்டில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை (தீபாவளி) க்குப் பின் வரும் சஷ்டி திதி அன்று முருகப் பெருமானைப் போற்றி வழிபடுகின்றனர். அன்று விரதம் கடைப்பிடித்து சஷ்டி விழா கொண்டாடுவதுபோல், வடமாநிலங்களில் சில இடங்களில் ஐப்பசி மாத சஷ்டியன்று சட் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இந்த விழா நீர் நிலைகளில் நடைபெறும் விழாவாகும். தங்கள் குடும்பத்தினரும், உறவினர்களும் நலமுடன் இருக்க சுமங்கலிப் பெண்கள் மூன்று நாட்கள் விரதம் கடைப்பிடித்து இவ்வழிபாட்டினைச் செய்கிறார்கள். கங்கை நதி ஓரங்களிலும்; பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலும் சூரிய பூஜையை நடத்துவது வழக்கம். பூஜைப் பொருட்களான வெற்றிலைப் பாக்கு, பூ, பழங்கள், தேங்காய், சந்தனம், கரும்பு, இனிப்புகள், பலகாரங்களை பெரிய கூடையில் வைத்து ஆண்கள் நீர் நிலைக்கு எடுத்து வருவார்கள். நதிக்கரையோரத்தில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சுத்தம் செய்து, கரும்புகளால் கூடாரம்போல் அமைத்து, அதில் பூஜைக்குரிய பொருட்களை வைப்பார்கள்.

சுமங்கலிகள் சஷ்டி அன்று மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும், மறுநாள் விடியற்காலையிலும் நீராடி, சூரியன் உதயமானதும் நீர் நிலைக்குள் நின்று சூரியனுக்கு அர்க்கியம் விட்டு, மந்திரம் சொல்லி பூஜை செய்வார்கள். மாலையிலும் காலையிலும் சூரியனை வழிபடுவதன் நோக்கம்- இரவும் பகலும் எப்படி சமமாக உள்ளதோ (ஐப்பசியில் இரவும் பகலும் சமமாக இருக்கும்) அதுபோல வாழ்வில் இன்பமும் துன்பமும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக. தாங்களும், தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் நலமுடனும் சுகமுடனும் வாழவேண்டும் என்று சூரியனை வணங்குவதே சூரிய சஷ்டி வழிபாட்டின் குறிக்கோளாகும். இந்தப் பூஜையை சட் பூஜை, ரவிசஷ்டி என்று வடமாநிலத்தவர்கள் போற்றுகிறார்கள்.

 
மேலும் முருகன் வழிபாடு! »
temple news
படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை ... மேலும்
 
temple news
சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு ... மேலும்
 
temple news
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு ... மேலும்
 
temple news
கந்தசஷ்டி விரதநாட்களில், முதல்படைவீடான திருப்பரங்குன்றத்தில் முருகனை தரிசித்தால் செல்வவளம் ... மேலும்
 
temple news
மாதம் இருமுறை சஷ்டி வரும். ஆனாலும், ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி தனி விசேஷம் பெற்றது. பழநியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar