கிரிவீதியில் ஆக்கிரமிப்பு: பாவம் அலகு குத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2017 02:02
பழநி, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயில் கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டுகொள்ளாததால் அலகு குத்தி வரும் பக்தர்கள் நேராக நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தைப்பூசத்திருவிழா எதிரொலியாக பழநி மலைக்கோயில் கிரிவீதிகள், அடிவார ரோடுகளில் ஏராளமான வியாபாரிகள் குவிந்துள்ளனர். இவர்கள் ரோட்டின் நடுவே நுாற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகள், இருசக்கர வாகனங்களை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இதனால் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. பாதயாத்திரை பக்தர்கள் காவடி, பால்குடங்கள், உடலில் அலகு குத்தி வரும்போது இடையூறு ஏற்படுகிறது. தைப்பூச விழா நேரத்தில் ஆக்கிரமிப்புகளை கோயில் நிர்வாகத்தினர் போலீஸ் உதவியுடன் பெயரளவிற்குத்தான் அகற்றுகின்றனர். அதன்பின் கோயில்அதிகாரிகள், போலீசார் ஏனோ கண்டுகொள்வது கிடையாது.
ஆக்கிரமிப்புக்கு ஆதரவு: பழநி அடிவாரம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, அய்யம்புள்ளிரோடு, பூங்காரோடு பகுதிகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக கிரிவீதியில் வாகனங்கள் நுழைய தடை விதித்துள்ளனர். அதேசமயம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதால், நீண்ட வேலால் அலகு குத்திச் செல்லும் பக்தர்கள் நேராக நடந்து வரமுடியாமல் சிரமப்படுகின்றனர். முக்கிய நாளான இன்று ஒருநாளாவது ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.