பொன்னம்பல மேட்டில் தர்ம சாஸ்தா கோயில் : தேவசம்போர்டு தலைவர் தகவல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2017 12:02
திருவனந்தபுரம்: மகரவிளக்கு நாளில் மகரஜோதி தெரியும் பொன்னம்பலமேட்டில் தர்ம சாஸ்தா கோயில் கட்டப்படும் என்றும் இதற்காக ஒரு ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறினார். செறுகோல்புழா கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: சபரிமலையில் மகத்துவம் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நடைபெற்று முடிந்த மண்டல மகரவிளக்கு சீசனை அதற்கு முந்தைய சீசனுடன் ஒப்பிடும் போது 19 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர். இதில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆறு லட்சம் பேர். சபரிமலையில் பெண்களுக்கு தடை இல்லை என்பதின் அடையாளாக இதை தவிர வேறு எதையும் கூறிவிட முடியாது.இந்துக்கள் தற்போது பாரம்பரியத்தின் பரிசுத்தியில் முன்னேற்றமும், புத்துணர்வும் உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றனர். பக்திதான் இந்துக்களின் சக்தி. மத ஆசாரங்கள் அப்படியே கடைபிடிக்க வேண்டியவை. பிரச்னையை ஏற்படுத்தினால் அதை பார்த்துக் கொண்டு ஐயப்ப பக்தர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனால்தான் அரசியலும், சமுதாயமும் பார்க்காமல் சபரிமலையின் மகத்துவத்தை கட்டி காக்க தேவசம்போர்டு போராடுகிறது.வரும் 20-ம் தேதி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது தேவசம்போர்டு தலைவரை கட்சி சேர்க்க கோரி மனு தாக்கல் செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.சபரிமலையில் மூலஸ்தானமான பொன்னம்பலமேட்டில் தர்மசாஸ்தா கோயில் அமைக்க மத்திய அரசிடம் ஒரு ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. மகர சங்கரம நாளில் பொன்னம்பலமேட்டில் இனி பம்பா மேல்சாந்தி பூஜைகள் நடத்துவதற்கு தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.