பதிவு செய்த நாள்
11
பிப்
2017
12:02
திருமழிசை: ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தையில் மகம் திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு, திருமழிசை ஆழ்வாருக்கு நேற்று தேரோட்டம் நடந்தது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள, பக்திஸார் எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த மாதம், 27ல் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பிப்., 1 மாலை, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து தையில் மகோற்சவ திருவிழாவை முன்னிட்டு, காலை, மாலையில் சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். விழாவில், 6ம் தேதி இரவு ஜெகந்நாத பெருமாள் கருட வாகனத்திலும், ஆழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அவதார மகோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக, அதிகாலை, 5:30 மணிக்கு திருமழிசை ஆழ்வார் தேரில் எழுந்தருளினார். பின், காலை 9:00 மணிக்கு பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்ட தேரில், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மதியம் 1:30க்கு கோவிலை வந்தடைந்தார். இதில், திருமழிசை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள், திரளாக கலந்து கொண்டனர்.வரும், 13ம் தேதி மாலை, விடையாற்றி உற்சவத்துடன் தையில் மகம் திருஅவதார மகோற்சவ திருவிழா நிறைவு பெறும்.