பதிவு செய்த நாள்
17
பிப்
2017
11:02
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயில் மாசித்திருவிழா மார்ச் 1 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மார்ச் 10ல் தேரோட்டம் நடக்கவுள்ளது.
முருகனின் ஆறு படை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்துார் முருகன் கோயில் உள்ளது. இங்கு மாசித்திருவிழா ஆண்டு தோறும் நடக்கும்.இந்த ஆண்டு மாசித்திருவிழா, பிப்., 28 மாலை 4.30 மணிக்கு கொடிப்பட்ட ஊர்வலம் துவங்குகிறது. மார்ச் 1 ல் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறப்பு 5.30 முதல் 6 மணிக்குள் கொடியேற்றம், சிறப்பு அபிேஷகம், தீபாரதனை நடக்கிறது. மார்ச் 5 ல், இரவு 7.30 மணிக்கு குடவரை வாயில் தீபாரதனை, பின் சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மார்ச் 7 ல் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் எழுந்தருளல், சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு குமரவிடங்க பெருமான் சிவப்பு சாத்தி கோலத்தில், தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகிறார். மார்ச் 8 ல், காலை 5 மணிக்கு வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி வீதியுலா. பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மார்ச் 10 ல், காலை 6.30 முதல் 7 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதி வலம் வருகிறது. மார்ச் 11 ல் இரவு 7 மணிக்கு பூச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச் 12 ல் மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமி விதியுலா நடக்கிறது. விழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. கோயில் மண்டபத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.