பதிவு செய்த நாள்
24
அக்
2011
10:10
திருச்சி: திருச்சி அருகே குமாரவயலூரில், ஞானமும், பக்தியும் விளையும், பழம்பெருமை வாய்ந்த சுப்ரமணியஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான், தன் வேலினால் தடாகம் உருவாக்கி, தனது தாய், தந்தையரான சிவனையும், உமையவளையும் வழிப்பட்ட சிறப்புக்குரிய ஸ்தலம் வயலூராகும்.அருணகிரிநாதரின் நாவில் வேலினால் "ஓம் எழுதி, அவர், உலகம் புகழும் "முத்தைத்தரு என்று துவங்கும் திருப்புகழை பாட, முருகப்பெருமான் அருள்பாலித்த ஸ்தலம். இங்கு அருள்பாலிக்கும் சுப்ரமணியரை வணங்கினால் இம்மை, மறுமைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம்.ஆண்டுதோறும் இங்கு கந்தசஷ்டி பெருவிழாவும், லட்சார்ச்சனை மற்றும் சண்முகார்ச்சனை வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு, தீபாவளி பண்டிகை நாளன்று கந்தசஷ்டி பெருவிழா துவங்கி, தொடர்ந்து ஏழு நாட்கள் நடக்கிறது. 26ம் தேதி காலை ஒன்பது மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. 10 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கியது. 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெற்றது. மாலை ஆறு மணிக்கு, ரக்ஷாபந்தனம் எனப்படும் காப்பு கட்டுதல் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரவு எட்டு மணிக்கு, சிங்காரவேலவர் பச்சைமயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. 27ம் தேதி காலை ஒன்பது மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்து, சிங்கார வேலவர் கேடயத்தில் திருவீதியுலா வருகிறார். 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு, சிங்காரவேலவர் சேஷ வாகனத்தில் திருவீதியுலா நடக்கிறது. 28ம் தேதி, காலை ஒன்பது மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்து, சிங்கார வேலவர் கேடயத்தில் திருவீதியுலா வருகிறார். 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு, சிங்காரவேலவர் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடக்கிறது. 29ம் தேதி காலை ஒன்பது மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்து, சிங்கார வேலவர் கேடயத்தில் திருவீதியுலா வருகிறார். 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு, சிங்காரவேலவர் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கிறார். 30ம் தேதி, காலை ஒன்பது மணிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. அடுத்து, சிங்கார வேலவர் கேடயத்தில் திருவீதியுலா வருகிறார். 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு, சிங்காரவேலவர் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கிறார். 31ம் தேதி, காலை ஏழு மணிக்கு சண்முகார்ச்சனை நடக்கிறது. 10 மணிக்கு சக்திவேல் வாங்குதல் வைபவம். இரவு 7.30 மணிக்கு, சிங்காரவேலவர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளிக்கிறார்.வரும் 1ம் தேதி, காலை ஒன்பது மணிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு, சுப்ரமணியருக்கு தேவசேனையுடன் திருக்கல்யாணம் நடக்கிறது.கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி, தினந்தோறும் மாலை, பல்வேறு பிரபலங்கள் நடத்தும் நாட்டிய, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.