தூத்துக்குடி சிவன் கோயிலில் திருக்கல்யாண விழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2011 10:10
தூத்துக்குடி:தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றதில் இருந்து பாகம்பிரியாள் அம்மன், சங்கரராமேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்து வருகிறது.தினமும் பல்வேறு வாகனங்களில் பாகம்பிரியாள் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வருதல் நடந்து வருகிறது. 9ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. கோயிலில் இருந்து பாகம்பிரியாள் அம்மன் சிறப்பு பூஜைகளுடன் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் தேரில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களின் பக்திவரச்தோடு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.தேருக்கு முன்பாக செண்டைமேளம், தவில், தாரைதப்பட்டைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்றது. தேருக்கு முன்பாக யானை சென்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவின் முக்கிய திருவிழாவான திருக்கல்யாணவிழா நாளை நடக்கிறது.