பதிவு செய்த நாள்
20
பிப்
2017
12:02
குன்னுார் : அருவங்காடு முத்தப்பன் பக்தஜன சமிதியின் ஒன்பதாவது ஆண்டு முத்தப்பன் திருவப்பன திருவிழா நடந்தது. அருவங்காடு முத்தப்பன் பக்தஜன சமிதியின் சார்பில், அருவங்காடு செட்டியார் காலனி, கலைமகள் சந்திப்பில், ஒன்பதாவது ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பகல், 12:00 மணிக்கு முத்தப்பன் மலையிறக்கல், கலசாட்டம் ஆகியவை நடந்தன. மதியம், 1:30 மணிக்கு முத்தப்பன் வெள்ளாட்டம், மதியம் 2:30, மணிக்கு பள்ளிவேட்டை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அருள்வாக்கு நிகழ்ச்சியில் குன்னுார், ஊட்டி, கூடலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பெண்கள் மற்றும் சிறுமியர் தாளப்பொலி ஊர்வலம் அருவங்காடு மெயின் கேட் வரை சென்று, மீண்டும் திருவிழா திடலை அடைந்தது. இதில், வேளஞ்சேரி தேவகலா கலாலய குழுவினரின் பிரசன்ன கலாரூபம், சிங்காரி மேளம், களிக்கபாட்டு, கலசம் எழுந்தருளல் ஆகியவை நடந்தன. நேற்று, காலை முத்தப்பன் திருவப்பன திருமுடி சார்த்தல், பள்ளிவேட்டை, அருள்வாக்கு வழங்குதல், தீபாராதனை ஆகியவை நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை முத்தப்பன் திருவப்பன மகோற்சவ விழா கமிட்டி முதன்மை நிர்வாகி ஜெயப்பிரகாஷ், தலைவர் கங்காதரன், முதன்மை ஒருங்கிணைப்பாளர் கிரிஜன், ஒருங்கிணைப்பாளர்கள் வாசு, ஆச்சாரி, பொது செயலாளர் மது உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.