பதிவு செய்த நாள்
21
பிப்
2017
11:02
கோயம்புத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் வருகிற பிப்ரவரி 24 மஹா சிவராத்திரியன்று சத்குருவால் வடிவமைக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ள 112 அடி உயர, யோகத்தின் மூலமான ஆதியோகி சிவனின் திருமுகத்தை மாண்புமிகு பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிஅவர்கள் திறந்து வைக்கிறார். மனித குலத்திற்கு ஆதியோகியின் இணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் உலகிலேயே மிகப் பெரிய முகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் தன் ஆற்றலின் உச்சத்தை அடைய யோக விஞ்ஞானத்தில் உள்ள 112 வழிமுறைகளை அங்கீகரிக்கும் வண்ணம் இந்த முகம் அமைந்துள்ளது.
ஆதியோகிக்கு காணிக்கையாக உலகமெங்கும் நடைபெறவுள்ள மஹா யோக வேள்வியை மாண்புமிகு பிரதமர் புனித தீ மூட்டி துவக்கி வைப்பார். மஹா யோக வேள்வி என்பது ஒரு எளிய யோக பயிற்சியை 10 லட்சம் பேர், ஒவ்வொருவரும் குறைந்தது 100 பேருக்கு கற்று தந்து, அடுத்த மஹாசிவராத்திரிக்கு முன்பாக 10 கோடி மக்களுக்கு யோகாவை கொண்டு செல்வதாகும். இதுபோல் மக்களுக்கு யோகாவை கொண்டு செல்பவர்கள் யோக வீரர்கள் என்று அழைக்கப்படுவர். இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் இந்த ஆதியோகி பிரதிஷ்டை நிகழ்வை தன்னுடைய இன்கிரெடிபில் இந்தியா பிரச்சாரத்தின் அதிகாரபூர்வ சுற்றலா தலமாக அறிவித்துள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெறும் மஹாசிவராத்திரி திருவிழாவின் ஒரு அம்சமாக ஆதியோகி திருவுருவம் திறக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் தமிழகம் மற்றும் தேசம் முழுவதும் ஈஷா தன்னார்வ தொண்டர்களால் அவரவர் ஊர்களிலே நடத்தப்பட்டு பொதுமக்கள் அங்கேயே கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் வரலாற்று சிறப்புமிக்க ஆதியோகி சிவனின் பிரதிஷ்டையை நேரில் அனுபவித்து சக்தியை உணர்வதற்காக அனைவரையும் சத்குரு ஈஷா யோகா மையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வுக்காக வர உள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதிகள் தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்கு நிறைவடையும். சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், சத்குருவின் அருளுரை, திரு. கைலாஷ் கேர், ராஜஸ்தான் ரூட்ஸ், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மற்றும் நிருத்தருத்யா நாட்டிய குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்படும். இந்நிகழ்ச்சி கோடி கணக்கான மக்களை சென்றடையும் வண்ணம் ஒரே நேரத்தில் 7 மொழிகளில் 23 டிவி சேனல்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தளங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மஹாசிவராத்திரி இரவன்று நிலவும் கோள்களின் நிலைப்பாட்டால் மனித அமைப்பின் சக்தி நிலையில் இயற்கையாகவே ஆற்றல் மேல்நோக்கி எழும்புகிறது. ஒருவர் அன்றைய இரவு முழுவதும் விழிப்புணர்வான நிலையில் முதுகுத்தண்டை நேராக இருத்தி கண் விழித்திருப்பாரேயானால், அவர் உடல் மற்றும் உள்நிலையில் முழுமையான நலனை பெற முடியும்.
ஆதியோகியின் முக்கியத்துவம் குறித்து சத்குரு கூறும் பொழுது “உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச் சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் விழிப்புணர்வு அற்ற நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், விழிப்புணர்வுடன் தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்த பிறகே செல்லக்கூடிய, கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக, அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது. உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுயமாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கக் கூடியதாக மாறும். இன்று பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பது போல, தங்களை எப்படி அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்கவேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும், மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இதுநிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும், சாத்தியமாகவும் மாறுவார்கள்.” என்றார்.
“தமிழ்நாட்டில், மாதத்தின் மிக முக்கியமான நாளாக அமாவாசை நாள் கருதப்படுகிறது. அதனால் ஒவ்வொரு மாதமும் அந்நாளில் ஆதியோகிக்கு முதல் அர்ப்பணிப்பை இங்கு அருகில் வாழும் உள்ளூர் மக்கள் படைப்பார்கள். இந்த அற்புதமான மக்களின் அன்பையும், பக்தியையும் கௌரவிக்கும் விதமாக இந்த முறை உருவாக்கப்பட்டுள்ளது.”-என்று சத்குரு கூறினார். நம் பூமி சுழன்றுகொண்டே இருப்பதால் ஒரு மைய விலக்கு விசையை உருவாக்குகிறது. இந்த விசைசக்தி 11 டிகிரி அட்சரேகையில் உச்சமாக இருந்து 33 டிகிரி வரை நல்ல நிலையில் இருக்கிறது. குறிப்பாக 11 டிகிரியில் 100 சதவிகிதம் செங்குத்தாக செயல்படுகிறது. ஈஷா யோகா மையம் அட்சரேகை 11 டிகிரியில் அமைந்திருப்பதால், மஹாசிவராத்திரியன்று அங்கு இருப்பது மிக சிறப்புடையதாகும். மஹாசிவராத்திரிக்கு முன்னதாக புகழ் பெற்ற கலைஞர்கள் பங்கு பெறும் 3-நாள் யக்ஷா திருவிழா பாரதத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடன வடிவங்களை பாதுகாக்கவும், ஊக்கபடுத்தவும் நடைபெறுகிறது. இந்த வருடம் டாக்டர்.மைசூர் மஞ்சுநாத் மற்றும் டாக்டர்.மைசூர் நாகராஜ் அவர்களின் வயலின் கச்சேரி, பத்மஸ்ரீ ஸ்ரீமதி மீனாக்ஷி சித்ராஞ்சன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், ஸ்ரீமதி பிஜாயினி சத்பதி மற்றும் ஸ்ரீமதி சுரூபா அவர்களின் ஒடிசி நடன நிகழ்ச்சிகள் முறையாக பிப்ரவரி 21, 22, 23 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி நிகழ்வில், ஆதியோகி சிவனின் திருமுக திறப்பினை காண அனைவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.தொடர்புக்கு 9442641563, 8903816431