பதிவு செய்த நாள்
21
பிப்
2017
11:02
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 24ல் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லட்சார்ச்சனை மற்றும் லட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இடையே, தங்களில் யார் பெரியவர் என்ற பிரச்னை எழுந்தபோது, அடி, முடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் காட்சி அளித்த நாள், சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
நான் எனும் அகந்தை அடங்கினால் மட்டுமே, பரம்பொருளை அடைய முடியும் என்பதை உணர்த்த, லிங்கோத்பவ மூர்த்தியாக அருணாசலேஸ்வரர் எழுந்தருளிய திருத்தலம் திருவண்ணாமலை ஆகும். இதை முன்னிட்டு, அருணா சலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.வரும், 24ல் மகா சிவராத்திரி விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்க உள்ளது. அன்று அதிகாலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னிதியில் லட்சார்ச்சனை நடக்கும். மாலை, 6:00 மணிக்கு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் லட்சம் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபடுவர். தொடர்ந்து இரவில், நான்கு கால பூஜை நடக்கும். இரவு, 8:30 மணிக்கு முதல் கால பூஜை, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள, லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மகா சிவராத்திரி அன்று உருவான கோவில் என்பதால், அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் கலை அரங்கத்தில் மாலை, 6:00 மணி முதல், விடிய விடிய தேவார பாடங்கள், இன்னிசை, பரதநாட்டியம், மற்றும் கோவில் ராஜகோபுரம் எதிரில், 108 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்ச்சி ஆகியவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.