திருப்புவனம்: திருப்புவனத்தில் மாசி சிவராத்திரி விழாவிற்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ராட்சத அருவா தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அரிவாள் பட்டறைகள் செயல்படுகின்றன. உழவு கருவிகள் உள்ளிட்ட இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் அதிகளவில் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் விவசாயம் கைவிரித்து விட்ட நிலையில் கோயில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பயன்படும் அரிவாள் தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு அடி முதல் 27 அடி உயரம் வரை அரிவாள் தயாரிக்கப்படுகிறது. வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை சிவராத்திரி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் எங்கிருந்தாலும் சிவராத்திரி அன்று குலதெய்வத்தை வழிபட கூடுவது வழக்கம். அன்றைய தினம் காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடன் அருவா செலுத்துவது வழக்கம். இதற்காக ராட்சத அருவா தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். கனரக வாகனங்களின் சேதமடைந்த இரும்பு பட்டைகளை வாங்கி வந்து அவற்றை நெருப்பில் இட்டு அருவா தயாரிக்கின்றனர்.
உசிலம்பட்டி பக்தர் 27 அடி உயர அரிவாள் தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சதீஸ்குமார் கூறுகையில்,“ இதுவரை 18 அடி உயரம் வரை தான் தயாரித்துள்ளோம். முதல் முறையாக உசிலம்பட்டி பக்தருக்காக 27 அடி உயரத்தில் அரிவாள் தயாரித்துள்ளோம். நுனிப்பகுதியின் அகலம் 3 அடி, கீழ்பகுதி 4 இஞ்ச் ஆகும். பெரும்பாலும் ராட்சத அரிவாள் தயாரிப்பில் கைப்பிடி வாகை அல்லது வேம்பு மரத்தில் செய்யப்படும், இந்த வகை அரிவாள்களை கோயில்களில் கருப்பண்ணசாமி சன்னதியில் சார்த்தி வைப்பார்கள், 27 அடி உயர அரிவாளை சிமென்ட் தளத்தில் நிலை நிறுத்த இருப்பதால் இரும்பு கைப்பிடி போட்டு இணைத்துள்ளோம்.
நேர்த்திக்கடன் அரிவாள் தயாரிப்பில் கூலி என தனியாக நிர்ணயிப்பது கிடையாது. பக்தர்கள் விருப்ப்பட்டு கொடுப்பது தான். கடந்த 20 நாட்களாக மூன்று பேர் கொண்ட குழு 27அடி உயர அரிவாள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம், என்றார். பக்தர் கூறுகையில்,“சாதாரணமாக அரிவாள்களை கோயில் சுவரில் சார்த்தி வைப்பது வழக்கம், நாங்கள் இதனை கோயில் முன்பு சிமென்ட் தளத்தில் நிலை நிறுத்தி நாற்புறமும் கம்பி வைத்து கட்ட உள்ளோம். ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு ஆயுதம் வழங்க நேர்ந்து கொண்டிருந்தோம், இந்தாண்டு தான் நிறைவேறியுள்ளது, என்றார்.