பதிவு செய்த நாள்
21
பிப்
2017
11:02
காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னர்கள், ஆட்சி காலத்தில் பல கோவில்களை கட்டினர். அவர்களை தொடர்ந்து பிற்கால மன்னர்களும் அந்த பணியை செய்தனர். இதனால் சைவம், வைணவ கோவில்கள் சிறப்பு பெற்று விளங்கி வருகிறது. 7ம் நுாற்றாண்டில் பல்லவ மன்னனால், கைலாச நாதர் கோவில் மணல் கற்களால் கட்டப்பட்டது. அந்த கோவிலில் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. கோவிலே சிற்பங்களாக காட்சியளிக்கும். இதன் அழகை காண பல்வேறு நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சைவத்தில் நாயன்மார்களாலும், வைணவத்தில், ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. இந்நிலையில், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கான வசதி இன்னும் தேவையுள்ளதாக இருக்கிறது.
அவற்றின் நிலை குறித்து பக்தர்கள் கூறும் கருத்துகள்: காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் கட்டடக்கலையில் சிறந்து விளங்க கூடியது கைலாச நாதர் கோவில். மற்ற கோவில்களில் இருப்பது போல் இதன் வழிபாடு நேரம் மாற்றம் வேண்டும். கழிப்பறை பெரும்பாலும் மூடியே கிடக்கும். குடிநீர் வசதி கிடையாது. வெளிநாட்டினர், பிற மாநிலத்தவர் தெரிந்து கொள்ளும் வகையில் கோவில் தல வரலாறு வைத்தால் பயனுள்ளதாக இருக்கும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், தொல்லியல் துறை பராமரிப்பிலும் இருந்து வருகிறது. அதனால் வேலையை ஒரு நிர்வாகம் செய்ய முடியாது.
எஸ்.நேசகுமார், காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் இங்கு தான் அதிகப்படியான உற்சவம் நடக்கிறது. கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் இருப்பதாக எனக்கு தெரிகிறது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம், குடிநீர் வசதி உள்ளது. இந்த கோவிலுக்கு பிற மாநிலத்தவர்கள் அதிகமாக
வருகின்றனர். வெயில் நேரத்தில், கல் தரையில் நடக்க முடியாது. தரை விரிப்பு மற்றும் ரப்பர் போட்டுள்ளனர் அதிலும் நடக்க முடியாது. கோடை காலத்தில் அதற்கான வசதியை செய்ய நடவடிக்கை எடுத்தால் வயதானவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
எஸ்.சுவாமிநாதன், காஞ்சிபுரம்
படைப்பு தொழில் கோலத்தில் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி இங்கு அருள்பாலிக்கிறார். சூரபத்மனை வதம் செய்த பின் அந்த தோஷம் நீங்க இக்கோவில் மூலவர் சன்னிதி அருகில் இருக்கும் சேனாபதீஸ்வரரை வழிபட்டு விமோசனம் பெற்றார். வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு இங்குள்ள உற்சவருக்கு உள்ளது. பிரமோற்சவத்தின் போது நாக சுப்பிரமணியர் வீதியுலா செல்வார். உற்சவர் தலைக்கு மேல் நாகம் இருக்கும். நாக தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் பலன் கிடைக்கும். கந்தபுராணம் இந்த தலத்தில் தான் இயற்றப்பட்டது.
ஆர். வெங்கடேசன், காஞ்சிபுரம்
திவ்ய தேச தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியை தவிர மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிகம் காண முடியாது. அமைதியான கோவில். தரிசனம முடித்து விட்டு, வெளியில் பக்தர்கள் அமர்வதற்கு போதிய இடம் இருக்கிறது. ஆனால் குடிநீர் மற்றும்கழிப்பறை வசதியும் கிடையாது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பராமரிப்பு நன்றாக இருக்கிறது. கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கும் பெருமாளை தரிசனம் செய்தால் நிம்மதியாக இருக்கிறது.
எம்.அண்ணாதுரை, காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ கோவில்களில் அஷ்டபுஜபெருமாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் குளத்தின் சுற்றுச் சுவர், கடந்த வர்தா புயலுக்கு இடிந்து விழுந்தது. அதை இன்னும் சீரமைக்கவில்லை. கோவில் வெளி பிரகாரத்தில் மதில் சுவர் இடிந்துள்ளது. அதையும் சீரமைக்க வேண்டும். இந்த கோவிலுக்கு சொந்தமான சில நிலங்கள் உள்ளன. அவற்றில் வாடகை முறையாக வசூல் செய்தால், கோவிலுக்கு வருமானம் கிடைக்கும். குடிநீர் வசதி ஏற்படுத்தினால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்.
டி. கருணாநிதி, காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சமீப காலமாக பிபலமாகி வருகிறது. இதற்கு முன் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. கோவில் உள் பகுதியில் நெருக்கடியில் இருந்தது. பக்தர்கள் வசதிக்காக உள்பகுதிகளில் சில மாற்றங்கள் செய்து, கொடிமரம் அமைத்து இந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் தற்போது வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
பஞ்சபூத தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, வாரம் ஒருமுறை நான் வருவேன்; பெரிய கோவில். இங்கு வரும் பக்தர்கள் அவசரத்திற்கு செல்ல கழிப்பறை வசதி இல்லை. பெண்கள் அவதிப்படுகின்றனர். இன்னும் கோவிலை துாய்மையாக வைத்திருக்கணும். வெயில் காலத்தில் பக்தர்களுக்கு மேற்கூரையுடன் கூடிய நிழல் பாதை அமைத்தால் வசதியாக இருக்கும்.
பி.செல்வகுமார், வேலுார்
பெருமாள் ஆமை வடிவில் இருந்து மீள, இக்கோவில் மணலால் லிங்கம் அமைத்து பூஜித்தார். அவருக்கு அருள் புரிந்த சிவன், பார்வதி அவர் வேண்டும் வரம் கொடுத்தனர். இத்தலம் தன் பெயராலோ பக்தர்கள் வழிபட வேண்டும் என்ற வரமும் அளிக்கப்பட்டதால், கச்சபேஸ்வரர் என, இக்கோவில் அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இங்குள்ள சரஸ்வதி எட்டு கரத்தில் காட்சியளிக்கிறார். துர்க்கைக்கு தனி சன்னிதி உள்ளது. மூலவர் கிழக்கு பார்த்தும் இஷ்டசித்தீஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார். தேவையான வசதிகள் இங்கு உள்ளது.
த.தமிழ்செல்வன், காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றது, அனேகதங்காவதீஸ்வரர் கோவில். விநாயகர் சிவனை பூஜித்து வழிபட்ட தலமாக கருதப்படுகிறது. இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவிலை சுற்றி நிலங்கள் உள்ளன. அவற்றில் தற்போது வேலி மரம் முளைத்து, காடு போல் காணப்படுகிறது. கோவில் அருகில் உள்ள குளம் துார்ந்து விட்டது. புதர் மண்டி கிடப்பதை அகற்றி, வசதியை ஏற்படுத்தினால் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இதனால் இரவில் பயந்து யாரும் வருவதில்லை.
வி.வேல்சாமி, காஞ்சிபுரம்