சித்தலிங்கமடம் கோவில் தேர் வெள்ளோட்டத்திற்கு தயார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2017 12:02
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த சித்தலிங்கமடம் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலுக்கு‚ ரூ.32 லட்சம் மதிப்பில்‚ புதிய தேர் தயாராகி வருகிறது. திருக்கோவிலுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில்‚ பழமையான வியாக்ரபாதீஸ்வரர் கோவில் உள்ளது. சித்திரை மாத பிரம்மோற்சவ விழா தேரோட்டம், இங்கு வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இருநுாறு ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தேர் சிதிலமடைந்து, தேரோட்டம் தடைபட்டிருந்தது. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் முயற்சியாலும்‚ ஞானானந்தா நிகேதன் தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகளின் வழிகாட்டுதலுடன்‚ புதிய தேர் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய தேர் செய்வதற்காக ரூ.9.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இது போதாது என்பதால் சிவனடியார்களின் உதவியுடன் ரூ.32 லட்சம் மதிப்பில் 30 அடி உயரத்திற்கு பிரம்மாண்ட தேர்வு செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஐந்து நிலைகளுடன்‚ சிவபெருமானின் அவதார காட்சிகள்‚ தசாவதார சிற்பங்கள்‚ நாயன்மார்களின் திருவுருவங்கள் என 227 வாழ்வியல் சிற்பங்களுடன்‚ சாஸ்திர முறைப்படி தேர் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வண்ணம் தீட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழாவிற்கு முன்பாக, தேர் வெள்ளோட்டம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.