பதிவு செய்த நாள்
27
அக்
2011
10:10
சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் நேற்று அனைத்து கோவில்களிலும், காலை முதலே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாடையுடன் சென்று ஸ்வாமியை வழிபட்டனர். நேற்று, தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலையில் எழுந்த மக்கள் எண்ணை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்களது இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டதை காண முடிந்தது. ஒருவருக்கொருவர் ஜாதி, மத பேதமின்றி இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பட்டாசு சத்தம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீடித்தது. சேலத்தில், கோட்டை மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், சுகவனேஸ்வரர் கோவில், எல்லைப்பிடாரி அம்மன் கோவில், வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்டவற்றில், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தலை தீபாவளி கொண்டாடும், புதுமணத் தம்பதிகள் கோவிலில் குவிந்தனர். தீபாவளி மட்டுமின்றி, அமாவாசை நாள் என்பதாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை தரிசித்தனர். தீபாவளியையொட்டி, ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன.
தர்மபுரியில் தீபாவளி பண்டிகை: கோவில்களில் சிறப்பு பூஜை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். மழையால் பட்டாசு மற்றும் ஜவுளி விற்பனை பாதிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக ஜவுளிக்கடைகள், ரெடிமேட் கடைகள், ஸ்வீட் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தீபாவளி விற்பனையை குறி வைத்து தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் திடீர் கடைகள், தெருவோர கடைகள், ரெடிமேட் கடைகள் அதிக எண்ணிக்கையில் போடப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் தெருவோர கடைகளில் விற்பனை அதிகம் இருக்கும். கிராம பகுதியில் இருந்து வரும் மலிவான விலையில் கிடைக்கும் தெருவோர கடைகளில் கொள்முதல் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். நேற்று முன்தினம் மதியம் வரையில் வழக்கமான வெயில் இருந்தது. அதன் பின் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலான மழை பெய்தது. நேற்று காலையில் இருந்து லேசான தூரல் மழை போட்டு வந்தது. தொடர்ந்து பகலில் சற்ற மழை குறைந்த போதும், மதியத்தில் மழை பெய்தது.
வழக்கமாக பகல் நேரத்தில் திடீர் கடைகள் மற்றும் ரெடிமேட் கடைகளில் மக்கள் கூட்டம் இருக்கும். நேற்று மழை தொடர்ந்து பெய்தபடி இருந்ததால், சிறு வியாபாரிகள் போட்டிருந்த கடைகளில் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்மபுரி கோட்டை மல்கார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், ரயில்வே காலனி கோட்டை மாரியம்மன் கோவில், எஸ்.வி., ரோடு ஆஞ்சநேய ஸ்வாமி கோவில், விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமேஸ்வரம் கோயில்களில் தீபாவளி சிறப்பு பூஜை
ராமேஸ்வரம் : தீபாவளி திருநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தீபாவளி திருநாள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதுபோல் அக்னிதீர்த்தகரை உஜ்ஜயினி மாகாளி கோயில், பத்ரகாளிகோயில், புதுரோடு நம்புநாயகி அம்மன் கோயில், திட்டகுடி துர்க்கையம்மன் கோயில் மற்றும் பல்வேறு கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.