திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஏராளமான பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்தனர். குடும்ப நன்மைக்காக ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளி மற்றும் அதனை ஒட்டிவரும் அமாவாசை தினத்தில் கேதாரகவுரி நோன்பு எடுப்பது வழக்கம். இந்தாண்டு தீபாவளி, அமாவாசை இரண்டும் ஒன்றாக வந்ததால் நோன்பு எடுப்பவர்களின் கூட்டம் கோவில்களில் நிரம்பி வழிந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் முரளி ஐயர் தலைமையில் அதிகாலை 4 மணிக்கு கடஸ்தாபனம் நடந்தது. இதனையடுத்து 7 மணி வரை தீபாவளி நோன்பும், தொடர்ந்து நோன்பு நிகழ்ச்சியும் நடந்தது. ஏராளமான பெண்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி நோன்பு எடுத்துச் சென்றனர். கீழையூர், அரகண்டநல்லூரை சேர்ந்தவர்கள் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நோன்பு எடுத்தனர்.