பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
திருச்செங்கோடு: வழக்குகளை தீர்த்து வைக்கும், 60 படிகட்டுகள் கொண்ட சத்திய படிகட்டில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு படையெடுக்கின்றனர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைகோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தளான இங்கு சித்தர்கள், முனிவர்கள் தங்கியிருந்து அறிய வகை மூலிகைகளை பயன்படுத்தி தீராத நோய்களை குணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் சிவன் பாதியாகவும், சக்தி பாதியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். மேலும், இங்கு செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஸ்வாமிகள் எழுந்தருளி உள்ளனர். பழங்காலத்தில வழக்குகளை தீர்த்து வைப்பதில் முதன்மை பெற்று விளங்கி உள்ளது. பலதரப்பட்ட வழக்குகளை தீர்த்து வைப்பதற்காக, 60 படிகள் கொண்ட சத்திய படிகள் அமைந்துள்ளது. இந்த அறுபது படிகளின் மூன்று முகம் கொண்ட மும்மூர்த்தி கடவுள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இந்த படிகளில் சென்று வழக்கு சம்பந்தமாக பேசும் போது உண்மையை மட்டுமே சொல்வார்கள். பொய் சொல்லமாட்டார்கள். அவ்வாறு பொய் சொன்னால் கடவுள் தண்டித்துவிடுவார் என்பது ஐதீகம். நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்து பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு பெற்றுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சத்திய படிகட்டில் கார்த்திகை மாதத்தில் தங்களது நியாயம் கிடைக்கவும், சொத்துக்களை பறிகொடுக்காமல் இருக்கவும், வம்பில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, 60 படிகட்டுகளில் மக்கள் தீபம் ஏற்றி வழிப்பட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சத்திய படிகட்டுகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். அதற்காக திருச்செங்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் விசேஷமான நாட்களில் தீபம் ஏற்றி வழிபடுவதற்காக இங்கு படையெடுக்கின்றனர்.