பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
அரியலூர்: "அரியலூரில் மெல்ல, மெல்ல சிதலமடைந்து கொண்டிருக்கும் ஆலந்துறையார் சிவன் கோயில் சீரமைப்பதற்கான திருப்பணியை துவக்க, தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் விரும்புகிறார்கள். அரியலூர் நகரில் காசிவிஸ்வநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், ஆலந்துறையார் கோவில், கைலாசநாதர் கோவில் உள்பட நான்கு சிவன் கோவில்கள் உள்ளன. அரியலூர் குறிஞ்சாங்குளம் கரையின் மேற்கு பகுதியில், 800 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட, காசி விஸ்வநாதர் கோவில் சிதலமடைந்து சீரழிந்து கிடக்கிறது. இந்நிலையில், ரயில்வேகேட் பகுதியில் உள்ள விஸ்வநாதர் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்களின் முயற்சியால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி மூலம் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த 25 ஆண்டுக்கு முன் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட, அரியலூர் ஆலந்துறையார் சிவன் கோவில் மெல்ல, மெல்ல சிதலமடைந்து வருகிறது. திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற, கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலின் வைப்பு தலமாக, கடந்த 450 ஆண்டுக்கு முன், அரியலூர் ஜெமீன் மழவராயர் ஆட்சி காலத்தில், அரியலூர் நகரின் மையப்பகுதியில் கட்டப்பட்ட, ஆலந்துறையார் சிவன் கோயில், தற்போது தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தில் உள்ளது.
ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோவில் என, அறநிலையத்துறை பதிவேடுகளில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் மற்றும் பல கட்டிடங்கள் உள்ளன. தமிழக அரசின் அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ், அரியலூர் ஆலந்துறையார் கோவில் விளங்கிய போதிலும், திருவாதிரை, ஆனி திருமஞ்சனம், மகா சிவராத்திரி, பிரதோஷம், அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களும், பக்தர்களின் உபயமாகவே நடந்து வருகிறது. நாள்தோறும் பக்தர்கள் பலரும் திரண்டு வந்து வழிபாடு செய்யும், இக்கோவிலின் கட்டுமானம் மிகவும் சீரழிந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்ட மேல் தளம், பல இடங்களிலும் மழை காலத்தில் நீர் கசிவு ஏற்படுகிறது. நடராஜர் சன்னதியின் மேல் தளத்தின் கல் இரண்டாக உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அம்பாள் சன்னிதி உள்பட பல்வேறு இடங்களிலும் மேல் கோபுரம் சிதலமடைந்துள்ளது. கோவிலின் தெப்பக்குளம் பாழ்பட்டு கிடக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபாட்டுக்காக வந்து கொண்டிருக்கும் இக்கோவிலை திருப்பணி செய்ய, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும் ஆன்மிக அன்பர்கள் பலரும், பல ஆண்டாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. எனவே, பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள, அரியலூர் ஆலந்துறையார் சிவன் கோவில் திருப்பணியை உடனடியாக துவக்க, அரியலூர் அறநிலையத்துறை உதவி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.