பதிவு செய்த நாள்
29
அக்
2011
10:10
சென்னிமலை: உலக முழுவதும் உள்ள முருக பக்தர்கள் பாரயணம் செய்யும், கந்தர் சஷ்டி கவசம் அறங்கேறிய திருத்தலமான சென்னிமலையில், கந்தர் சஷ்டி விழா சிறப்பாக நடந்து வருகிறது. சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, 27ம் தேதி துவங்கியது. தினமும் மலை மீதுள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடக்கிறது. தினமும் பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது. மதியம் அன்னதானம் நடக்கிறது. கோவிலில் விரதம் மேற்கொள்ளும் ஏராளமான முருகபக்தர்கள், ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று மூலவருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. "அறுபடைவீடு-திருச்செந்தூர் என்ற தலைப்பில், நாமக்கல் நாதன் சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்று காலை 9.30 மணிக்கு அபிஷேகம், 12.30 மணிக்க, "ஆறுபடைவீடு பழனி என்ற தலைப்பில் உடுமலை கோகுல் சொற்பொழிவு, மதியம் அன்னதானம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 31ம் தேதி இரவு நடக்கிறது. சென்னிமலை நகரின் நான்கு ராஜ வீதிகளிலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி சென்னிமலை கிழக்கு ராஜ வீதி கைலாசநாதர் கோவிலில் திருக்கல்யாண வைபாவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பசவராஜன் மற்றும் பணியாளர்கள், கோவில் அர்ச்சகர்கள், மற்றும் ஸ்ரீகந்தர் சஷ்டி விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.
பவானி: பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில், நடக்கும் கந்த சஷ்டி விழாவில், நேற்று லட்சார்ச்சனை நடந்தது. மூலவருக்கு சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருந்தது. வரும் 31ம் தேதி காலை சண்முகார்ச்சனை, 108 சங்காபிஷேகம், மஹா தீபாராதனை, மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. நவம்பர் 1ம் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேகம், 8.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மாலையில் ஸ்வாமி வீதியுலா நடக்கிறது.