Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஜீவ சமாதிகள் » சாந்தானந்த ஸ்வாமிகள்
சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள்
எழுத்தின் அளவு:
சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள்

பதிவு செய்த நாள்

03 மார்
2017
04:03

மதுரைக்கு அருகே உள்ளது அந்தச் சிற்றூர். அந்தணர் வழியில் வந்த ராமசாமி என்பவர் அங்கே வசித்து வந்தார். அதுவரை அந்தத் தம்பதிக்கு ஒன்பது குழந்தைகள். பத்தாவது குழந்தை பெறுவதற்காக ராமசாமியின் மனைவியார். மணிவயிறு வாய்க்கப் பெற்றிருந்தார். அந்த நேரத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள் என்பவர் (திருப்பரங்குன்றத்தில் இவரது அதிஷ்டானம் உள்ளது) ராமாசாமியின் வீட்டுக்கு எழுந்தருளினார். தங்கள் வீட்டுக்கு சாது ஒருவர் வந்திருப்பது கண்டு தம்பதியர் மகிழ்ந்தனர். சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகளின் திருவடியில் விழுந்து தொழுதனர்.

தம்பதியரின் அன்பான உபசரிப்பை ஏற்றுக் கொண்ட பின் மாயாண்டி ஸ்வாமிகள் சொன்னார். உங்களுக்கு பத்தாவது குழந்தையாகப் பிறக்கப் போகிறவன் சாமான்யன் இல்லை. வேதங்களை ரட்சிக்க வந்தவன். உலக நலத்தை என்றென்றும் விரும்பும் யோகி. புவனேஸ்வரியின் அருளுடன் அவன் அவதரிப்பான். சுப்ரமண்யன் என்று அவனுக்குப் பெயர் சூட்டுங்கள். குழந்தையாக இருக்கும் வரை அவன் உங்களுக்குச் சொந்தம். குமரன் ஆகி விட்டால் குவலயத்துக்கே சொந்தம். எனவே, ஒரு காலத்தில் அவனை நீங்கள் பிரிய வேண்டி இருக்கும். அதற்காகக் கவலைப் படாதீர்கள். பெருமைப் படுங்கள். உத்தமமான ஒரு திருமகனைப் பெற்றெடுத்ததற்காக உலகம் உங்களை வாழ்த்தத்தான் செய்யும் என்று சொல்லி புறப்பட்டார் மாயாண்டி ஸ்வாமிகள்.

கருவில் இருக்கும்போதே மாயாண்டி ஸ்வாமிகள் ஆசியைப் பெற்ற அந்த மகான்தான் - சத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள். பள்ளிக்குச் சென்று பாடம் பயிலும் பருவம் வந்தது சுப்ரமண்யத்துக்கு (ஸ்ரீசாந்தானந்தர்). ஆசிரியர் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது ஏதாவது சந்தேகத்தை மாணவர்களிடம் கேட்டால், சுப்ரமண்யம் முந்திக் கொண்டு பதிலைத் துல்லியமாகச் சொல்லி விடுவான். ஆசிரியர்களே வியந்து பாராட்டும் அளவுக்குப் பள்ளிப் பருவம் ஓடியது. எஞ்சிய நேரங்களில் மதுரை வாழ் அன்னை மீனாட்சியின் சன்னதியில் போனாது. சுப்ரமண்யனின் மனதில், ஆன்மிக அலைகள் மெள்ள மெள்ளப் பெருக்கெடுத்தன. வாழ்வில் எதையோ தேட வேண்டும் என்கிற ஊற்று உள்ளத்தில் கிளர்ந்து எழுந்தது. இதை மெய்ப்பிக்கும் விதத்தில் மாயாண்டி ஸ்வாமிகளே மீண்டும் ஒரு முறை ராமசாமியின் வீட்டுக்கு எழுந்தருளினார். அப்போது வீட்டில் உட்கார்ந்து தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தான் சுப்ரமண்யன். அடேய்.... இங்கே வாடா... என்றார். என்னை செய்து கொண்டிருக்காய்? என்று கேட்டார். பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். என்றான் சுப்ரமண்யன். உனக்கு எதுக்கடா படிப்பு? நீ படிக்க வந்தவன் அல்ல. பாடம் புகட்ட வந்தவன். பள்ளியை மறந்து விடு. பாடசாலையைத் தேடு. ஞானத்தைப் பெருக்கு. அதன் பின் என்னிடம் வா. ரகசியங்கள் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு க்ஷண நேரத்தில் மறைந்து போனார்.

மகானின் அருள்வாக்கைப் புறம் தள்ளாமல், தன் மகன் சுப்ரமண்யனை காரைக்குடியில் ஒரு பாடசாலையில் சேர்த்தார் ராமசாமி. வேத பாராயணம் அங்கே துவங்கியது. வேத வித்தாக வெளியே வந்த சுப்ரமண்யன், தேசத்தைச் சுற்றினார். இந்தக் காலகட்டத்தில்தான் காந்தியடிகளின் தேச பக்திப் பேச்சால் கவரப்பட்டார். விடுதலைக்காக முழுங்கினார். இதற்குப் பரிசாக அந்நியர்கள் அவரை அலிபூர் சிறைச்சாலையில் அடைத்தனர். தவ சீலர்கள் விரும்புவது தனிமையைத்தானே? சிறைச்சாலையில் கிடைத்த தனிமை சுகம். அங்கேயும் அவரை தவம் இருக்கச் செய்தது. பின்னாளில் ஞானோபதேசம் வேண்டி தன் முதல் குருவான மாயாண்டி ஸ்வாமிகளிடமே சரண் புகுந்தார் சுப்ரமண்யன். வா மகனே வா என்று அவரை உச்சி முகர்ந்து வரவேற்ற மாயாண்டி ஸ்வாமிகள், அன்னை புவனேஸ்வரியின் மூல மந்திரத்தை அவருக்கு ஜபித்தார். அன்னையின் அந்த மந்திரத்தை உச்சரித்த தருணத்தில் சுப்ரமண்யன் உடல் சிலிர்த்தார். உவகை கொண்டார். உள்ளுக்குள் ஏதோ ரசாயன மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். மாயாண்டி ஸ்வாமிகளின் திருவடிகளில் வீழ்ந்து. அவரின் ஆசி பெற்றார். போதுமடா மகனே..... இனி எங்கேயும் நிற்காதே. உனக்கான பணிகள் துவங்கி விட்டன. இந்தப் பிறவியில் நீ செய்ய வேண்டிய காரியங்களை முடிக்கும் வரை ஓயாதே என்று சிரம் தொட்டு வாழ்த்தி அனுப்பினார் மாயாண்டி ஸ்வாமிகள்.

இதன் பிறகு பொதிகைமலை, திருப்பதி மலை, பழநிமலை, கொல்லிமலை, வெள்ளியங்கிரி என்று மலைகள் கண்ட இடமெல்லாம் சுற்றி திரிந்து, தவம் செய்தார் சுப்ரமண்யன்; ஞானம் பெருக்கினார். தேசம் சுற்றினார். பத்ரிநாத், கேதார்நாத், ரிஷிகேஷ், நேபாளம் என்று பயண மயம்தான்! இந்தப் பயணம் குஜராத் வரை வந்தது. அங்கே அவதூதர்களின் மூலவர் என்று கருதப்படும் கிரிநார் ஸ்ரீதத்தபாதுகா பீடத்தை தரிசித்தார் அங்கே ஒரு யோகியையும் சந்தித்தார் (தத்தாத்ரேயரே யோகியாக வந்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு). அந்த யோகி, சுப்ரமண்யத்தைப் பார்த்து, ஏ மதராஸி வாலா... நீ என்ன இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாய். தத்த குருநாதரை உனக்குள்ளே கொண்டிருக்கும் நீ இங்கே ஏன் வந்தாய்? உனக்கான குருநாதர் உன்னை எதிர்பார்த்துக் கொண்டு சேலம் ஜில்லாவில் சேந்தமங்கலத்தில் (இப்போது நாமக்கல் மாவட்டம்) காத்துக் கொண்டிருக்கிறார். அங்கே செல் என்று உத்தரவிட்டு ஆசியுடன் அனுப்பினார்.

சேந்தமங்கலம் செல்லும் முன், சாந்தானந்தரின் அருளுக்குப் பாத்திரமான் இரு அனுபங்களைப் பார்ப்போம். கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு எதிரே மலையில் அமைந்துள்ள ஒரு குகையில் இளைஞனாக இருக்கும்போது தியானத்தில் அமர்ந்தார் ஸ்வாமிகள். ஆட்கள் எவரின் நடமாட்டமும் இல்லாத பகுதி இது. அதனால்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் ஸ்வாமிகள் அன்னை பரமேஸ்வரியின் உத்தரவு கிடைக்கும் வரை அன்ன ஆகாரம், நீர் எதுவும் உட்கொள்ள மாட்டேன் என்கிற சங்கலபத்துடன் கடுமையான தவம் மேற்கொள்ளத் துவங்கினார் ஸ்வாமிகள். புலன்களைக் கட்டுப்படுத்தி அவர் மேற்கொண்ட தவத்தில் கிட்டத்தட்ட நாலைந்து நாட்கள் ஓடி விட்டன. தன் பக்தன் ஒருவன் எதுவும் உட்கொள்ளாமல் உபவாசம் இருக்க எந்த அன்னைதான் விரும்புவாள்? அன்னை பரமேஸ்வரியே இதை முடித்து வைக்கவும் ஆவல் கொண்டாள். ஒரு பஜனைக் கோஷ்டியினரின் மனதில் புகுந்து, அன்ன ஆகாரங்களை எடுத்துக் கொண்டு போய் அந்த குகையில் பஜனைக் கச்சேரி நிகழ்த்துங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

அதன்படி அந்த பஜனைக் கோஷ்டியினர் மிகுந்த சிரமப்பட்டு இந்தக் குகைக்கு அருகே வந்தார்கள். பஜனை செய்யத் தோதான இடத்தில் அமர்ந்து தங்களின் ஆன்மிக வெள்ளத்தை வெளிப்படுத்த இருந்தபோது, ஜடமாகக் காட்சி அளித்த ஸ்வாமிகளைப் பார்த்தார்கள். அப்போது அவர் இருந்த நிலையைப் பார்த்து உள்ளம் பதறினார்கள். அது சாட்சாத் அன்னை பரமேஸ்வரியின் தவிப்பு! அடடா.... யாரோ ஒரு சாது தன்னை மறந்து பல நாட்கள் தவத்தில் மூழ்கிக் கிடக்கிறாரே.... இவர் சாப்பிட்டு எத்தனை நாள் ஆகி விட்டதோ? என்று தவித்து, தாங்கள் கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களை அவருக்கு முன்னால் அமர்ந்து பிரித்தார்கள். பிறகு, ஸ்வாமி.... தாங்கள் தவத்தைக் கலைக்க வேண்டும். இனியும் தாங்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அது லோக க்ஷேமத்துக்கு நல்லதல்ல என்று கூறினார்கள். அது வரை ஆழ்ந்த தவத்தில் இருந்த ஸ்வாமிகள் கண் விழித்தார். என்ன? என்று அவர்களைப் பார்த்து வினவினார். தாங்கள் உணவு உட்கொள்ள  வேண்டும் என்றனர். முதலில், ஸ்வாமிகள் மறுத்தார். நீங்கள் சாப்பிடுங்கள் என்றார். பிறகு அவர்கள் அனைவரும், நீங்களும் எங்களுடன் சேர்ந்து உணவு அருந்தினால்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்றனர்.

தன்னால் பிறர் எவரும் பட்டினி இருக்கக் கூடாதே என்பதற்காக அவர்களுடன் சேர்ந்து உணவருந்த ஸ்வாமிகள் சம்மதித்தார். ஸ்வாமிகள் இது போன்ற தவம் இருப்பது புதிதல்ல. சிறு வயதில் இறை இன்பம் தேடி அடிக்கடி காட்டுப் பகுதிகளுக்குச் சென்று தவத்தைத் துவக்கி விடுவார். ஒரு முறை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனிமையில் தவத்தைத் துவக்கி விட்டார். சிற்றறிவு உள்ள ஜீவன்களுக்கு ஸ்வாமிகளின் தவம் பற்றிப் புரியுமா, என்ன? கடுமையான விஷம் கொண்ட வண்டுகள் அணி அணியாக வந்து ஸ்வாமிகளின் தேகத்தைக் கொட்டின. விஷம் உடம்பில் ஏறியதால், அங்கேயே மூர்ச்சை ஆகிச் சரிந்து விட்டார் ஸ்வாமிகள். பிறகு, அந்தப் பக்கம் வந்த மலைவாசி மக்கள், யாரோ சாது ஒருவர் இப்படி மயங்கிக் கிடக்கிறாரே என்று பரிதவித்து, அவருக்குப் பச்சிலைகளைக் கொண்டு சிகிச்சை செய்து தேற்றினார்கள்.

இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன் (1960-களின்போது), ஸ்ரீசாந்தானந்தருளின் அருளுக்குப் பாத்திரமானவர். இவருடைய திரையுலக வாழ்க்கைக்கே ஸ்வாமிகள்தான் காரணம் என்றால் அது மிகையல்ல. குன்னக்குடி வைத்தியநாதன் பிரபலம் ஆவதற்கு முன், சாந்தானந்த ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்க விரும்பி புதுக்கோட்டை சென்றார். தனது பரமகுருநாதரான ஸ்ரீஜட்ஜ் ஸ்வாமிகள் அதிஷ்டானம் அமைந்துள்ள ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோயிலில் அப்போது தங்கி இருந்தார் ஸ்வாமிகள். வயலின் வாத்தியத்தை அப்போது பக்க வாத்தியமாக பல கலைஞர்களுக்கும் வாசித்துக் கொண்டிருந்தார் குன்னக்குடி. வயலின் மூலம் தனிக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது குன்னக்குடியின் விருப்பம். இவரது பிரதான வயலின் இசைக்கு மற்ற கலைஞர்கள் பக்க வாத்தியம் வாசிக்க வேண்டும் என்பது ஆசை. தவிர, சினிமாவில் இசை அமைக்க வேண்டும் என்கிற தாகமும் அப்போதுதான் குன்னக்குடிக்கு வந்தது.

தன் மனதில் இருக்கின்ற கனவுகளுடன் ஸ்ரீசாந்தானந்தரை தரிசிக்க அவரது திருச்சன்னிதிக்குள் வந்தார். குன்னக்குடியின் முக வாட்டத்தைக் கண்ட ஸ்வாமிகள், என்ன குழப்பமாக இருக்கிறாய்? வா, என்னுடன் என்று சொல்லி நடந்தார். குன்னக்குடியும் பின்தொடர்ந்தார். அமைதியான ஓரிடத்தில் அமர்ந்த ஸ்வாமிகள் கண்களை மூடி சற்று நேரம் தியானத்தில் அமர்ந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்து குன்னக்குடியைப் பார்த்தார். அருகில் இருந்த குங்குமக் கிண்ணத்துக்குள் கை விட்டு அதைக் கொஞ்சம் அள்ளினார். தன் கண்களை மூடி மீண்டும் ஜபித்து அதை அவரின் கையில் கொடுத்தார். அதோடு, புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மனின் திருவுருப் படம் அச்சான ஒரு வழுவழுப்பான காகிதத்தையும் கொடுத்தார். இனி நீ யோகக்காரன். சென்னைக்குச் செல். உன் மனதில் உள்ள ஆசை எல்லாம் நிறைவேறும். சென்னைக்குப் போனதும் நல்ல தகவல் வீடு தேடி வரும். அதிஷ்ட தேவதை உன் வீட்டுக் கதவைத் தட்டக் காத்திருக்கிறாள். புறப்படு. பிறகு, என்னிடம் வந்து அதைச் சொல் என்று ஆசி வழங்கி அனுப்பி வைத்தார். மறுநாள் காலை சென்னைக்குத் தன் இல்லம் வந்த குன்னக்குடி முதல் வேலையாக ஸ்வாமிகள் தன்னிடம் கொடுத்த ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் படத்தை ஃப்ரேம் செய்யலாம் என்று அருகில் இருந்த கடைக்குப் போய் அந்த வேலையை முடித்தார். வீட்டுக்கு வந்ததும் பூஜையறையில் புவனேஸ்வரியின் படத்தை மாட்டுவதற்குத் தோதான இடம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் இவரின் வீட்டுக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. படத்தை அவசரம் அவசரமாக மாட்டி விட்டு. புவனேஸ்வரியை வணங்கி விட்டு. வாசலுக்கு வந்து கதவைத் திறந்தார். வெளியே-ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் குன்னக்குடியிடம். மியூஸிக் டைரக்டர் உள்ளே இருக்கிறாரா? என்று கேட்டார். குன்னக்குடி அசந்து போய் விட்டார். காரணம்-அந்த வீட்டில் அவரைத் தவிர, வேறு எந்த மியூஸிக் டைரக்டரும் இல்லை. நான்தான் குன்னக்குடி வைத்தியநாதன். நானே ஒரு மியூசிக் டைரக்டர் என்று கண்கள் பனிக்க, தழுதழுப்புடன் கூறி இருக்கிறார். ஏ.பி. நாகராஜன் சார் உங்களை உடனே கூட்டிட்டு வரச் சொன்னார் என்றார். வந்தவர் பெயர்-ராஜகோபால் ஐயங்கார். ஏ.பி.என்-னின் உதவியாளர். அதன் பிறகு குன்னக்குடி அடைந்த மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டுமா? ஏ.பி. நகாராஜனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவர், நான் இயக்க இருக்கும் புதுப் படத்துக்கு நீதான் இசை அமைப்பாளர். சம்மதமா? என்று கேட்க.... தான் இருந்த இடத்தில் இருந்தே சாந்தானந்த ஸ்வாமிகளைக் கை உயர்த்திக் கும்பிட்டார்.  கிட்டத்தட்ட அதுவரை பக்க வாத்தியக் கலைஞராக இருந்த குன்னக்குடி. இதற்குப் பிறகுதான் முன்னணிக் கலைஞர் ஆனார். இதற்கு நன்றிக்கடனாக அடிக்கடி புதுக்கோட்டை சென்று ஸ்ரீசாந்தானந்தரைத் தரிசித்து வருவதைத் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இப்படித்தான் ஒரு முறை புதுக்கோட்டையில் புவனேஸ்வரி அம்மன் சன்னிதி அருகே வயலின் கச்சேரி நடத்தினார் குன்னக்குடி. பல விதமான கீர்த்தனைகளை இசைத்து விட்டு, பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த அஸ்திரமாக மகுடியை வாசிக்கத் தொடங்கினார். கோயிலின் உட்புறம் ஓர் ஆசனத்தில் அமர்ந்து இந்தக் கச்சேரியைக் கேட்டு ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் சாந்தானந்த ஸ்வாமிகள். அப்போது மகுடியின் இசைக்கு மயங்கி, எங்கிருந்தோ ஒரு நல்ல பாம்பு கோயிலுக்குள் புகுந்து தன் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தது. வந்திருந்த பக்தர்கள் விதிர்விதிர்த்து விட்டனர். இசையை நிறுத்தி விட்டால், பாம்பு தன் குணத்தைக் காட்டி விடும் என்பதற்காக நிறுத்தாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தார் குன்னக்குடி. பார்த்தார் ஸ்வாமிகள். ஏ நாகராஜா..... போதும் உன் ஆட்டம். இது வரை மகுடிக்குக் கட்டுப்பட்டு ஆடினாய். இனி, உன் இருப்பிடத்துக்குத் திரும்பி விடு. இங்கே இருக்கிற பலரும் உன்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என்றார். அடுத்த கணம் எதோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் மிகுந்த சாதுவாகத் தரையில் ஊர்ந்து தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது பாம்பு.

சேந்தமங்கலம் வருவோம். குஜராத்தில் யோகி ஒருவர் தனக்கு இட்ட உத்தரவின் பேரில் சேந்தமங்கலத்தை அடைந்தார் ஸ்வாமிகள். இங்கேதான் ஸ்ரீஸ்வயம்பிரகாசரின் உபதேசத்தை ஏற்று அவரின் சீடரானார். அதோடு ஸ்ரீசாந்தானந்தர் என்கிற தீட்சா நாமத்தையும் வழங்கினார். ஸ்வயம்பிரகாசரின் குருவும். சாந்தானந்தரின் பரமகுருவுமான ஜட்ஜ் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தைப் புதுப்பிக்க வேண்டி. குருநாதரின் அறிவுரைப்படி புதுக்கோட்டை பயணமானார். அதிஷ்டானமும் புதுப்பிக்கபட்டது. 1956-ல் கும்பாபிஷேகமும் நடத்தினார். வருடங்கள் ஓடின. தனக்கு இட்ட பணி அழைப்பதாக உணர்ந்தவர், சேலம் புறப்பட்டார். உடையாப்பட்டி குன்றில், ஸ்கந்தகிரி உதயம் ஆனது. யாரோ ஒரு பக்தர் கொண்டு வந்து கொடுத்த ஸ்ரீமுருகப் பெருமானின் விக்கிரகமே இங்கு மூல மூர்த்தம் ஆனது. பின்னாளில் இங்கு தத்த பகவான். தன்வந்திரி பகவான், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஹனுமான், அஷ்டாதசபுஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரி போன்ற பிற தெய்வங்கள் அமைந்தன. இறுதிக் காலத்தில் சென்னை சேலையூர் ஓம்ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் உலக அமைதிக்காக 108 நாட்கள் இடைவிடாமல் ஸ்ரீசுதர்சன மகாயக்ஞத்தை ஸ்வாமிகள் நடத்தினார். இதைத் தொடர்ந்து ஸ்வாமிகள் உடல் நலம் குன்றினார். தான் எடுத்த அவதாரம் பூர்த்தி ஆகி விட்டது என்பதை உணர்ந்த ஸ்ரீசாந்தானந்தர் தன் சிஷ்யர்களிடம் தன்னை சேலத்துக்குக் கூட்டிச் செல்லுமாறு சொன்னார். சேலம் ஸ்கந்தாஸ்ரமம் சென்ற ஸ்வாமிகள், அன்று அதிகாலை அன்னையைத் தரிசித்து விட்டு 2002-ஆம் ஆண்டில் ஸித்தி ஆனார். சுமார் 82 ஆண்டுகள் பூலோக வாசம் புரிந்த இந்த மகான், அஷ்டாதசபுஜா மகாலட்சுமியின் சன்னதிக்குக் கீழே ஜீவ சமாதி கொண்டார். தன் ஞான குருவான ஸ்ரீஸ்கந்த மூர்த்தியை என்றென்றும் தரிசித்த வண்ணம் அமர்ந்து, இன்றளவும் ஸ்வாமிகள் தவம் புரிந்து வருவதாக அவரது பக்தர்கள் நம்புகிறார்கள். தன் வாழ்நாளில் எத்தனையோ நற்காரியங்களைப் புரிந்து, இந்த உலகில் அமைதி நிலவ அரும்பாடு பட்ட ஸ்ரீசாந்தானந்தர், மண்ணில் உதித்த மாபெரும் தவசீலர் என்றே சொல்ல வேண்டும். சேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உடையாப்பட்டி என்ற கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இவர் உருவாக்கிய ஸ்கந்தகிரி அமைந்துள்ளது, கந்தவேளையும், ஸ்ரீசாந்தானந்தரின் ஜீவ சமாதியையும் இங்கே தரிசிக்கலாம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar