பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
குறிச்சி : போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், ஈஸ்வர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கருமாரியம்மன் கோவில், இடித்து அகற்றப்பட்டது. போத்தனுார் - செட்டிபாளையம் ரோட்டில், ஈஸ்வர் நகர் பஸ் ஸ்டாப் அருகே, சுப்பையன் என்பவரது இடம் உள்ளது. இவ்விடத்தின் முன், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தனக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையூறாக உள்ளதாகக் கூறி, சுப்பையன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கோவிலை இடித்து, அகற்ற நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது. இதற்கு கோவிலை நிர்வகித்து வந்த வெங்கடாசலம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில், தடையுத்தரவு பெறப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில், கோவிலை இடிக்க சுப்பையன் உத்தரவு பெற்றார். அதையடுத்து நேற்று காலை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர் ராஜா ஆகியோர் கோவிலை இடித்து அகற்ற வந்தனர். உதவி கமிஷனர் அனிதா மேற்பார்வையில், 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள், கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதம் செய்தனர். போலீசார் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம், கோவில் இடிக்கப்பட்டது. அம்மன் சிலை உள்ளிட்டவை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரபரப்பு காணப்பட்டது.