பதிவு செய்த நாள்
07
மார்
2017
12:03
ஆத்தூர்: சீலியம்பட்டியில், வழிபாடு பிரச்னை ஏற்பட்டு, கோவிலுக்கு, பூட்டு போட்டுள்ளதை கண்டித்து, சீலியம்பட்டிபுதூர் மக்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆத்தூர் அருகே, சீலியம்பட்டியில், செல்லியம்மன் கோவில் உள்ளது. சீலியம்பட்டி மற்றும் சீலியம்பட்டிபுதூரை சேர்ந்த மக்கள், பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, இரு ஊர் மக்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், ஆத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின், இரு ஊர்களிலும் பூசாரிகள் நியமித்து, பூஜைகள் செய்து வந்தனர். கோவில் சாவி, இரு ஊர் பூசாரிகளிடமும் இருந்துவந்தது. இதனிடையே, சீலியம்பட்டிக்கு சொந்தமான கோவில் என, நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளதாக கூறி, ஜன., 26ல், அக்கிராம மக்கள், கோவில் உள்பகுதியில் பூட்டு போட்டனர். அதேபோல், சீலியம்பட்டிபுதூர் மக்கள், கோவில் வெளிப்பகுதியில் பூட்டு போட்டனர். அடுத்தநாள், ஆத்தூர் போலீசார், கோவில் பூட்டுகளை அகற்றி, வழக்கம்போல் பூஜை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தினர். நேற்று முன்தினம் இரவு, சீலியம்பட்டி மக்கள், மீண்டும் கோவிலுக்கு பூட்டு போட்டுள்ளனர். இதனால், கோவிலில் வழிபாடு செய்ய முடியவில்லை என, சீலியம்பட்டிபுதூரை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மக்கள், நேற்று காலை, 10:30 மணியளவில், ஆத்தூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், போராட்டம் நடத்தினர். அவர்களிடம், மனுவை பெற்று, ஆர்.டி.ஓ., செல்வன் விசாரணை நடத்தினார். உடனடி தீர்வு காணவேண்டும் என, காலை, 11:30 மணியளவில், ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மறியல் போராட்டத்தில், மக்கள் ஈடுபட்டனர். ஆத்தூர் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியபின், அவர்கள் கலைந்தனர்.
ஆர்.டி.ஓ., செல்வன் கூறுகையில், கோவில் வழிபாடு பிரச்னை தொடர்பாக, வரும், 10ல், ஆத்தூர் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும். இரு ஊர் மக்களும், தொடர்ந்து பிரச்னை செய்தால், கோவில் வருவாய் கணக்கிட்டு, இந்து அறநிலையத்துறையிடம், நிர்வாக பணி ஒப்படைக்க பரிந்துரைக்கப்படும், என்றார்.