வங்காள மக்கள் காலையில் விழித்ததும் கண்ணாடியில் முகம் பார்ப்பது வழக்கம். நம் தமிழகத்திலும் சிலரிடம் இந்த வழக்கம் உண்டு. கண்ணாடி, மங்கலப் பொருட்களில் ஒன்று என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த வழக்கத்துக்கு வேறொரு காரணமும் உண்டு. விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை நீர்நிலைகளில் கரைப்பது போன்று, வங்காளத்தில் விஜய தசமியையொட்டி துர்காதேவி சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பார்கள். விஜயதசமி முடிந்ததும் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைப்பார்கள். கண்ணாடிக்கு எதிரில் துர்கை சிலையையும் வைப்பார்கள். இப்போது தேவியின் பிம்பம் கண்ணாடியில் தெரியும். அதாவது அம்பிகையின் சக்தி கண்ணாடியில் சேர்ந்ததாக ஐதீகம். பின்னர் மகிழ்ச்சியாக துதிப்பாடல்கள் பாடி, துர்கையின் சிலையைப் பல்லக்கில் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். மீண்டும் அம்பிகை தங்கள் வீட்டுக்கு அடுத்த வருடம்தான் வருவாள் என்பதால், அதுவரை துர்கையின் சக்தி கண்ணாடியில் இருப்பதாக பாவித்து, காலையில் எழுந்ததும் கண்ணாடியைத் தரிசித்து மகிழ்வார்கள். இதற்கு கண்ணாடி விசர்ஜனம் என்று பெயர்.