பதிவு செய்த நாள்
07
மார்
2017
05:03
இந்த உலகத்தில் பிறந்த எல்லோருமே இருபத்தேழு நட்சத்திரங்கள் பன்னிரண்டு ராசிகளுள் ஏதாவது ஒன்றில்தான் பிறந்திருப்பார்கள். அதேபோல ஒவ்வொருவரும் பிறந்த சமயத்தில் நவகிரகங்களின் இருப்பிட அமைப்பினை ஒட்டியே அவரவர்க்கான பலாபலன்கள் அமையும் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். வானியலை அடிப்படையாகக் கொண்ட இந்த கிரக கணிதத்தினை இன்றைய அறிவியலும் ஏற்றிருக்கிறது. அவரவர் ஜனனகாலத்தில் இருக்கும் கிரக நிலையைக் கொண்டே அவரவரது குணம் முதல் தனம் வரை அனைத்தையும் கணக்கிடலாம். நவகிரகங்களை பன்னிரு ராசிக் கட்டங்களில் அவற்றின் இருப்பிடத்துக்கு ஏற்ப இருத்திக் கணிக்கும் சமயத்தில் சில கிரகங்கள் சாதகமான இடத்திலோ அல்லது தோஷமான இடத்திலோ இருக்கக்கூடும்.
எந்த கிரக தோஷம் உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்களாகவே எளிதாகத் தெரிந்துகொண்டு, உரிய பரிகாரங்களைச் செய்து நன்மைகளைப் பெற்றிடவே இந்த எளிய வழிகாட்டல் உணர்ந்து படித்து, உன்னதம் பெறுங்கள்!
சூரிய தோஷம்:சூரியனை கண்ணால் பார்க்கக்கூடிய கடவுள் என்று வேத புராணங்கள் போற்றுகின்றன. சூரியன் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு ராசியில் இருக்கக்கூடிய கிரகம். அதாவது, சூரியன் மாதம் ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். எந்த மாதம் எந்த ராசியில் சூரியன் இருக்கிறாரோ, அந்த ராசியின் பெயராலேயே அந்தந்த மாதங்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டார்கள், அந்தக் காலத்தில். கேரளத்தில் இன்றும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அதாவது சூரியன் மேஷத்தில் இருக்கும் மாதமான சித்திரை மாதத்தை மேஷமாதம் என்றே சொல்வார்கள். பன்னிரண்டு ராசிகள் அடங்கிய ராசி மண்டலத்தில் மேஷமே முதலாவது என்பதால், சூரியன் இந்த ராசியில் அமையும் சித்திரையே தமிழ் மாதங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த ரிஷபத்தில் அமையும் வைகாசி மாதம் ரிஷப மாதம், மிதுனமாதம் கற்கடக மாதம் இப்படி பங்குனி மாதமாகிய மீன மாதம் வரை பன்னிரண்டு மாதங்கள் அமைத்துள்ளனர்.
சூரியனை ஆரோக்ய காரகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம். தந்தையுடனோ, தந்தை வழி உறவுகளுடனோ ஒற்றுமை இன்மை, தந்தையின் உடல்நலக் குறைபாடு, உங்கள் ஆரோக்யம் அடிக்கடி சீர் கெடுதல், தலையில் காயம்படுதல், எலும்பு முறிவு, தாழ்வு மனப்பான்மை, அடிமைத் தொழில், கண்களில் பிரச்னை, உஷ்ணாதிக்க நோய்கள் இதெல்லாம் இருந்தால் உங்கள் ஜாதகத்தின் அடிப்படையிலோ அல்லது கிரகசாரத்தின் அடிப்படையிலோ சூரியனின் அமைப்பு கெட்டிருக்க வாய்ப்பு உண்டு.
இந்த அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது நிரந்தரமாக இருந்தாலோ நீங்கள் சூரிய தோஷ நிவர்த்திக்கான பரிகாரத்தினை செய்துகொள்வது நல்லது.
சூரிய தோஷம் இருப்பவர்கள் வழிபடவேண்டிய முக்கியமான தெய்வம் அனுமன். காரணம் சூரியனுக்கு மிகவும் பிரியமான சீடன் அனுமன். அதோடு, சூரிய வம்சமான ரவி குலத்தில் உதித்த ராமபிரானின் ஆத்மார்த்த தொண்டனும் அனுமன்தான். சூரியன், நாராயணராகிய மகாவிஷ்ணுவின் அம்சமே என்று புராணங்கள் சொல்கின்றன. மகாவிஷ்ணுவிற்கும் மாருதியைப் பிடிக்கும். எனவே தான் சூரிய தோஷம் இருப்பவர்கள், ஆதித்ய ஹ்ருதயம் என்கிற சூரியன் துதியோடு, அனுமன் சாலீசா என்கிற அனுமன் துதியையும் சொல்வது அல்லது கேட்பது மிகச் சிறப்பான நற்பலனைத் தரும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
சூரியனின் தோஷம் இருந்தால் நீங்கள் முதலில் செல்லவேண்டிய கோயில், திருமங்கலக்குடி. இது நவகிரகங்கள் அனைத்துமே சிவபூஜை செய்த தலம் என்பதால், எந்த நவகிரக தோஷத்துக்கும் முதலில் இத்தலம் வந்து ப்ராணநாதேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் ஆராதித்துவிட்டு, அதன்பிறகு எந்த கிரகத்தின் அமைப்பில் தோஷம் உள்ளதோ அந்த கிரகத்திற்கு உரிய தலத்திற்குச் சென்று பரிகாரத்தினைச் செய்வது நல்லது.
அந்த வகையில் முதலில் திருமங்கலக்குடி சென்று வணங்குங்கள். பிறகு சூரியனார் கோயில் சென்று அங்கும் சுவாமி, அம்பாளை ஆராதித்த பிறகு சூரியன் சன்னதியில் இயன்ற அர்ச்சனை, ஆராதனை செய்து வணங்குங்கள். சூரியனுக்கு சூடான சர்க்கரைப் பொங்கல் மிகவும் பிடித்தமான நிவேதனம். எனவே அதனை இயன்ற அளவு பக்தர்களுக்கு அன்போடு விநியோகம் செய்யுங்கள். கண்களில் பாதிப்பு உள்ளவர்கள் திருவாரூர்- மன்னார்குடி வழியில் அமைந்துள்ள கண்கொடுத்த வனிதம் எனும் தலத்தில் உள்ள நயனவரதேஸ்வரரையோ, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் அருளும் கண்ணுடைய நாயகியையோ தரிசிப்பது கூடுதல் நன்மை தரும். தந்தை-மகன் உறவில் சங்கடம் உள்ளவர்கள், ஆடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரரை வணங்குவது சிறப்பு.
மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை அல்லது வெண்ணெய் சாத்தி வழிபடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்றைய தினம் இரவில் அரிசி சேர்க்காத உணவை உட்கொள்ளுங்கள். கோதுமை கலந்த உணவும் நீரும் ஏழைகளுக்கு இயன்ற அளவு தானமாகக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கை இனிக்கும்.
சந்திர தோஷம்: ஜோதிட சாஸ்திரம் சூரியனை தந்தை என்றும், சந்திரனை தாய் என்றும் சொல்கிறது. அதோடு மனோகாரகன் என்றும் சந்திரனை சொல்கின்றன. அதாவது நீங்கள் தெளிவான சிந்தையுடன் மனக் குழப்பம் இல்லாமல் இருக்க சந்திரனின் அமைப்பே காரணமாகிறது.
அஸ்வினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானவையாக கூறப்பட்டிருக்கின்றன. இந்த இருபத்தேழு நட்சத்திர நாட்களில் ஏதாவது ஒன்றில்தான் இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் பிறந்திருக்க முடியும். அதுவே அவரது ஜன்ம நட்சத்திரம் எனக் கூறப்படுகிறது. அவரவரது பிறந்த நாளில் அமைந்த நட்சத்திரத்திற்கும் அவரவது உடலமைப்பு, குணம், செயல்திறன் முதலான பலவற்றுக்கும் தொடர்பு உண்டு என்கின்றன புராதன ஜோதிட நூல்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களையும் இருபத்தேழு கன்னியராக உருவகப்படுத்தி, அந்தப் பெண்களின் கணவனாக சந்திரனைச் சொல்கின்றன புராணங்கள். இதனுடைய உட்பொருள் என்ன தெரியுமா? எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவரது மனம்தான் அவரது செயல்களைக் கட்டுப்படுத்தும் அல்லவா? அந்த மனதினைச் செலுத்திடும் கிரகம் சந்திரன் எல்லோரும் பொதுவானவன் என்பதைத்தான்.
மதி என்ற பெயர் சந்திரனுக்கு இருப்பதே அவரவர் மதியை சந்திரனின் அமைப்புதான் தீர்மானிக்கிறது என்பதை உணர்த்தத்தான். அடிக்கடி மனச்சோர்வு, மனக்குழப்பங்கள் அதிகரித்தல், தாயாருடனும் தாய்வழி உறவுகளுடனும் சுமுகமான உறவு இன்மை, தாயாரின் உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்பு, சிறுநீரக உபாதை, ஜலதோஷம், சுவாசம் தொடர்பான பிரச்னைகள், பணியிடத்தில் அடிக்கடி இடமாற்றம், திடமாக முடிவுகள் எடுக்க முடியாமல் குழப்பம் இதெல்லாம் இருந்தால், உங்களுக்கு சந்திர தோஷம் இருக்க வாய்ப்பு உண்டு.
சந்திரனை சிரசில் சூடி, சந்திரனின் தோஷத்தைப் போக்கிய சிவனே நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம். சிவனும் பார்வதியும் இணைந்த வடிவில் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரரை வணங்குவது அற்புத பலன் தரும்.
சிவனைப் போலவே பார்வதியும் சந்திரனை சிரசில் தரித்தவள். காஞ்சி காமாட்சி போன்ற வடிவங்களில் தேவி பிறை நிலவை குடியிருப்பதை தரிசிக்கலாம். சிவபெருமான் தனது உடலில் அம்பிகை பாகமான இடப்புறத்தில் நிலவினை குடியிருப்பார். அம்பிகையோ தன் திருமேனியில் ஈசனின் பாகமான வலப்புறத்தில் மதியணிந்திருப்பாள். சிவனும் சக்தியும் இணைந்திடும் சமயத்தில் இறைவனின் இடப்புறம் உள்ள அரைநிலவும், இறைவியின் வலப்புறம் இருக்கும் பாதி மதியும் ஒன்றாக இணைந்து முழுநிலாவகத் தோன்றும். அதாவது பிறை நிலவாக உள்ள இரு அரை நிலவுகள் சேர்ந்து முழுமதி உருவாகும்.
அதனால்தான் சிவனும் சக்தியும் ஒன்றிணைந்து இருக்கும் நாள் பவுர்ணமி தினம். அன்றைய தினம் சிவபூஜை செய்வது சுவாமி, அம்பாளின் அருளைப் பரிபூரணமாகக் கிட்டச் செய்யும் என்பதால்தான் பவுர்ணமியில் சிவ வழிபாடு சிறப்பென்று வைத்தார்கள். இன்றும் பெரும்பாலான சிவன்கோயில்களில் உற்சவம், திருவிழா போன்றவை பவுர்ணமியை ஒட்டி நடத்தப்பட வேண்டும் என்ற ஐதிகம் தோன்றியதும் அதனால்தான்.
ஆதிசங்கரர் தொடங்கிவைத்த காலம் முதல், சுவாமியை சந்திரமௌலீஸ்வரராகவே ஆராதனை செய்கிறார்கள் காஞ்சி காமகோடிபீடத்து ஆசார்யர்கள்.
திங்களூர் சென்று கைலாசநாதரையும் அம்பாளையும் ஆராதியுங்கள். தெய்வ சன்னதிகளில் நெய்தீபம் ஏற்றி வணங்கிய பிறகு அங்குள்ள முறைப்படி சந்திரனுக்கு அர்ச்சனை, ஆராதனை செய்யுங்கள். பவுர்ணமி நாட்களில் பக்கத்தில் உள்ள சிவன் கோயில் சென்று வில்வம் தந்து சிவதரிசனம் செய்யுங்கள். அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். அன்றைய தினம் அசைவம் தவிருங்கள். அன்றிரவு அரிசி சேர்த்த உணவை தவிருங்கள். இயன்ற அளவு தயிர்சாதத்தினை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுங்கள்.
மனதில் நிம்மதி இன்மை, மனக்குழப்பங்கள் உள்ளவர்கள் குணசீலம் தலத்திற்குச் சென்று பிரசன்ன வேங்கடாசலபதியை வணங்குவது நல்லது. பரிக்கல், சிங்கர்குடி, பூவரசன் குப்பம் தலங்களில் உள்ள நரசிம்மரை ஒரே நாளில் வணங்குவதும் நற்பலன் தரும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கிட, மனதினுள் சிவன்கோயில் அமைத்து பூசலார் நாயனார் வழிபட்ட ஈசனை திருநின்றவூர் சென்று மனக்கோயிலுள் அருளும் இருதயாலீஸ்வரரை ஆராதிப்பது சிறப்பு. இருதயாலீஸ்வரரை, இதயம் தொடர்பான பிணிகள் உள்ளவர்கள் வழிபட்டால் உடல்நலம் சீராக இருந்திட வரம் பெறலாம் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பு. மனப்பதட்டம் உள்ளவர்கள், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் எனும் தலத்தில் அருளும் அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையாரை ஆராதிப்பது நற்பலன் தரும்.
அம்பிகை சந்திரசேகரியாக பிறைநிலவினை சூடிய திருவடிவில் காட்சி தரும் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசிவிசாலாட்சி சென்னை காளிகாம்பாள் போன்ற தலங்களுக்குச் சென்று அம்பிகையை ஆராதிப்பதும் பூரணபலன் கிட்டச் செய்யும். சிவபார்வதி இணைந்து அர்த்த நாரீஸ்வரராக இறைவன் / இறைவி அருளும் திருச்செங்கோடு தலம் சென்று வணங்குவதும் நல்லது.
செவ்வாய் தோஷம்: பூமாதேவியின் புத்திரன், முருகனின் அம்சம் என்றெல்லாம் அங்காரகனாகிய செவ்வாயை புராணங்கள் போற்றுகின்றன. பூமிகாரகன், அக்னி போன்ற தேஜஸ் உள்ளவன், சகோதரகாரகன் என்றெல்லாம் செவ்வாயை ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன.
செவ்வாயின் அமைப்பு தோஷம் அடைந்திருப்பதை முக்கியமானதாகக் கருதி, திருமணப் பொருத்தம் பார்க்கும் சமயத்தில் இதனை விசேஷமாக கவனிப்பது உண்டு. ஜோதிட ரீதியான இந்த அமைப்பில் விஞ்ஞான விளக்கமும் தற்காலத்தில் கூறப்படுகிறது.
செவ்வாய் தோஷத்துடன் பிறந்தவர்களில் பெரும்பாலோரின் ரத்தம் நெகடிவ் க்ரூப ஆகவே இருப்பதை ஆராய்ச்சிகளின் விளைவாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அதோடு, நெகடிவ் ரத்தவகை இருப்பவர்கள் பிரசவ காலத்தில் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மருத்துவர்களும் சொல்கிறார்கள். இதையெல்லாம் ஜோதிடமாகக் கணித்து பல காலம் முன்பே சொல்லிவைத்திருக்கிறார்கள் முன்னோர்.
மீளமுடியாத கடன், சகோதர வழியில் ஒற்றுமை இன்மை, அவர்களது உடல்நலனில் அடிக்கடி பாதிப்பு, ரத்த காயம் படுதல், தொடர்ந்து வாகன விபத்துக்கள், நிலம், வீடுமனை சார்ந்த வகையில் பிரச்னைகள், நெருப்பு, மின்சாரத்தினால் ஆபத்து, ரத்தம் தொடர்பான உடல் உபாதைகள், எதிரிகளால் தொல்லை என்று உங்கள் வாழ்க்கையில் பிரச்னைகள் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கலாம்.
புள்ளிருக்கு வேளூர் என்று புராணகாலத்தில் அழைக்கப்பட்ட வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று வைத்தீஸ்வரரையும் தையல்நாயகியையும் வணங்குகள். பிறகு முத்துக்குமார ஸ்வாமியை தரிசனம் செய்து இயன்ற அர்ச்சனை செய்யுங்கள். அதன்பிறகு அங்குள்ள முறைப்படி அங்காரகனை வழிபடுங்கள். மாதம் ஒரு செவ்வாய்கிழமையில் பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்கோ அல்லது துர்க்கை தலத்திற்கோ சென்று வணங்குங்கள். துர்க்கைதுதி, முருகன் துதிகளைக் கேளுங்கள், சொல்லுங்கள். கடன் தொல்லையால் அவதிப்படுவோர், திருச்சேறை தலத்தில் உள்ள சாரபரமேஸ்வரரையும் ருணவிமோசன லிங்கத்தையும் ஆராதிப்பது சிறந்தது. பூமிசார்ந்த சங்கடங்கள் உள்ளோர், ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமி அல்லது புதுக்கோட்டை மாவட்டம் செவலூரில் உள்ள பூமிநாதர் அல்லது திருச்சி மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதர் என்று அவரவரால் இயன்ற தலத்தில் உள்ள இறைவனை ஆராதித்துவிட்டு வருவது நல்லது. சகோதரவழியில் ஒற்றுமை இன்மையால் வருந்துவோர். சகோதரர்கள் உடல்நலனில் அக்கறை உள்ளோர் சென்னையில் உள்ள கந்தகோட்டத்திற்கோ அல்லது காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டத்திற்கோ சென்று முருகனை ஆராதித்துவிட்டு வருவது சிறந்த பலன் தரும். விபத்துக்களால் அவதியுறுவோர், பட்டீஸ்வரம் துர்க்கையை வேண்டுவதும், குறைந்தது 9 உதிரி எலுமிச்சை தந்து மாதம் ஒரு செவ்வாய்க்கிழமையிலாவது அருகிலுள்ள துர்க்கையை ஆராதிப்பதும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் கிட்டச் செய்யும்.
புதன் தோஷம்: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் பொன்னன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதுதான் ஜோதிடரீதியான பழமொழி. இதற்கு அர்த்தம், குருவின் அருளால் கோடி நன்மை கிடைக்கும் என்று இருந்தாலும், புதனின் அமைப்பு சரியில்லாவிட்டால், அந்த பாக்யம் முழுமையாகக் கிடைக்காது என்பதுதான். அதாவது கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் அதனைத் தக்க வைத்துக்கொள்வதும், அதனை நன்றாக அனுபவிப்பதும் எல்லோராலும் முடியாது. பணம் வந்தாலும் அதை முறையாகச் செலவிடவும், குறைவில்லாது அனுபவித்திடவும் புதனின் அருளும் தேவை.
புதனை புத்திகாரகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காரணம் கல்வி, கலை என்று அனைத்தையும் கற்பவர் அறிவாளி. கற்றதை முறையாகப் பயன்படுத்துபவரே புத்திசாலி. அந்தவகையில் சித்தம் குழப்பம் இன்றி சீராக சிந்திக்கவும் கணிதத்தில் சிறந்து விளங்கவும் புதனின் அனுகிரகம் அவசியம்.
மன நிம்மதி இன்மை, எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத குழப்பம், சேமிப்பதில் ஆர்வம் இன்மை, பணம் வரும்போதே செலவும் சேர்ந்து வருவது, வெளியிடத்தில் சுணக்கம், புதிய நட்புகள், அறிமுகங்களிடம் பேசுவதில் தயக்கம், பொது இடத்தில் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது, வாக்கில் பதட்டம் புதிய மாற்றங்களை ஏற்பதில் தயக்கம், கருத்துக்களைச் சொல்வதில் தேவையற்ற பயம், தோல் நோய் உபாதை இந்த மாதிரியான பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், புதனின் அமைப்பில் தோஷம் இருக்கலாம்.
புதன் தோஷத்துக்கு மிகச் சிறந் பரிகாரம் பெருமாள் வழிபாடு. குறிப்பாக திருப்பதி சென்று ஏழுமலையானை மனதார வணங்குவது மிகச் சிறந்த பலன் தரும். புதன், சிவபெருமானை வணங்கி வரம் பெற்ற தலம் திருவெண்காடு. அந்தத் தலத்திற்குச் சென்று அங்கே அருளும் ஸ்வேதாரண்யேஸ்வரரையும் அம்பாளையும் ஆராதியுங்கள். பிறகு அங்கே உள்ள அகோரமூர்த்திக்கு இயன்ற அர்ச்சனை, ஆராதனை செய்யுங்கள். அதன்பிறகு அங்குள்ள முறைப்படி நவகிரக புதனுக்கு வழிபாடு நடத்துங்கள். பச்சைப்பயறு கலந்த உணவு வகைகளை பிறருக்கு விநியோகம் செய்வது சிறப்பு. மாதம் ஒரு புதன்கிழமையில் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி சாத்தி பெருமாளையும் தாமரை மலர் தந்து தாயாரையும் வணங்குகள். புதன்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்றைய தினம் இரவில் அரிசி சேர்க்காத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பவுர்ணமி தினங்களில் நடக்கும் பெருமாள் வழிபாட்டிற்கு இயன்ற கைங்கரியம் செய்யுங்கள். பசுவுக்கு கீரை வாங்கிக் கொடுங்கள். புதனின் அனுகிரகம் உங்கள் வாழ்வை புதுமையாக பிரகாசிக்கச் செய்யும்.
குரு தோஷம்: வியாழன், ப்ருஹஸ்பதி, பொன்னன் என்றெல்லாம் போற்றப்படும் குருபகவான், நவகிரகங்கள் அனைத்திலு<ம் மிக முக்கியமானவர். காரணம் மற்ற எந்த கிரகத்தின் தோஷத்தையும் தமது பார்வையின் வலிமையால் குறைக்கவோ, முழுமையாக நீக்கவோ கூடியவர் குருபகவான் .அதேபோல மற்ற எந்த கிரகத்தையும்போல் கடுமையான பாதிப்பை ஒருபோதும் குரு ஏற்படுத்துவதில்லை.
ஒவ்வொருவர் வாழ்விலும் குருவின் பரியாயம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். அதாவது ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கும் குரு, அவரவர் பிறந்த ராசிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவார். அதனால்தான், பன்னிரண்டு வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; பன்னிரண்டு வருஷம் கெட்டவனும் இல்லை என்று ஒரு பழமொழி வந்தது. எத்தகையை கிரக தோஷத்தையும் போக்கக்கூடிய குருவே ஒருவரது ஜாதகத்தில் தோஷம் பெற்றிருந்தால்?
வழக்குகளில் இழுபறி, விலை உயர்ந்த பொருட்கள் அடிக்கடி களவுபோதல், திருமணத்தில் தடை, புத்திர பாக்யம் தாமதம், அஜீரணம், வயிறு உபாதைகள், இடதுபாக உறுப்புகளில் சங்கடம், ஞாபக மறதி, வட்டிக்குக் கடன்வாங்கும் சூழல், எல்லாவற்றிலும் ஒருவித சலிப்பு, உறவுகள் நட்புகள் மத்தியில் செல்வாக்கு குறைதல், திறமை மங்கிக்கிடத்தல் இவையெல்லாம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டால் உங்களுக்கு குருதோஷம் இருக்கிறது என்று கொள்ளலாம்.
இங்கே முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லியாகவேண்டும். நவகிரகங்களின் ஒன்றான குருவுக்குச் செய்ய வேண்டிய வழிபாட்டை சிவனின் வடிவங்களுள் ஒன்றான தட்சிணாமூர்த்திக்குப் பலரும் தவறாகச் செய்வதுதான். குருபகவானுக்கு உரிய கொண்டைக்கடலை, மஞ்சள் வஸ்திரம் இவற்றை தட்சிணாமூர்த்திக்கு சாத்தி, குரு தோஷம் விலக வேண்டுவது பலரது அறியாமையே.
நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ளவராகிய தட்சிணாமூர்த்தியை கிரகங்களுள் ஒருவரான குருபகவானாக நினைத்து வழிபடுதல் கூடாது. தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குருபகவானின் அமைப்பினால் வாழ்வில் ஏற்படும் குறைகள் நீங்கும். ஆனால், அவரை முல்லை மலர் சாத்தி, செம்மஞ்சள், பட்டு வஸ்திரம் அணிவித்து வழிபடவேண்டுமே தவிர நவகிரக குருவாக நினைத்து வணங்குதல் கூடாது.
குருதோஷம் நீங்கிடவும், குருவின் பார்வை அருளைப் பெற்றிடவும் வழிபட வேண்டிய தலங்களுள் முக்கியமானது தென்குடி திட்டை திருத்தலம். இங்கே அருளும் வசிஷ்டேஸ்வரரையும் அம்பிகையையும் வணங்கிவிட்டு பின்னர் பிராகாரத்தில் தனி சன்னதியில் அருளும் ராஜகுருவை ஆராதிப்பது அதிசிறந்தது. இங்கே குரு பகவான், தனது ஆட்சி பலம் மிக்கவராக ராஜகுருவாக காட்சியளிக்கிறார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே தனிச்சன்னதியில் காட்சி தரும் இவரை வணங்குவது சிறப்பான நற்பலன் தரும். திருச்செந்தூர் முருகப்பெருமான் ஞானகுருவாக விளங்கும் தலம். அங்கே சென்று கடலில் நீராடிவிட்டு செந்திலாண்டவரை தரிசனம் செய்யுங்கள். கோயில் விளக்கேற்ற இயன்ற அளவு பசுநெய் வாங்கிக் கொடுங்கள். உங்களால் இயன்ற பொருளை துலாபாரமாகச் செலுத்துவது சிறந்த பலன் தரும். செந்திலாண்டவரின் அபிஷேக விபூதியை தினமும் இட்டுக்கொள்வது நல்லது. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சென்று சுவாமி, அம்பாளை வணங்கிவிட்டு, பிரம்மாவை தரிசித்து இயன்ற அர்ச்சனை ஆராதனை செய்து வேண்டுவது குரு தோஷத்தை நிச்சயம் போக்கும். நவகிரக குருவின் அதிதேவதை பிரம்மாவே என்பதால் இத்தலம் வந்து குருதோஷம் நீங்க வேண்டி பிரம்மாவை வழிபடுவது சிறப்பு.
மந்திராலயத்தில் ஜீவ சமாதி கொண்டிருக்கும் ராகவேந்திர மகானை, குருதோஷம் நீங்கிட வேண்டி வணங்குவது நல்லது. அவரவர்க்குப் பிடித்த மகானையும் வணங்கலாம்.
வியாழக்கிழமைகளில் அசைவம் தவிருங்கள். அன்றைய தினம் இரவு அரிசி சேர்க்காத உணவை எடுத்துக் கொள்ளுங்கள். மாதம் ஒரு வியாழக்கிழமையில் ராகவேந்திரர் அல்லது உங்களுக்குப் பிடித்த மகானை அவசியம் வணங்குங்கள். அன்றைய தினம் ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுங்கள். குருவின் அமைப்பால் ஏற்பட்ட தோஷங்கள் பரிபூணமாக நீங்கி வாழ்வு பசுமையாகும்.